Monday 22 September, 2008

அருணகிரியின் திண்ணைக்கட்டுரை

Thursday September 11, 2008
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
அருணகிரி
2
"What Wahab did was leave behind the seedbed of total intolerance in which today's terror masters could plant the young seedlings before turning them into killers."
- From 'The Afgan" by Frederick Forsyth

வஹாபியிசம் வேர்கொண்டது:

சவுதியின் வஹாபிப்படைகள் துருக்கி மன்னனால் வெல்லப்பட்டு சவுதி மன்னன் கொல்லப்பட்டு ஏறத்தாழ 90 ஆண்டுகளில் துருக்கியின் ஆட்டோமான் பேரரசு தன் அந்திமக்காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. 1902-இல் அல்-சவுத் சந்ததியில் வந்த அப்துல் அசிஸ் சவுதியின் தலைநகரான ரியாத்தை ஒரு கலகத்தின் மூலம் எளிதாகக் கைப்பற்றினார். அதன் பின் பல சிறு போர்கள் மூலம் அப்துல் அசிஸ் சுற்றியிருந்த பல பகுதிகளை வென்று வஹாபி அரசை மீண்டும் நிலைநாட்டினார். பிற மதத்தினருக்கு மட்டுமல்ல, இஸ்லாத்தின் பிற பிரிவினருக்கு முகமன் சொல்வது கூட இவர்களால் மறுக்கப்பட்டது. ஷியாக்கள் அதிகமாக வசித்த சவுதியின் வளைகுடாப்பகுதியை அவர் வென்றபோது, கறுப்புத் தங்கமென எதிர்காலத்தில் அறியப்படப்போகும், மாபெரும் எண்ணெய் வளம் நிரம்பிய பகுதிக்கு அதிபராகியிருப்பதை அப்தல் அசிஸ் அன்று அறியவில்லை.

முதல் உலகப்போருக்குப்பின் துருக்கியில் காலிபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையைப்பயன்படுத்தி சவுதி மன்னர் அப்தல் அசிஸ் ஜோர்டானைக் கைப்பற்ற செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் வஹாபியப் படைகள் மெக்காவிற்கு அருகில் உள்ள தாயெஃப் என்ற இடத்தை கொடூரமாகத் தாக்கினர். நூறாண்டுகளுக்கு முன் காபாலா தாக்குதலில் வஹாபிக்கள் செய்த அட்டூழியங்கள் அனைத்தும் - கர்ப்பிணிப்பெண்களின் வயிறு கிழிததுக் கொன்ற கொடூரம் உட்பட- தாயெஃப் நகர அழிப்பிலும் இடம் பெற்றன. 1920-களின் இறுதியில் சவுதி அரேபியா முழுமையும் - இஸ்லாமிய புனித தலங்களான மெக்கா மெதீனா உட்பட- அப்தல் அசிஸின் கீழ் வந்தது. இந்நிலையில், புனித தலங்களுக்கான (ஷியா உள்ளிட்ட) அனைத்து முஸ்லீம்களின் யாத்திரைக்கும் உத்தரவாதம் தர வேண்டிய பொறுப்பும் அவசியமும் இப்போது சவுதி மன்னருக்கு ஏற்பட்டது. மேலும் ஜோர்டான், ஈராக், குவைத் போன்ற பகுதிகள் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்தன. அன்றைய வல்லரசான பிரிட்டனோடு போரைத்தவிர்க்க வேண்டி, அப்தல் அசிஸ் பிற மத்திய கிழக்கு நாடுகளின் மீதான் போரை நிறுத்திக்கொண்டார். ஆனால் அவரது முந்தைய சகாக்களான தீவிர வஹாபிக்கள் இதனை துரோகச்செயலாகக் கண்டு, ஈராக்கைத் தாக்கத் தொடங்கினர். பிரிட்டனின் உதவியுடன் சவுதி மன்னர் இவர்களை அழிக்கலானார். 1929-இல் நடந்த இறுதிப்போரில், இந்த தீவிர வஹாபிக்களின் தலைவனான பிஜாத் சிறைப்பிடிக்கப்பட்டான். அவனோடு போரிட்டு உயிர்பிழைத்த முகமது பின் செய்ஃப் அல் உத்தய்பி என்பவனுக்குப் பிறந்த மகன்தான் பின்னாளில் மக்கா மசூதியைக் கைப்பற்றப்போகும் ஜுஹைமான் அல் உத்தய்பி.

1938-இல் சவுதியின் முதல் எண்ணெய்க்கிணறு அமெரிக்க கம்பெனி அராம்கோவினால் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப்பின், விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், கட்டிடக்கலைஞர்கள் என ஏகபட்ட அமெரிக்கர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இது வஹாபிய மதத்தலைவர்களின் கோபத்தைத் தூண்டியது. இஸ்லாமிய இறையியலில் தேர்ச்சி பெற்ற, மதவாதிகளிடம் செல்வாக்கு மிகுந்த பின் பாஜ் என்ற இஸ்லாமிய மதத்தலைவர் இதனை எதிர்த்து, மக்கா மதீனா மட்டுமல்லாமல் அரேபியா முழுமையுமே இஸ்லாமியரல்லாதோர் காலடி வைக்கக்கூடாத புனித பூமி என்று ஒரு ஃபாட்வாவைப் பிறப்பித்தார். (இன்றும் அல் க்வைதாவும் பின்லாடனும் இதனை அடிப்படையாக வைத்தே சவுதி அரசை எதிர்க்கிறார்கள்).இந்த பின் பாஜ் பிற்காலத்தில் சவுதியின் தலைமை முல்லாவாக உயர்வார். 'பூமி தட்டை வடிவம்தான் என்றும் அதனை மறுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நாத்திகர்கள்' என்றும் இவர் விடுத்த ஃபாட்வா, இவரது பல ஃபாட்வாக்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .
எண்ணெய் வளம் குவியக் குவிய மக்கா மசூதி பெருமளவில் விரிவுபடுத்தப்படத்தொடங்கியது. மக்கா மசூதி விரிவாக்கத்தில் கட்டிடக் காண்ட்ராக்டரான முஹமது பின் லாடன் பெரும்பங்கு வகித்தார். மதத்தலைவர் பின் பாஜ் அவர்களின் செல்வாக்கும் அதிகரித்தது. பின்பாஜின் மதக்கல்லூரியில் கார்ப்போரலாக உயர்ந்த ஜுஹைமான் பின்பாஜுக்கு அறிமுகமானவனாகவே இருந்தான். இப்படி இந்த இஸ்லாமியக்கல்லூரியில் வஹாபிக் கல்வி பெற வந்த ஒருவன்தான், மெக்கா ஆக்கிரமிப்பில் முக்கியப்பங்கு வகிக்கப்போகும் முஹம்மது அப்துல்லா. ஜுஹைமான் முஹம்மது அப்துல்லாவிடம் இஸ்லாமிய மாஹ்டிக்கான பல குணாம்சங்கள் பொருந்தி வருவதைக்கண்டான். (இஸ்லாத்தின் மாஹ்டி இறையியல் குறித்து பின் குறிப்புகளில் மேலதிக விவரங்கள் உள்ளன). தன்னைப்போலவே முஹம்மது அப்துல்லாவும் சவுதி அரசின் மீது அதிருப்தி கொண்டிருந்தது ஜுஹைமானுக்கு வசதியாகிப் போனது. மெக்கா மசூதியைக் கைப்பற்றும் திட்டத்தில் முஹம்மது அப்துல்லா மாஹ்டியாக ஒரு முக்கிய அம்சமாக ஆனான். ஜுஹைமானும் முஹம்மது அப்துல்லாவும் நெருங்கிய நண்பர்களாயினர். ஜுஹைமான் தன் முதல் மனைவியை விவாக ரத்து செய்து விட்டு முஹம்மது அப்துல்லாவின் சகோதரியை மணந்து கொண்டான்.

எகிப்தில் நாசர் பதவிக்கு வந்ததும் அராபிய நிலப்பரப்பில் வாழ்ந்த அனைவரையும் (முஸ்லீம் அல்லாதவரையும் சேர்த்து) அராபிய தேசியவாதம் என்ற பெயரில் மதச்சார்பற்ற அணியில் திரட்ட முற்பட்டார். இது மதவாத சவுதியை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே இதற்கு எதிராக உலகளாவிய இஸ்லாமிய உம்மா உருவாக்கப்பட வேண்டும் என்று சவுதி அரசு பிரசாரிக்கத் தொடங்கியது. பெருகி வரும் எண்ணெய்ப்பணமானது, பல இஸ்லாமிய நாடுகளிலும் உலகளாவிய உம்மா என்ற பெயரில் எல்லைதாண்டிய இஸ்லாமிய மதவாதத்தை வளர்க்க வாரியிறைக்கப்பட்டது. மத்திய கிழக்கில் மத அடிப்படைவாதம் குறைந்திருந்த நாடுகளை எதிர்க்க அன்று உருவான முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்ற அமைப்பு எகிப்திலும் சிரியாவிலும் தடை செய்யப்பட, சவுதி மன்னர் ஃபய்ஸல் (King Faizal) இந்த அமைப்புக்கு அடைக்கலம் தந்தது மட்டுமன்றி இவர்களை சவுதியின் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் பெரும் சம்பளத்தில் வேலைக்கும் அமர்த்தினார். இதில் படித்த பல மாணவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகளாக பிற்காலத்தில் உருவெடுத்தனர். அப்படி அங்கு படித்த ஒருவன்தான் சவுதி கட்டிட காண்ட்ராக்டர் முகமது பின் லாடனின் மகனான ஒஸாமா பின் லாடன்.

சவுதி மன்னர் ஃபய்சல் சவுதியில் பல மாற்றங்களைக் கொணர்ந்தார். 1962-இல் அடிமை முறையை சட்ட விரோதமாக்கினார். 1963-இல், பெண் கல்வியை அனுமதித்தார். இச்செயல்கள் பிற்போக்கு மதவாதத் தலைவர்களிடம் அதிருப்தியை படிப்படியாக அதிகரிக்கச் செய்தது. 1965-இல் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது சவுதியில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. தொலைக்காட்சியில் மனித பிம்பங்கள் தெரிவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் தொலைக்காட்சி சைத்தானின் வடிவம் என்றும் மதவாதிகள் தெருக் கலவரத்தில் இறங்கினர். மன்னரின் உறவினரே பங்கெடுத்த இந்தக்கிளர்ச்சி கடுமையாக அடக்கப்பட்டு அந்த உறவினர் கொல்லப்பட்டார். 10 வருடம் கழித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் இறந்தவரின் சகோதரனால் மன்னர் ஃபைசல் படுகொலை செய்யப்பட்டார்.

உள்ளுறை முரண்கள்:

இந்த இடத்தில் சவுதி அரேபியாவின் உள்ளுறை முரண்பாடுகளைக் கவனிக்கலாம்.

1. சவுதி அரசுக்கான அங்கீகாரமும் சவுதி மீதான அல்-சவுத் பரம்பரையினரின் மேலாண்மையும் மக்கா மதீனா ஆகிய புனித தலங்களின் காப்பாளர்களாவதற்கு ஏற்றவர்கள் இவர்கள் என்ற அடிப்படையில் வந்ததாகும்.

2. இந்த புனித தலங்கங்களை நிர்வாகம் செய்யும் உரிமையை அல்-சவுத் பரம்பரையினர் பெற்றது, இவர்கள் முன் வைத்த தீவிர வஹாபிய அடிப்படைவாதத்தின் மூலம். (அல்-சவுத் பரம்பரை அப்தெல் வஹாபின் அடிப்படைவாதத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க). .

3. ஆக, இஸ்லாமிய அடிப்படையிலிருந்து விலகுவது என்பது அல்-சவுத் மன்னர் பரம்பரைக்கு மெக்கா மெதீனா உள்ளிட்ட (எண்ணெய் வளம் கொழிக்கும்) நிலப்பகுதியை ஆளும் உரிமையை இழப்பதற்கு ஒப்பாகும்.

4. ஆட்சியைத் தக்கவைக்க முல்லாக்கள், மதத்தலைமைகள் ஆகியோரின் அங்கீகாரம் சவுதி மன்னர் பரம்பரைக்கு அத்தியாவசியமான ஒன்று.

5. எனவே வஹாபிய இஸ்லாத்தின் அடிப்படைவாதம், அல்-சவுத் பரம்பரையினரின் ஆட்சி, இந்த ஆட்சிக்கு முல்லாக்களின் அங்கீகாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாகி, ஒன்றுக்கொன்று உரமாகி வளர்ந்திருக்கின்றன.

6. சவுதியின் எண்ணெய் வளத்திற்கு நவீன கல்வியறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மிக அவசியம். ஆனால் நவீன அறிவியல் கூறுகள் பல இஸ்லாத்துக்கு எதிராக வேறு இருப்பதால் மதத்தலைமை இவற்றை அங்கீகரிக்க முடியாது (கவனிக்க: தலைமை முல்லா பின் பாஜின் பூமி தட்டை வடிவம் என்கிற ஃபாட்வா). நவீன உயர்கல்வியறிவோ ஆராய்ச்சியறிவோ தொழிற்கல்வியறிவோ சவுதி அரேபியரிடம் பரவச்செய்யும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்ற நிலையில் இதற்கு மேற்கு நாடுகளையும், இந்தியா போன்ற நாடுகளையும் சவுதி அரேபியா சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை அறிவுத்துறைகள் மட்டுமன்றி திறன் உழைப்பு (skilled labor), உடல் உழைப்பு (manual labor) என பல துறைகளுக்கும் விரிந்தது. பொருளாதார வளர்ச்சியில் அவசியமாகிப்போன பல தொழிலாளிகளை (கட்டிடத் தொழிலாளி, தாதிகள் , காரோட்டுனர் இத்யாதி) பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை சவுதிக்கு ஏற்பட்டது.

7. இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்கள் என்றாலும், இவர்கள் எல்லோரும் வஹாபிக்களோ சுன்னிக்களோ இல்லை. இது மட்டுமல்லாமல், காஃபிர்களான இந்துக்களின் பங்களிப்பும்கூட - அன்றாட வேலைகளில் மட்டுமல்லாது தகவல் தொழில்நுட்பம், கருவியியல் துறை, மின்னணுவியல் போன்ற அறிவுத்துறைகளிலும் அதிகம் தேவைப்பட்டது. ஆக, "வழி தவறிய" வழிபாட்டாளர்களும் , காஃபிர்களும் இல்லாது தமது ஒரே இறைவன் அளித்த எண்ணெய்ச் செல்வத்தைக்கூடத் துய்க்க முடியாது என்ற இக்கட்டான முரண் நிலை சவுதியின் மதவாத அரசுக்கு உண்டாகிப் போனது.

8. இந்த முரண்பாட்டை சவுதியின் முல்லாக்கள் மிகச்சரியாக உபயோகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர். முஸ்லீம் அல்லாத பிற மக்களால் "களங்கப்படும்" புனித நிலத்தை சவுதி மன்னர் தொடர்ந்து அரசாள வஹாபிய மதத்தலைமையின் ஆசீர்வாதம் தேவையாக இருந்தது. சவுதி அரசுக்கு தமது ஆசீர்வாதம் தொடர, மன்னருக்கு சமமாக அமர்ந்து பேசும் அளவுக்கு தலைமை முல்லாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு சக்தி வாய்ந்ததொரு அதிகார பீடமாக வஹாபியத் தலைமை உருவெடுத்தது. எண்ணெய்ப்பணத்தைக் கொண்டு இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு வஹாபிய அடிப்படைவாதமும் பிறமதக் காழ்ப்பும் ஒருங்கே கலந்து ஊட்டப்பட்டன. இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மதவாதிகளுக்கும் பெருமளவு முக்கியத்துவமும் அதிகார பலமும் பண பலமும் இத்தகைய பல்கலைக்கழகங்கள் ஒருங்கே தந்தன.

9. அன்றைய பனிப்போர் யதார்த்தத்தில், இஸ்ரேலுக்கு எதிராகவும் கம்யுனிச சோவியத்திற்கு எதிராகவும் ஜிஹாதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக சவுதியின் இஸ்லாமிய பல்கலைகள் வடிவெடுத்தன. அமெரிக்காவிற்கு அன்று இவை எதிர்க்கப்பட வேண்டியவைகளாகத் தோன்றாதது மட்டுமல்ல- சோவியத்தின் ஆதிக்கப்பரவலுக்கு எதிரான அவசிய அரணாகவும் தெரிந்தது.
10. வஹாபிய அடிப்படைவாதம் மூலம் சவுதி அரசைக் கட்டமைத்த அல்-சவுத் பரம்பரை; சவுதியின் எண்ணெய் வளத்திற்குத் தேவைப்படுகின்ற - ஆனால் "இஸ்லாத்திற்கு எதிரான" - சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டிய சவுதி அரசின் நிலை; இவ்வாறு செயலாற்றும் அரசுக்கு அங்கீகாரம் தர அடிப்படைவாத முல்லாக்களின் ஆதரவு; அந்த ஆதரவை நிலைநிறுத்த வேண்டி வஹாபிய அடிப்படைவாத கல்விப் பரவலுக்கு எண்ணெய்ப்பணத்தை வாரியிறைக்கும் சவுதி அரசு - இப்படியாக பல முரண்பட்ட கூறுகள் ஒன்றோடொன்று சார்ந்த ஒட்டுண்ணிகளாய் வெகு விரைவாக சவுதியில் வளர்ந்து கொண்டு வந்தன.

நெகிழ்ச்சியான ஒரு சமூக அமைப்பில் உள்ளுறை முரண்பாடுகள் சமூகச் சக்கரத்தை முன்னிழுக்கும் உராய்தல் சக்தியாகின்றன. ஆனால் சவுதி போன்ற இறுக்கமான கட்டமைப்புகளிலோ இத்தகைய உள்ளுறை முரண்பாடுகள் பெரும் விரிசல்களாகி சமூகத்தையே உடைத்துப் போடுகின்றன. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்ட கால கட்டத்தில் சவுதியின் அடிப்படைவாத சமூக அமைப்பில் ஏற்பட்டிருந்த அழுத்தங்கள் பல விரிசல்களை உருவாக்கி தவிர்க்க முடியாத ஒரு பெரும் உடைப்பை நோக்கி சவுதி சமூகத்தை இட்டுச் சென்று கொண்டிருந்தன. இதனை விரைவுபடுத்தும் விதமாக இஸ்லாமிய வருடம் 1400 முஹர்ரத்தின் முதல் நாளன்று - 1979 நவம்பர் 20ஆம் தேதி- ஜுஹைமான் உத்தய்பி மெக்கா மசூதிக்குள் தன் படையுடன் ரகசியமாகப் புகுந்து அதனைக் கைப்பற்றினான்.

அடுத்து: உடனடி விளைவுகள்

(தொடரும்)

No comments: