Monday, 7 September 2009

இதுதான் மலே'ஷரியா'!



இதுதான் மலே'ஷரியா'!


பீர் குடிச்சா பிரம்படி...

'பில்லா'வில் அஜீத்தும், 'குருவி'யில் வரும் 'கோச்சாவும்' மலேசியாவை மையமாகக் கொண்டு கள்ளக் கடத்தல், போதை என்று வில்லத்தனம் பண்ணுவ தாகக் காட்டுவதெல்லாம் தமிழ் சினிமாவில்தான். ஆனால், ஆங்காங்கே தலை எடுக்கும் வில்லத்தனங்களைக் கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முயன்றுகொண்டே இருக் கிறது மலேசிய அரசு.


மற்றவர்கள் விஷயத்தில் எப்படியோ... இஸ்லாமிய சமுதாயத்தினர் அப்படி இப்படி தப்பு பண்ணும்போதெல்லாம் அதிரடி புதிரடியாக தண்டனைகள் அளிக்கப்படும். இதற்கென்றே எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்கும் சிவில் மற்றும் கிரி மினல் சட்டங்களைத் தவிர, ஷரியா சட்டங்களும் அமலாக்கப்படுகின்றன. இஸ்லாமிய சமுதாயத்தினர் மதம் விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கடைப் பிடிக்கிறார்களா என்று இந்த 'ஷரியா' சட்டம் கண்காணித்துக் கொண்டே இருக்கும். மலேசியாவில் இதற்கென்றே இயங்கும் ஷரியா கோர்ட்களும், பறக்கும் படை ரேஞ்சுக்கான ஷரியா பேட்ரோல் படையும்கூட இங்கு உண்டு.


அப்படித்தான் 'பீர் குடித்தார்' என்று என்பதற்காக 32 வயது மாடல் அழகியை லபக்கென்று பிடித்து, ஆறு பிரம்படி என தண்டனை விதித்தார்கள். சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் கார்த்திகா சாரி தேவி சுகர்ணோ என்ற அந்த இஸ்லாமியப் பெண், மலேசியாவில் உள்ள செராடிங்க் பகுதியில் ஜூலை மாதம், பீர் குடித்ததற்காக 5,000 ரிங்கெட் (இந்திய மதிப்பில் சுமார் 60,000 ரூபாய்) அபராதத்தோடு, பிரம்படி தண்டனையையும் நிறைவேற்ற 'இஸ்லாமிக் அதிகாரிகள்' சுகர்ணோவை வண்டியில் ஏற்றி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். இதற்குள் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திலிருந்து 'புனித ரம்ஜான் மாதத்தில் இந்தத் தண்டனையை நிறை வேற்ற வேண்டாம்' என்று வந்த உத்தரவால் தற்காலிகமாகத் தப்பி, வீடு திரும்பி... அந்த திக்திக் நாளுக்காக காத்திருக்கிறார்.

'நேஷனல் ஃபத்வா கவுன்சில்' வெளியிடுகிற கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கென்றே சுறுசுறுவென சுற்றிக்கொண்டிருக்கும்ஷரியா கண் காணிப்புப் படையினர், நம்மூர் சிவசேனாக்காரர்கள் போலத்தான்! வித்தியாசமான மாரல் விஷயங்களை முன்வைக்கிறார்கள்.

பொது இடங்களில் கைகோத்து நிற்கும் கல்யாணமாகாத முஸ்லிம் ஜோடிகள், நைட் கிளப்களில் மது அருந்தும் முஸ்லிம்கள், பந்தயம், சூதாட்டங்களில் ஈடுபடும் முசல்மான்கள் ஆகியோரைக் கண்டிப்பதும், தண்டிப்பதும்தான் இவர்களுக்கு வேலை. ரம்ஜான் மாதத்தில், விரத நேரத்தில் உணவருந்தும் முஸ்லிம்களைப் பார்த்துவிட்டால், உண்டு இல்லை என்றாக்கிவிடுவார்கள். ஒரு முறை ஒரு அபார்ட்மென்ட்டில் ரெய்டு செய்து, கல்யாணமாகாத ஜோடிகளைக் கப்பென்று அமுக்கினார்கள்... அப்புறம் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையென்றும், அமெரிக் காவிலிருந்து வந்த கிறிஸ்துவ பார்ட்டிகள் என்றும் தெரியவந்தபோது மலேசிய அரசாங்கம் மன்னிப்புக் கேட்டது.

மதத்தின் கட்டுப்பாடுகள் அவசியம்தான் என்று உறுதியாகக் கூறும் இஸ்லாமிய அறிஞர்கள் சிலரேகூட, என்னென்ன தண்டனைகளுக்கு பிரம்படி பனிஷ்மென்ட் என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். பலாத்காரம், போதை மருந்துக் கடத்தல் ஆகியவற்றுக்கு மலேசிய கோர்ட்களே மிக கடுமையான தண்டனை கொடுக்கின்றன, பிரம்படி உட்பட!

சரி, மாடல் அழகி 'பீர்' குடித்த கதைக்கு வருவோம்... ஆகஸ்ட் 21-ம் தேதி தன்னை சந்திக்க வந்த பத்திரிகை யாளர்கள் சிலரிடம், தண்டனை குறித்துக் கருத்துச் சொல்ல உறுதியாக மறுத்துவிட்டாராம் கார்த்திகா. ''போன வருடம், ஹோட்டல் லவுஞ்சில் 'பீர்' குடித்துக் கொண்டிருக்கும்போது கையும் களவுமாக ஷரியா அதிகாரிகளிடம் பிடிபட்டீர்களா?'' என்று கேட்டபோது, கார்த்திகா சொன்னது வித்தியாசமானது -

''பிரம்படி தண்டனை சீக்கிரம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். காரணம், ஷரியா சட்டத்தை உயிராக மதிக்கிறேன்!'' என்றாராம்! கலங்கிப் போயிருந்த அவரைக் கட்டியணைத்தபடி, ''தண்டனை ஏன்தான் தள்ளிப்போகிறதோ... நாட்கள் ஓட ஓட, அந்த சிந்தனையிலேயே இவள் நிலைகுலைந்து போகிறாள்'' என்று சொல்லியிருக்கிறார் கார்த்திகாவின் சகோதரி ரத்னா. மலேசியா பார் கவுன்சிலின் தலைவரான ரகுநாத் கேசவசேனா, ''இந்தத் தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. என் கண்டனங்களை இஸ்லாமிய மதவாத அமைப்புக்கு எதிராகப் பதிவு செய்யப் போகிறேன்!'' என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள், ''முஸ்லிம் மெஜாரிட்டி நாடாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு இத்தகைய தண்டனை தருவது இந்த நவீன யுகத்தில் மலேசியாவின் மதிப்பை குறைத்துவிடும்!'' என்று கூறியுள்ளனர். மத அடிப்படைவாதிகளோ, ''குடித்ததற்காக ஒரு முஸ்லிமை மூன்று வருடம் வரை சிறை யில் வைத்துப் பிரம்படி தரலாமென்று ஷரியா சட்டம் சொல்கிறது. முஸ்லிம் அல்லாதவர்கள் குடிப்பதைப் பற்றி கண்டு கொண்டோமா? மற்றவர்கள் குடிப்பதை குற்றமாகக் கருதாத மலேசிய பொது சட்டத்தை நாங்கள் குறைதான் சொன்னோமா?'' என்று சொல்லும் இவர்கள், ''பிரம்படி தண்டிப்பதற்கு அல்ல, போதிப்பற்கே. வழக்க மாக ஆண்களை அடிக்கும் பிரம்பைவிட மெல்லிய பிரம்பைத்தான் கார்த்திகாவுக்கு பயன்படுத்துவோம். பிரம்படி கொடுக்குமிடத்தில் ஆடையைக் களையச் சொல்லி மன வேதனையும் தரமாட்டோம்!'' என்கிறார்கள்.

இப்படி ஒருபக்கம் இஸ்லாமிய அமைப்புகள் கண்டிப்புடன் கண்காணிக்க, மறுபுறமோ... பொழுது சாய்ந்தாலே போதும், தெருவெங்கும் வண்ணமயமான விழாக்கோலம்தான். கோலாலம்பூரின் கேளிக்கைப் பகுதியான பாங்க்சார் உள்பட பப், கரோக்கி, டிஸ்கோ விடுதிகள் என்று வார நாட்களிலும் ஜாஸ் மியூஸிக்கில் அதிரும் இடங்கள் நிறைய!

கர்நாடகாவில் மங்களூரில் 'பப்'புக்குள் இருந்த பெண்களைத் தாக்கி மிரட்டிய ராம் சேனா அமைப்பை நினைவிருக்கும். அந்த விவகாரம் இந்திய மீடியாக்களில் புயல் கிளப்பியதும் மறந்திருக்காது. இந்த தாக்குதலுக்குக் காரணகர்த்தாவான முத்தலிக் என்பவருக்கு எதிராக அன்றைய மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி காட்டிய வேகமும், ''பெண்களின் ஒழுக்கம் குறித்துப் பேச இந்த போலி மதவாதிகளுக்கு யார் அதிகாரம் தந்தது? பெண்ணுலகமே புறப்படு! பப் நிரப்பும் போராட்டம் நடத்துவோம்!'' என்று உரிமைக்குரல்கள் 'பீரி'ட்டன அப்போது..!

அது இந்தியா... ஆனால், இது மலேசியா!


copyright(c) vikatan.com

No comments: