Wednesday 10 September, 2008

அருணகிரியின் திண்ணைக்கட்டுரை

Thursday September 4, 2008
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1
அருணகிரி
மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1

"If you are going where I think you are going, young Mike" said Tamian Godfrey on one of their daily hikes, "you will have to master the various levels of aggressiveness and fanaticism that you will be likely to encounter. At the core is self-arrogated jihad, or holy war, but various factions arrive at this via various routes and behave in various ways."
- From 'The Afgan' by Frederick Forsyth
**************
1979 நவம்பர் 20- இஸ்லாம் காலண்டரில் முஹரத்தின் முதல் தினமான புது வருடத் துவக்க நாள். மக்கா மசூதியில் அன்று தொடங்கி இரண்டு வாரம் நடந்த போரில் சிதறிய உடல்களும் சிந்திய ரத்தமும், வன்முறைக்கும் வெறுப்பியலுக்கும் புனித சாயம் பூசப்படுவதன் விபரீத விளைவை எடுத்துக்காட்டின. அதன் எதிரொலி உலகெங்கும் நடக்கும் இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகளாக இன்றும் கேட்கின்றன. யராஸ்லோவ் ட்ராஃபிமோவ் என்ற பத்திரிகையாளரின் விடா முயற்சியாலும் உயிர்ப்பயம் இருந்த போதிலும் உண்மை சொல்ல வெளி வந்த சிலராலும் இந்த நிகழ்ச்சிகள் இன்று "The siege of Mecca" என்ற புத்தகமாக வந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரை இப்புத்தகத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஆனது.

1979 நவம்பர் 20- மக்கா மசூதி ஜுஹைமான் அல் உத்தய்பி என்ற சுன்னி இஸ்லாமியனின் படையால் கைப்பற்றப்பட்டது. அதனை விடுவிக்க நடந்த போரில் மக்கா மசூதி கவச வண்டிகளால் இடிக்கப்பட்டு, விஷ வாயு பாய்ச்சப்பட்டு, கொலைக்களமாக ஆனது. இந்த போர் மத்திய கிழக்கிலும், குறிப்பாக சவுதியிலும் கருக்கொண்ட பல அடிப்படைவாத இயக்கங்களுக்கும் பயங்கரவாத நிகழ்வுகளுக்கும் உரமானது. அடிப்படைவாத வஹாபியிசம் எண்ணெய் வள பண பலத்துடன் உலகெங்கும் தன் ஜிஹாதி வித்துக்களைப் பரப்பத் தொடங்கியது. மசூதி விரிவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்த முகமது பின் லாடன் என்ற சவுதி கட்டிட காண்ட்ராக்டர் மகனான ஒஸாமா என்ற தீவிர இஸ்லாமிய இளைஞன் பின்னாளில் உலகம் வெறுக்கும் பயங்கரவாதியாக மாற உந்துதல் தந்தது.

மக்கா மசூதியில்தான் உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் புனிதமாக வந்து தொழும் காபா என்ற கருப்புக்கல் உள்ளது.(1) இஸ்லாம் வருவதற்கு முன்பே காபாவும் அதன் தெய்வச்சிலைகளும் அன்றைய அரேபியரால் தொழப்பட்டு வந்தன. மெக்காவைச்சேர்ந்த குரைஷி சமூகத்தினர் காபாவின் காப்பாளர்களாக அன்று இருந்தனர். பிற்காலத்தில் முகமது நபி அங்கிருந்த தெய்வச்சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று கிளம்பியது குரைஷியரின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க, மெக்காவிலிருந்து மெதினாவிற்கு முகம்மது தப்பி ஓடினார். இந்நிகழ்வு ஹிஜ்ரா என அரபி மொழியில் வழங்கப்பட்டு, இஸ்லாமிய காலண்டரின் முதல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. பின்பு மெக்கா மேல் படையெடுத்து அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி, மெக்காவையும் மெதினாவையும் முஸ்லீம்கள் மட்டுமே நுழையக்கூடிய நகரங்கள் என விதித்தார்; அது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

முன்கதைச்சுருக்கம்:

சவுதி அரேபியாவின் மன்னராட்சி சுன்னி வஹாபிய அடிப்படைவாதத்தில் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது தெரிந்தவர்களுக்கு, மக்கா மசூதி ஆக்கிரமிப்புக்கு அதே சுன்னி வஹாபிய அடிப்படைவாதிகள்தான் காரணம் என்ற செய்தி ஆச்சர்யமாக இருக்கும். இதன் பின்னணி அறிய சவுதி அரேபியா என்ற நாடும் அதன் வஹாபிய உருவாக்கமும் தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அரேபியாவில் அதன் பாரம்பரிய தெய்வங்கள், கோவில்கள், அரேபிய பூர்வீக வழிபாட்டு முறைகள் ஆகியவை நசுக்கப்பட்டு இஸ்லாம் நிறுவப்பட்டாலும், இறந்தவர்களை வழிபடும் தர்கா வழிபாடு, இயற்கை குறியீடுகளை வழிபடுவது போன்ற அரேபிய பாரம்பரிய இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகள் முழுவதுமாக அழிந்து விடவில்லை. இவை நாளடைவில் வலுப்பெறவும் தொடங்கின. 18-ஆம் நூற்றாண்டில் எகிப்திய ஆட்டோமான் பேரரசின் பிடி தளரத்தொடங்கி ஷியா ஈரான் (பெர்சியா) வலிமையடையத்தொடங்கியது. அதே நேரத்தில் மத்திய கிழக்கிலும் அரேபியாவிலும் பிரிட்டிஷாரின் ஆதிக்கமும் தாக்கமும் பரவத் தொடங்கியது. இந்நிலையில், இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளிலிருந்து முஸ்லீம்கள் விலகிச்செல்கிறார்கள் என்ற் பயம் முஹம்மது இப்னு அப்தெல் வஹாப் என்ற சவுதி அரேபிய இஸ்லாமிய அடிப்படைவாதிக்கு உருவாகத் தொடங்கியது. இடையில் வந்து சேர்ந்த இந்த "களங்கங்களிலிருந்து" இஸ்லாத்தை மீட்டெடுத்து அதன் பழமைவாத அடித்தளத்திற்கு மீண்டும் முஸ்லீம்களை இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் உருவாக்கிய இயக்கம் வஹாபிய இஸ்லாம் என்றும் அதனைப் பின்பற்றியவர்கள் வஹாபிக்கள் என்றும் அறியப்பட்டனர்.

வஹாபிய இஸ்லாம் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை உருவாக்கியது. இசை, நடனம், தர்கா வழிபாடு, புகையிலை, பட்டாடை போன்றவை இஸ்லாத்துக்கு எதிரானவையென்று தடை செய்யப்பட்டன. சுன்னிக்களின் ஒரு பிரிவான வஹாபிக்கள் ஷியாக்களை மட்டுமல்லாது தம் கொள்கைகளை ஏற்காத சக சுன்னிக்கள் மீதும் கூட தாக்குதல்களை நிகழ்த்தத் தொடங்கினர். கொள்ளையடித்தலும், கொலைசெய்தலும் கடவுளின் பணியாகவும் மதக்கடமையாகவும் மேற்கொள்ளப்பட்டன. கேள்விகள் எழுந்தபோது குரானும் முகமது நபியின் வாழ்க்கையும், ஹதீதுகளும் ஆதாரங்களாக எடுத்துக் காட்டப்பட்டு நியாயம் கற்பிக்கப்பட்டன. வஹாபியிசத்தின் இறுக்கமான பாதையைப் பின்பற்றாதவர்களை களங்கப்பட்ட கலப்பட இஸ்லாமியர்களாக வஹாபிக்கள் கண்டனர். புனித மெக்கா களங்கப்படக் கூடாது என்றும் இஸ்லாம் அல்லாதோர் உள்ளே வரக்கூடாது என்றும் முகமது விதித்தது எடுத்துக்காட்டப்பட்டு அத்தகைய மண்ணில் கலப்படமாக்கப்பட்டு இஸ்லாம் தன் புனிதத்தை இழப்பதா என்று வஹாபியத்தலைவர்கள் வாதிட்டனர்.

அடிப்படைவாதி அப்தல் வஹாபின் முக்கிய ஆதரவாளராக அன்று இருந்தவர் முஹம்மது அல்-சவுத். அல்-சவுத்தின் பிற்கால சந்ததியினர் இஸ்லாமிய உலகின் அன்றைய தலைவராக -அரேபியாவின் காப்பாளராக தன்னை வரித்துக்கொண்ட- ஆட்டோமான் சுல்தானையே எதிர்க்கவும் துணிந்தனர். 1802-இல் ஷியாக்கள் வசித்த கர்பாலா நகரைத் தாக்கினர். அங்கிருந்த மசூதிகளைக் கொளுத்தி, செல்வங்களைக் கொள்ளையடித்து, ஏறக்குறைய 4000 ஷியாக்களைக் கொன்று போட்டனர். கர்ப்பிணிப்பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு அதனுள்ளிருந்த குறைச்சிசு தாய்ப்பிணத்தின் மீது எறியப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. அடுத்த வருடம் மெக்கா தாக்கப்பட்டது. அங்கிருந்த தர்காக்கள் தகர்க்கப்பட்டன. பிறகு மெதீனா தாக்கப்பட்டு வஹாபிகளின் பிடிக்குள் வந்தது. வஹாபிக்களின் ஆட்சி அடுத்த 9 ஆண்டுகள் தொடர்ந்தது. ஆனால் துருக்கியின் மக்கள் ஹஜ் யாத்திரைக்கு வராமல் சவுதி மன்னன் தடுக்கத்தொடங்கியபோது அது இஸ்லாமிய உலகின் காவலராக இருந்த துருக்கி காலிபாவின் மேலாண்மைக்கே ஒரு சவாலானது. 1813-இல் துருக்கி சுல்தான் படை சவுதி அரேபியாவின் மீது படையெடுத்தது. ஐந்து ஆண்டுகள் நடந்த போரின் முடிவில், வஹாபியப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, சவுதி மன்னன் சிறைப்பிடிக்கப்பட்டான். இஸ்தான்புல்லுக்கு கூண்டில் கொண்டு வரப்பட்டு, மரண தண்டனையாக தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டான். சவுதி குடும்பம் இடம் பெயர்ந்து காலம் கனியும் என எதிர்பார்த்து வாழத் தொடங்கியது. அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
அடுத்து: வஹாபியிசம் வேர் கொண்டது

(தொடரும்)

Copyright:thinnai.com 

No comments: