Tuesday, 15 September 2009

அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!

அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!

First Published : 14 Sep 2009 12:43:08 AM IST
Last Updated :
லே (காஷ்மீர்), செப். 13: இந்திய எல்லைப் பகுதியில் சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.

லடாக் பகுதியில் சப்தமே இல்லாமல் ஆக்கிரமிப்பு பணியை அரங்கேற்றும் சீன ராணுவம், சில கட்டுமானப் பணியையும் தொடங்கியுள்ளதாக காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பகுதிக்கு இடையே உள்ள கியா மலைப்பகுதியில் சீன ராணுவம் புகுந்து சிவப்பு சாயத்தை பூசிச் சென்றதாக அண்மையில் புகார் எழுந்தது.

இதுபோன்ற நிலையில் இந்திய பகுதியில் கட்டுமானப் பணியை சீனா தொடங்கியுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே 1962-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின்னர் தற்போதுதான் இந்திய பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானப் பணியையும் சீனா தொடங்கியுள்ளதாக முதல்தடவையாகப் புகார் எழுந்துள்ளது.

லடாக்கில் காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வீரர்களை நிறுத்தவும், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் நடவடிக்கையை கண்காணிக்கக் கேமரா பொருத்தவும் சீனாவுக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த பகுதியில் கட்டுமானப் பணி செய்வதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரகோரம் மலைத்தொடர் புவியல் ரீதியாக இந்தியாவுக்கு பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஜின்ஜியாங் பகுதிக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதிக்கும் மத்தியில் இந்த காரகோரம் மலைத்தொடர் உள்ளது.

இந்த பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் உள்ளதால் இந்திய ராணுவ வீரர்கள் எப்போதுமே மிகவும் கவனமாக இருப்பர். மற்ற பகுதிகளைவிட இங்கு கூடுதல் வீரர்களும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இதையும் மீறி சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது அத்துமீறிய செயலில் ஈடுபட முயல்கின்றனர்.

சமீபகாலமாக அவர்கள் இந்திய பகுதியை துணிந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்.

சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஓய்வு பெற்ற துணை கோட்ட ஆட்சியர் நியோமாவை நியமித்தது. அவரும் எல்லைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து திரும்பிவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் நாடோடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக இந்த நாடோடி மக்களை சீன ராணுவத்தினர் மிரட்டுகின்றனர். அவர்களை இடத்தைக் காலி செய்யுமாறு அச்சுறுத்துகின்றனர். அந்த பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்றும் சீன ராணுவத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர் என்றார் நியோமா.

ராணுவம் மறுப்பு: இந்திய எல்லைப் பகுதியை சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.

எல்லைப் பகுதியில் சீனா கட்டுமானப் பணி எதையும் செய்யவில்லை. நிலத்தை தோண்டும் பணியில்தான் ஈடுபட்டுள்ளது. இந்த பணியைக்கூட அவர்களது பகுதியில்தான் செய்துவருகிறார்கள் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
(c) dinamani.com

No comments: