சீன 'டிராகனை' வெல்ல முடியுமா?
பாகிஸ்தான் பக்கம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த நமது யுத்த பேரிகைகள், இப்போது சீனாவின் திசை நோக்கி முழங்க ஆரம்பித்துள்ளன.
'இந்தியாவுக்குள் சீனப் படைகள் ஊடுருவின. லடாக் பகுதிக்குள் நுழைந்து அங்கே பாறைகளில் சிவப்பு பெயின்ட் அடித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்' என கடந்த வாரத்தில் செய்திகள் வெளிவந்தன. அதை சீனத் தரப்பு மறுத்ததில் வியப்பில்லை. ஆனால், நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சேர்ந்து மறுத்ததுதான் குறிப்பிடத்தக்கது!
லடாக் பகுதியில் மட்டுமல்ல... ஜம்மு காஷ்மீர் பகுதி யிலும்கூட அண்மையில் இரண்டு முறை சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்ததாகச் செய்திகள் வெளி யாகின. அதையும்கூட நமது ஆட்சியாளர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியா ஏன் இப்படி அடக்கி வாசிக்கவேண்டும்?
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே யுத்தம் நடந்து சுமார் அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. ஆனால், இரு நாட்டுக்கும் இடையிலான உறவு சீரடையவில்லை. அதேசமயம், மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு சீனா இணக்கமான உறவைப் பேணி வருகிறது. நேபாளமும் கொஞ்சகொஞ்சமாக சீனாவிடம் ஒட்டி உறவாடுகிறது. இலங்கை அரசோடு சீனாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கமும் அண்மை யில் அங்கு நடைபெற்ற தமிழின அழிப்புப் போருக்கு சீனா அளித்த ஆதரவும்கூட நமக்குத் தெரிந்ததுதான்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவைச் சுற்றி சீனா வின் செல்வாக்கு மண்டலம் நாளுக்குநாள் பலமடைந்து வருகிறது.
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 3,500 கிலோமீட்டர் தூரம்கொண்ட எல்லைப் பகுதி இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை எது என்பது பல காலம் வரை துல்லியமாக வரையறுக்கப்படாமலே இருந்தது. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், 1914-ம் ஆண்டு இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப் பட்டதுதான் 'மக்மேஹன் கோடு' என்பதாகும். ஆனால், அந்த ஒப்பந்தத்தையும் எல்லைக்கோட்டையும் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து, இந்தியாவுக்கு சொந்தமானதென்று அதுவரை நம்பப்பட்டு வந்த அக்சாய்சின் பீடபூமிப் பகுதியை சீனா, தனக்கு சொந்தமானதாக அந்த தேசப் படத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்திய அரசு அதற்கு எதிர்ப்புக் காட்ட... வரைபடத்தில் ஆக்கிரமிப்பு
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 1962-ம் ஆண்டில் இரு நாட்டுக்கும் முழுமையான யுத்தமாக வெடித்தது. சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து, சுமார் 15 ஆயிரம் சதுர மைல் பரப்பளவை கைப்பற்றின. அருணாசலப் பிரதேசத்தில் இருந்த இந்திய காவல் அரண்களையும் அவர்கள் அழித்துவிட்டார்கள். அதற்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக தனது படைகளை சீனா வாபஸ் பெற்றுக்கொண்டது.
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய அவமானமாக வர்ணிக்கப்படும் அந்தத் தோல்வியிலிருந்து இந்தியா இன்னும்கூட பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வேதனை. 1962 போருக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக, அவற்றுக்கிடையே எல்லைக்கோடு ஒன்று வரையறுக்கப்பட்டது. ஆனால், இப்போதும்கூட சீனா இந்தியாவுக்கு சொந்தமான 5,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகொண்ட நிலப்பரப்பைப் பிடித்து வைத்திருப்பதாக இந்தியா 'சாத்வீகமாக' குற்றம் சாட்டி வருகிறது. சீனாவோ தனக்கு சொந்தமான 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை அருணாசலப் பிரதேசப் பகுதியில் இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக அபாண்டமாகப் பழி சுமத்தி வருகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டு, இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், ஆசியப் பிராந்தியத்தில் வேறு யாரும் மூக்கை நுழைக்க முடியாது என்ற யோசனையைப் பலரும் இப்போது தெரிவித்து வருகிறார்கள். இந்திய அதிகாரவர்க்கத்திலும்கூட இந்த யோசனையை ஆமோதிக்கும் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ் அதில் முக்கியமானவர். சீனாவையும் இந்தியாவையும் சேர்த்து 'சிந்தியா' என்று ஒரு புதிய ஃபார்முலாவை அவர் உருவாக்கினார். இந்தியாவும் சீனாவும் சேர்ந்து செயல் பட்டால், மிகப்பெரிய பொருளாதார சக்தியாக அவை உருப்பெறுவது மட்டுமின்றி, ராணுவரீதியிலும் பலமான கூட்டணியாக அது இருக்கும் என்பது அவரது கணிப்பு. அது மறுக்க முடியாத உண்மை என்றாலும்கூட, அப்படியரு கூட்டணி ஏற்படுவதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இந்த எல்லைப் பிரச்னை.
இந்திய - சீன உறவு பலமடையக் கூடாது என்பதில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உறுதியாக இருக்கின்றன. ஆனால், இந்திய - சீன உரசல்கள் எல்லாவற்றுக்குமே நாம் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்முடைய வெளியுறவுக் கொள்கை தெளிவாக இல்லாத வரை, இப்படியான நெருக்கடிகளை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும். சீனாவோடு போட்டி போட்டுக்கொண்டு நமது அண்டை நாடுகளில் இருக்கும் அடக்குமுறை ஆட்சிகளை நாம் ஆதரிக்க முயல்வது, வம்பை விலை கொடுத்து வாங்கும் செயலாகும். அந்த நாடுகளின் மக்கள், ஜனநாயகத்துக்காக ஏங்குகின்றனர். அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறி, அங்கெல்லாம் ஜனநாயக ஆட்சிகள் ஏற்பட்டுவிட்டால்... அவை தாமாகவே சீனாவின் செல்வாக்கிலிருந்து வெளியேறிவிடும். இதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தி யாவோடு ஒப்பிட்டுப் பேசுகிற நிபுணர்கள் பலரும், சீனாவில் இருக்கும் அதிகாரத்துவ அரசமைப்புதான் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்று சொல்கிறார்கள். 'சீனாவில் ஒரு அதிவிரைவு நெடுஞ்சாலையை அமைக்கவேண்டுமானால், அந்த புராஜெக்ட்டுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தி சுலபமாக அதை சீன அரசு செய்துவிடும். ஆனால், அதே திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்ற வேண்டுமானால் ஏகப்பட்ட தடைகள்! நிலத்தைக் கொடுக்க முடியாது என்று அவரவரும் கோர்ட்டுக்குப் போய்விடுவார்கள்' என அந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது சீனாவுக்கு பெருமை சேர்ப்ப தாகக் கருதமுடியாது. இதுவொரு ஆபத்தான வாதம். சீனாவைப் போல இந்தியாவும் அதிகாரத்துவ நாடாக மாறவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் இந்த வாதம், அடிப்படையில் தவறானதும்கூட.
சீனாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அடக்குமுறை அல்ல... அந்நாட்டில் அடிப்படை வசதிகள் அடித்தட்டு மக்களையும் மனதில்கொண்டு சிறப்பாக நிறைவேற்றப் படுவதுதான். நம்முடைய ஆட்சியாளர்கள் ஒரு சில பணக்காரர்களை மட்டுமே மனதில்கொண்டு திட்டங்களை உருவாக்குகிறார்கள்.
இந்திய-சீன எல்லைப் பிரச்னையும், அவற்றுக் கிடையிலான பொருளாதாரப் போட்டியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, இந்திய அரசு எதைத் திட்டமிட்டாலும் ஒருங்கிணைந்த முறையிலேயே திட்டமிட வேண்டும். ராஜீவ்காந்தி இருந்தபோது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு இந்த விஷயத்தில் நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். அதைப் பின்பற்ற மன்மோகன் சிங் முன்வர வேண்டும்.
இப்படியே விட்டால், சீனா பற்றிய சிந்தனை நம்மை எல்லா நேரமும் அரித்துக்கொண்டேதான் இருக்கும்!
copyright(c) vikatan.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment