Thursday September 25, 2008
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
அருணகிரி
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
"...These are the back-to-the-beginning brigade. They really want to restore the great golden age of Islam. Back to the first four caliphates, over a thousand years ago... There is no such earthly paradise, ofcourse, but fanatics were never deterred by unreality"
- From 'The Afgan" by Frederick Forsyth
மசூதிப்போர்
மசூதி ஆக்கிரமிப்பின் தொடக்கத்தில் மசூதியில் மாட்டிக்கொண்ட ஹஜ் பயணிகள் குழம்பிப்போயிருந்தனர். இவர்களில் அரபி தெரியாத பலருக்கும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே புரியாத நிலை வேறு. இந்நிலையில், முஹமது அப்துல்லா ஹதீதுகளில் உள்ளபடி காபாவின் அருகில் துப்பாக்கியுடன் தோன்றி, ஹதீதுகளில் கூறப்பட்டுள்ள மாஹ்டியாக தன்னை அறிவித்தான். ஷியா பிரிவைச் சேர்ந்தவனா என்ற கேள்விக்கு உறுதியாக இல்லை என்று பதிலுரைத்தான். இதன் பின் ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரிடமும் விசுவாசப் பிரமாணம் வாங்கப்பட்டது. பின்னர் பலரும் விடுவிக்கப்பட்டனர்.
ஜுஹைமானின் ஆக்கிரமிப்பு ஆரம்பத்திலேயே அனாவசிய உயிரிழப்பில் தொடங்கியது. மசூதிக்குள் இருந்த ஹஜ் பயணிகளின் கவனத்தைக் கவர மேல் நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு ஒன்று வழவழப்பான சுவர்களில் பட்டு திசை திரும்பி ஜுஹைமானின் போராளி ஒருவர் மீதே பாய அது ஆக்கிரமிப்பின் முதல் உயிரிழப்ப்பானது. அவ்வாறு இறந்தவர் மாஹ்டியாக தன்னை அறிவித்துக்கொண்ட முஹமது அப்துல்லாவின் மாமனார்!
மசூதிக்கட்டிடம் பாதிக்கப்படாமல் மசூதி முற்றுகையை முறியடிக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பல முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டன. மாஹ்டி தோன்றி விட்டார் என்பது உண்மையானால் அவரை எப்படி எதிர்ப்பது என்றும் புனித மெக்கா மசூதியில் ரத்தம் சிந்துவதா என்றும் பல இஸ்லாமியப் படைவீரர்கள் தயங்கினர். இந்தப்படைகளுக்கு தலைமைப் பொறுப்பிலிருந்த இளவரசர் புனித மசூதியைக் காக்கும் போரில் இறப்பவர்களுக்கு உடனே சுவனம் கிடைக்கும் என்று கறாராக அறிவித்து, தயங்கிய வீரர்களை போருக்கு அனுப்பினார். இவ்வாறு அனுப்பப்பட்ட வீரர்களில் பெரும்பாலோர் மசூதி வாசலை அடையுமுன்னரே உயரமான மினாரெட்டுகளில் ஒளிந்து கொண்டு தாக்கிய ஜுஹைமானின் படையால் எளிதாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். மசூதிக்குள் நுழைந்து சண்டையிடவோ கவச வண்டிகளின் மூலமும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தவோ சவுதி அரசுக்கு மதத்தலைமையின் ஒப்புதல் தேவைப்பட்டது. இதற்காக பின் பாஜின் அனுமதியைப் பெற வேண்டி, அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, முல்லாக்களுடன் பல மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வஹாபி இறுக்கத்தை மேலும் நெருக்க இதனை அருமையான சந்தர்ப்பமாகக் கண்ட பின்பாஜ், வஹாபிய அடிப்படைவாதத்தை வலுப்பெறச்செய்யும் பல் கோரிக்கைகளை முன் வைத்து பேரத்தைத் தொடக்கினார். இந்த பேரத்தின் விளைவாக மன்னர் ஃபைசல் தொடங்கிய , பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு அனுமதி தரப்பட்டது உட்பட்ட சீர்திருத்தங்கள் பலவும் திரும்பப் பெறப்பட்டன. சவுதியில் மட்டுமே கற்றுத்தரப்பட்ட கடுமையான அடிப்படைவாத வஹாபி இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் விதத்தில், உலக மதராஸாக்களுக்கு நிதி உதவி செய்வதற்கும், பல நாடுகளில் இருந்தும் முஸ்லீம்களை சவுதிக்கு வரவழைத்து கடுமையான வஹாபி இறையியலில் பயிற்சி அளிப்பதற்கும் எண்ணெய்ப் பணத்தை வாரி இறைக்க சவுதி அரசு ஒப்புக்கொண்டது. உலகெங்கும் ஜிஹாதி தொழிற்சாலை நிறுவ நிதியுதவி செய்யும் நாடாக சவுதி அரேபியா இன்று ஆகியிருப்பதற்கான விதை அன்று பின்-பாஜுடனான பேச்சு வார்த்தையின் முடிவில் விதைக்கப்பட்டது. இளகத் தொடங்கியிருந்த ஒரு இடைக்கால இருண்ட சமுதாயம் மீண்டும் மதவாத இருட்டில் சரிந்து இறுகத்தொடங்கியதும் அன்றைய தினத்தில்தான். 1979 நவம்பர் 23, வெள்ளிக்கிழமை மாலை பேரம் முடிந்த போது ஜுஹைமானின் மசூதி ஆக்கிரமிப்பு தொடங்கி மூன்று நாட்கள் முடிந்திருந்தன.
இந்தப் பேரத்தின் விளைவாக, மக்கா மசூதி ஆக்கிரமிப்பானது மார்க்கத்திற்கு எதிரானது என்றும் அதனை விடுவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் பின்-பாஜின் மதத்தலைமை ஃபத்துவா விதித்து அறிவிப்பு விடுத்தது. இதற்கு ஆதரவாக "அவர்கள் உங்களோடு போரைத்துவங்கும் வரை நம்பிக்கையற்றோருடன் புனித மசூதியில் போரிடாதீர்கள்; அவர்கள் போரிடத்துவங்கினால் அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்" என்ற குரான் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டன. இவை முஸ்லீம்கள் அல்லாதோருக்குத்தான் ("நம்பிக்கையற்றோர்") பொருந்தும் என்றாலும் நம்பிக்கையற்றவர் போல நடந்து கொண்ட ஜுஹைமான் படைகளும் முஸ்லீம்கள் அல்லாதோராகவே கருத்தப்படுவர் என்று சவுதி மதத்தலைமை விளக்கம் அளித்தது. இந்த விளக்கமே பிற்காலத்தில் அமெரிக்க நட்பு முஸ்லீம் நாடுகளின் மேல் - சவுதி அரசு உட்பட- ஜிஹாதியத் தாக்குதல் தொடுக்க வஹாபி ஜிஹாதிகளாலும் அல்-க்வைதாவாலும் வசதியாக உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது.
ஜுஹைமான் போன்ற தீவிர முஸ்லீம் ஒருவனையே அவனது செயல்களின் அடிப்படையில் அவநம்பிக்கையாளன் என்று சொல்ல முடியும் என்றால், கிறித்துவ மேற்குடன் நட்பு பாராட்டும் முஸ்லீம் நாடுகளுக்கும் இது பொருந்தும் என்பதே பயங்கரவாத ஜிஹாதிகள் தரப்பு வாதமாக ஆனது. (இந்த விளக்கத்திற்கே முன்பே இப்படித்தான் நிலைமை இருந்தது என்றாலும், சவுதி மதத்தலைமையே இந்த விளக்கத்தை குரானை அடிப்படையாக்கிச் சொன்னது, இதற்கு மத அங்கீகாரம் த்ந்து உறுதி செய்தது போலாகி விட்டது). மசூதிக்குள் நுழைந்து தாக்க சவுதி அரசு தயாரானது.
இந்தத் தாக்குதலின் முதல் அம்சமாக அமெரிக்க டவ் (TOW- Tube Launched, Optically Tracked, Wire-command-link guided) வகை ஏவுகணைகள் கொண்டு மெக்கா மசூதியின் மினாரெட்டுகள் தாக்கப்பட்டன. மினாரெட்டுகளில் காவலுக்கு ஒருந்த அத்தனை போராளிகளும் இதில் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, யந்திரத்துப்பாக்கிகள் கூடிய கவச வண்டிகள் உள்ளே செலுத்தப்பட்டது. இவை ஜுஹைமான் தரப்பில் பெரும் சேதத்தை உண்டுபண்ணின. தன்னை உண்மையிலேயே மாஹ்டி என்றும் கொல்லப்பட முடியாதவன் என்றும் நம்பிய முஹமது அப்துல்லா இந்தச் சண்டையில் பல தீரச் செயல்கள் புரிந்தான். சுற்றிலும் பாயும் குண்டுகளைப் பொருட்படுத்தாது மசூதி வளாகத்திற்குள் புகுந்த கவச வண்டி ஒன்றை நெருங்கி, அதன் மேல் ஏறி பெட்ரோல் ஊத்திக்கொளுத்தினான். கவச வண்டி அவசரம் அவசரமாகப் பின் வாங்கியது. கீழ்த்தளத்தில் இன்னொரு கவச வண்டி குறுகலான நுழைவாயிலில் சிக்கிக்கொண்டு ஜுஹைமானின் ஆட்களால் பெட்ரோல் பாம் கொண்டு கொளுத்தப்பட்டது. சவுதி படைகள் வீசிய கையெறி குண்டுகளை "மாஹ்டி" முஹம்மது அப்துல்லா மிகச்சில நொடிகளில் அநாயாசமாக ஓடிப்பொறுக்கி திருப்பி வீச சவுதி தரப்பில் அவை பெரும் சேதத்தை விளைவித்தன. ஆனால், அவனது அதிர்ஷ்டம் வெகுநேரம் நிலைக்கவில்லை. வீசப்பட்ட கை குண்டு ஒன்றை எடுப்பதற்குக்குனிந்த போது, "மாஹ்டி"யின் கையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் அது வெடித்து விட, முகமது அப்துல்லாவின் இடுப்பின் கீழ்ப்பாதி கூழாகிப் போனது. அந்நிலையிலேயே அந்த இடத்திலேயே அவன் மேலும் சில நாட்கள் உயிரோடு இருந்து, பிறகு இறந்து போனான். மாஹ்டி வீழ்ந்த செய்தி வதந்தியாய்ப் பரவிய நிலையிலும் கூட ஜுஹைமான், தனது உத்வேகப் பேச்சின்மூலம் படையை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து போரிட்டான்.
மசூதியின் மேல் தளம் சவுதி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர, குறுகிய பாதைகள் நிறைந்த கீழ்த்தளத்தில் ஜுஹைமானின் வீரர்கள் ஒளிந்து கொண்டு போரிடத்தொடங்கினர். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டபோது துணிகளையும், கார்ப்பெட்டுகளையும் தண்ணீரில் நனைத்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, கீழ்த்தளத்தில் நுழைய முற்பட்ட சவுதிப்படைக்கே இந்தப்புகை அதிக பாதிப்பை உண்டுபண்ணியது. மேலும் கீழ்த்தளத்திற்குள் இறங்க முயன்ற சவுதி வீரர்களை ஜுஹைமானின் ஜிஹாதிகள் இருட்டில் இருந்து கொண்டு எளிதாகத் தாக்க முடிந்தது. பெரும் சேதம் இல்லாமல் கீழ்த்தளத்திலிருந்து போரிடுபவர்களை வெளியேற்ற முடியாது என்று சவுதி அரசுக்குப் புரிந்தபோது ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. சவுதியின் சிறிய ராணுவம் இதற்குள் ஏகப்பட்ட சேதத்தைக் கண்டு விட்டது. ஆனால் சவுதி அரசோ மெக்கா மசூதி மீட்கப்பட்டது என்று வெளியுலகிற்கு பொய்ச்செய்தி பரப்பத் தொடங்கி விட்டிருந்தது. இந்நிலையில் சவுதியின் எண்ணெய் வளமிக்க கிழக்குப்பகுதியில் உள்ள ஷியாக்கள் வேறு கலகம் செய்யத் துவங்கியிருந்தனர். அதனை அடக்க சவுதி அரசு இன்னொரு முனையில் போராட வேண்டியிருந்தது. 20 ஷியாக்கள் கொல்லப்பட்டு இந்தக் கலகம் அடக்கப்பட்டது.
உடனடியாக மசூதி ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், சவுதி அரசின் நம்பகத்தன்மைக்கே கேடு வரும் என்கிற நிலையில், சவுதி மன்னர் வெளி நாட்டார் உதவியை நாட முடிவு செய்தார். யாரிடம் உதவி கேட்பது என்ற கேள்வி எழுந்தபோது, மத்திய கிழக்கின் மற்றொரு முரண்பாடு வெளிச்சத்துக்கு வந்தது. சக அராபிய நாடுகளையோ முஸ்லீம் நாடுகளையோ நம்ப சவுதி அரசு தயாராக இல்லை. ஜோர்டான் அரசு உதவி செய்ய முன் வந்தாலும், சவுதி அதனை மறுத்தது (அன்றைய சவுதி மன்னரின் தந்தை ஜோர்டானின் மீது 1920-களில் படையெடுத்தவர்). ஷியா நாடான ஈரானிடம் உதவி கேட்க முடியாது. பிற எந்த மத்திய கிழக்கு முஸ்லீம் நாட்டிடம் ரகசியமாக உதவி கேட்டாலும் அதனை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு "மெக்காவைக் காக்க முடியாத சவுதி அரசு" என்று எப்போது வேண்டுமானாலும் அவை சவுதி அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டிக் கொடுத்து விடக் கூடும். ஆக, எந்த சக அராபிய நாட்டிடமும் மசூதியைக் காப்பதற்காக கடன் பட சவுதி மன்னரின் அரசு தயாராக இல்லை. ஆனால் மேற்கு நாடுகளிடம் உதவி கேட்பதில் இவ்வித சிக்கல்கள் எதுவும் இல்லை, எனவே மேற்கு நாடுகளை அணுக முடிவு செய்யப்பட்டது. நட்பு நாடென்றாலும் அமெரிக்க வெறுப்பு உச்சத்தில் இருந்தமையாலும், வெளியே தெரிந்தால் பல குழப்பங்கள் உண்டாகும் என்பதாலும் அமெரிக்காவை இதில் தொடர்பு படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அன்றைய தேதியில் உலகத்திலேயே சிறந்த ரகசியத் தாக்குதல் படையை (SDECE) வைத்திருந்த ஃபிரான்ஸிடம் உதவி கோருவதென்று தீர்மானிக்கப்பட்டது. ஏகப்பட்ட ராணுவ தளவாடங்களை விற்று வந்ததில் பிரான்ஸ் ஏற்கனவே சவுதிக்கு நெருங்கிய நட்பு நாடாகவும் இருந்தது.
போர்க்கருவிகள் பல தந்து பிரான்ஸ் உதவியது மட்டுமன்றி ப்ரான்ஸ் நாட்டின் சிறியதொரு தாக்குதல் குழுவும் ரகசியமாக சவுதிக்கு அனுப்பப்பட்டது. இந்தக்குழு சவுதி படைக்கு டாயெஃப் பகுதியில் கொரில்லா போர்ப்பயிற்சியும் கருவிப்பயிற்சியும் அளித்தது. இதைத் தொடர்ந்து மசூதியின் மேல்தளத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டு அதன் வழியே நரம்புகளைச் செயலிழக்கச்செய்யும் சக்தி வாய்ந்த ரசாயன வாயு ஒரே நேரத்தில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கையெறிகுண்டுகளையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியபடி சவுதிப்படை உள்ளே நுழைந்தபோது களைத்துப்போயிருந்த ஜுஹைமானின் போராளிகளால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. உள்ளிருந்த ஓர் அறையில் பிற போராளிகளுடன் ஜுஹைமானும் பிடிபட்டான். இறந்து கிடந்த "மாஹ்டி" முகமது அப்துல்லாவின் உடலும் மீட்கப்பட்டது. மாஹ்டியின் இறந்த உடல், சவுதி அரசின் மசூதித் தாக்குதலுக்கு இஸ்லாமிய இறையியல் பூர்வமான நியாயத்தையும் தந்தது.
அடுத்து: பின் விளைவுகள்
(தொடரும்)
arunagiri_123@yahoo.com
Copyright:thinnai.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment