Monday, 7 September 2009

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம்

செப். 6: சமீபத்திய ஹெலிகாப்டர் ஊடுருவலைத் தொடர்ந்து சீன ராணுவம் சர்வதேச எல்லைக் கோட்டை மீறி லடாக் பிராந்தியத்தில் நுழைந்து அங்குள்ள மலைப் பகுதிகளில் பாறைகளில் சிவப்பு வண்ணத்தை பூசியுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கியா மலைப் பகுதி சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சீன ராணுவம் சுமார் 1.5 கி.மீ. தொலைவு ஊடுருவி பாறைகளில் சிவப்பு வண்ணத்தை ஸ்பிரே செய்து, அதில் சீனா என்று எழுதிவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.

22,420 அடி உயரமுள்ள கியா மலை, "பனிமலைகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், இமாசல மாநிலத்தின் ஸ்பைடி, திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் எல்லை வரையறை செய்யப்பட்டு இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடாக நிர்ணயிக்கப்பட்டது.

ஜுலு லாங் கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தை பூசியதுடன் அதன் மீது சீனா என்று எழுதியுள்ளனர். இதை கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி இந்திய எல்லை ரோந்துப் படையினர் கண்டறிந்துள்ளனர்.

சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கை இந்திய அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவி சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கு பாறைகளில் சிவப்புச் சாயத்தை பூசியுள்ளது இதுவே முதன்முறையாகும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறி கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே இந்திய வான்வெளியில் பறந்ததுடன் காலாவதியான உணவுப் பொட்டலங்களையும் கீழே வீசியுள்ளன.

ஏற்கெனவே இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இரு நாடுகளும் இது தொடர்பாக வரைபடங்களைப் பரிமாறிக்கொண்டும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் சீன ராணுவத்தின் இந்த அத்துமீறல் இந்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments: