Tuesday 8 September, 2009

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

First Published : 08 Sep 2009 12:05:03 AM IST

மும்பை, செப்.7: மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் கசாப், சிறைச்சாலையில் தனக்கு பாஸ்மதி அரிசிச் சோறும் பிரியாணியும் வேண்டுமென்று அடம் பிடிக்கிறார். தற்போது கசாப், ஆர்த்தர் சாலை மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் மட்டன் பிரியாணி வேண்டுமென்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் மசாலா உணவும், பாஸ்மதி அரிசிச் சோறும் வேண்டுமென்று தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விரும்பும் உணவு தரப்படவில்லையெனில் மிகுந்த கோபமடைவதுடன், சிறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை என்று சிறைத் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரா தாம்னே திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த சில தினங்களாக கசாப் சிறையில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார். தனக்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட மறுக்கிறார். நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உரிய நேரத்தில் உடையணிவதில்லை. அவரை கவனித்துக் கொள்ளும் சிறைத் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. கசாபின் முரட்டுத்தனம் குறித்து மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறைத் துறை அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

சிறைச்சாலை விதிகளின்படிதான் அனைத்து சிறைவாசிகளுக்கும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது என்றார் தாம்னே. கசாபின் முரட்டுத்தனம் குறித்து நீதிமன்றம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. ஆயினும் கசாபின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக அவரை நீதிமன்றம் முன்பே எச்சரித்துள்ளது. ஒழுக்கமாக நடக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கசாப்பின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதி எம்.எல்.தஹாலியானி கண்டிக்கும்போதெல்லாம் கசாப் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார். சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள். சிறையில் கசாப் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், கசாபின் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது அறையைச் சுற்றிலும் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

dinamani.com

No comments: