Friday, 8 February 2008

திண்ணைக்கட்டுரை - இந்தோனேஷியாவின் சுகார்த்தோ

முகமதிய சட்டங்களின்கீழ் நடந்துவரும் நாடுகள் மற்றும் முகமதியர் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் நாடுக்களுக்கிடையே, இந்தோனேஷியா கொஞ்சம் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளலாம் (தலிபான்களும் அல்கைதாக்களும் தலையெடுக்காதவரை).

முகமதியர் பெரும்பான்மையாக வாழும் இன்நாட்டின் தலைமை குறித்த கட்டுரை, பாஸ்டன் பாலா எழுதிய திண்ணைகட்டுரை கீழே...

------------------------------------------------


Friday February 1, 2008
சுகார்டோ
பாஸ்டன் பாலா

வியட்நாம் என்றவுடன் அமெரிக்கா கால் நுழைத்து இலங்கையில் ஐபிகேஎஃப் போல் மூக்குடைபட்டதும், நாபாம் தெளித்து அழித்ததும், நேற்றைய ஜனாதிபதியாக விரும்பிய ஜான் கெர்ரியை 'ஸ்விஃப்ட் போட்'டியதும், இன்றைய ஜனாதிபதியாக விரும்பும் ஜான் மெக்கெயினின் சிறைக்கால அனுபவமும் அவரவரின் கொள்கை சார்ந்து நினைவுக்கு வரும்.
ஆனால், இந்தோனேசியா என்றவுடன் சுனாமிப் பேரலையோ, நைக்கியின் குழந்தைத் தொழிலாளர்களோ, பாலி தீவிரவாதத் தாக்குதலோ, பஞ்சசீல கொள்கையோதான் நினைவுக்கு வருகிறது.

கம்போடியா, வியத்னாம் மாதிரி மூக்குடைபடாமல் சாணக்கியத்தனமாக வென்ற நாடுகளில் இந்தோனேசியா குறிப்பிடத்தக்கது. கத்தியின்றி, ரத்தமின்றி கரன்சி கொடுத்து அமெரிக்க பாக்கெட்டுக்குள் வீழ்ந்த நாடு.

இந்தியாவில் பாதி சைஸ். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிகச் சரியாக 17,508 தீவுகள்.

இத்தனை தீவுகள் இருக்கிறதே... இன்னொன்றையும் சேர்த்துக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் கிழக்கு திமோரையும் கையகப்படுத்தினார் தற்போது இறைவனடி சேர்ந்துள்ள சுகார்தோ.

சுகார்டோ எத்தனை பேரை தீர்த்துக் கட்டினார் என்றால் யாரிடம் கணக்கு கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஐந்து லட்சத்தில் இருந்து இருபது லட்சம் வரை சொல்கிறார்கள். சுகர்னோ, சுகார்தோ போன்ற இந்தோனேஷியாவின் தலைவர்களிடம் கேட்டால் நாட்டின் 24 கோடியில் ஒரு சதவீதம் சவமானதற்கு 'இத்தனை ஃபீலிங்கா?' என்று அழிச்சாட்டியமாக லுக் விடுவார்கள்.

பள்ளிப்படிப்பை முடித்திராததால் அவரிடம் கொள்ளையடித்த பணத்துக்கு சரியான அக்கவுண்டிங் தாக்கலாகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோவை விட அதிக அளவு சேர்த்து அகில லோகத்தின் தலை பத்து பணக்காரராக, இந்தோனேசியாவுக்கேற்ற எள்ளுருண்டையாக பதினைந்தில் இருந்து முப்பத்தைந்து பில்லியன் (இந்திய ரூபாயில் இன்றைய மதிப்பில் 100000,00,00,000 கிட்டத்தட்ட 100,000 கோடி ருப்பீஸ்) சேவிங்ஸ் கணக்காகியுள்ளது.

உலகின் அதிகமான இஸ்லாமியர் மக்கட் தொகையை கொண்டநாடு இந்தோனேசியா. ஆயினும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்களும் உண்டு. மதச்சார்பற்ற ஒரு நாடாக இந்தோனேசியா விளங்குவது பிடிக்காத ஒசாமா பின் லாடனின் அன்பர்கள் சில மாநிலங்களில் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நவீன இந்தோனேசியாவை நிறுவிய-நிறுவன அதிபர் சுகர்ணோ. 1967-ம் ஆண்டு அதிபர் சுகர்ணோவை நீக்கி விட்டு இராணுவத் தலைவர் சுகார்டோ பதவிக்கு வந்தார். சுமார் 32 ஆண்டுக்காலம் முஷாரஃப்கரம் கொண்டு மக்களை அடக்கி ஆண்டார். ருவாண்டா, இடி அமீன், ஸ்லொபதன் மிலோசெவிச் காட்டிய பாதையில் இவர் ஜனநாயக முறைப்படி கட்சி துவங்கி, கோல்கார் கட்சி என்று நாமகரணமிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று யாருமே இல்லாத பெருமை கொன்டவர் சுகார்தோ. யாராவது கொடி தூக்கினால், கம்யூனிசம் பேசினால், எம்-16 வெட்டு ஒன்று, தாழப் பறந்து பறந்தடிக்கும் விமானம் இரண்டு என்று மும்முரமாக குடியரசைத் தழைத்தோங்க செய்தவர்.

சதாம் உசேனின் குவைத் ஆக்கிரமிப்பு போல் 1975ல் கிழக்கு டிமோர் பக்கம் இவரது பராக்கிரமம் திரும்பியது. குவைத் மாதிரி இல்லாமல் அமெரிக்காவின் ராஷ்டிரபதி ஜெரால்ட் ஃபோர்ட்- இன் பரிபூரண அனுக்கிரகம் இந்தோனேசியா பக்கம் இருந்தது. கடாரம் வென்ற சுகர்னோ என்று அதன் பிறகு வந்த கார்ட்டர், ரொனால்ட் ரீகன், பில் க்ளின்டன், அப்பா புஷ் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளால் கொண்டாடப்பட்டார்.

கிழக்குத் டிமோர் போரில் கிளர்ச்சியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை மட்டுமே கொன்று, மீதம் உள்ள ஐந்து லட்சம் தைமூரியர்களை விட்டுவைத்து தன்னுடைய ஜீவகாருண்யத்தை பறைசாற்றி, மனிதர்குல மாவிளக்கு பட்டம் பெற்றார்.

அம்மையாருக்கு உடன்பிறவா சகோதரி, முன்னாள் கலைஞருக்கு சன் டிவி பிரதர்ஸ் போல் கல்லாவை கவனிக்க அவர் மனைவி மேடம் டியன் என்றழைக்கப்படும் சிதி ஹர்தினா (Siti Hartinah Suharto) -- உறுதுணையாக கையூட்டுக்கு சிங்கிள் விண்டோவாக திகழ்ந்து பிசினஸ் சூழலை எளிதாக்கினார்.

தற்போதைய இந்தியாவின் ப. சிதம்பரம் போல் பொருளாதாரம் துள்ளி குதித்து விளையாடும் வரை மக்கள் அவர் பக்கம் சிக்கென பிடித்திருந்தார்கள். 'நீயுமுன்றன் பைநாகப்பாய் சுருட்டிக்கொள்' என்று அமெரிக்க வர்த்தகர்கள் ஆசியாவை விட்டு மூட்டை கட்ட, வந்தது சனி.

என்றேனும் மாற்றம் வந்தே தீரும் என்கிற நிலையில் சுகார்டோ பதவி விலகினார். என்றாலும் சீனாவின் மாவோ, கம்போடியாவின் பொல் பொட், பிலிப்பைன்சின் ஃபெர்டினான்ட் மார்கோஸ் போல் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கி ரசிகர் மன்றக் கண்மணிகள் நெஞ்சத்தில் நீங்காத தலைவனாகி இருக்கிறார்.

இந்தோனேசியாவின் சாலைகள் சுகர்தோவின் மகள் சிதி ஹரிதயந்தி ருக்மண (Siti Hardiyanti Rukmana) பெயருக்கு பட்டா போடப்பட்டு, சுங்கவரி அத்தனையும் அவருக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு மகனுக்கு இந்தோனேசியாவின் எண்ணெய்க்கிணறுகளும் பெட்ரோல் ஊற்றுக்களும் முழுக்க சொந்தமாக்கப்பட, இன்னொரு மகனுக்கு டிவி, கார், கொக்கோ, தேக்கு, சேமநல பாதுகாப்பு முதல் ஆணுறை நிறுவனங்கள் என்று தொண்ணூறு ஸ்தாபனங்களுக்கு அதிபதியாக்கி நிறைந்த வாழ்வையும் வளத்தையும் வழங்கியிருக்கிறார்.

அவரின் நல்லெண்ணத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கிட்டத்தட்ட இருபது சதவிகித அரசுத்துறை ஒப்பந்தங்கள் மற்றவர்களுக்காக விட்டுகொடுக்கப்பட்டிருப்பதை சொல்லலாம்.

வாரிசு அரசியலை மறக்காத மக்களாக இந்தோனேசியர்களும் சுகார்னோவின் இரண்டாவது மகளான மேகாவதி சுகர்ணோபுத்ரி கட்சியை ஆதரித்து தேர்தலில் வெல்லவைத்து கோலோச்ச வைத்தார்கள். கட்டாங்கடைசியாக இவரின் ஆட்சிக்காலத்தில்தான் ஐ.நா.வின் கட்டபஞ்சாயத்தால் இந்தோனேசியாவின் ஒரு பகுதியான கிழக்கு தைமூர் தனிநாடாக மாறியது. இதை மேகாவதி நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு.அண்டைநாடுகளின் மலேசிய மஹாதிர் முகமது, சிங்கை லீ க்வான் போல் சுரண்டல் பெருச்சாளித்தனமற்ற பொருள்முதல்வாதம் பின்பற்றாமல், சிலியில் அல்லக்கையாக இருந்த அக்ஸ்டோ பினோச்சே போல், பரம சௌக்கியமாக வாழ்ந்து கல்யாண சாவு பெற்றிருக்கும் சுகார்தோ நினைவாக பழமாகிப் போன பழமொழி:

அரசன் அன்று கொல்வான்;
அமெரிக்கன் யாருக்கும் தெரியாமல் சப்ளை செய்வான்!

-oOo-
தொடர்புடைய இடுகைகளில் குறிப்பிடத்தக்க சில:
உதவியவை:
Varaidhal - Special
Indonesia - Wikipedia, the free encyclopedia
Economist.com Country Briefings: Indonesia
Indonesia : Country Studies - Federal Research Division, Library of Congress
BBC NEWS Asia-Pacific Country profiles Country profile: Indonesia
-oOo-
கொடுங்கோலன்:
Democracy Now! Former Indonesian Dictator, U.S. Ally & Mass Murderer, Suharto, 86, Dies
Democracy Now! The Democrats & Suharto: Bill Clinton & Richard Holbrooke Questioned on Their Support for Brutal Indonesian Dictatorship
Democracy Now! Massacre: The Story of East Timor
News and Comment: Suharto Dead. Six Billion Alive. Time for a Little Reform.
-oOo-
வாழ்விக்க வந்த வள்ளல்:
Suharto's Indonesia - WSJ.com
Suharto's Legacy - WSJ.com
-oOo-
ரெண்டுங்கெட்டான்:
NPR: Indonesia's Suharto Left Iron-Fisted Legacy
Suharto News - The New York Times
--
-Balaji
Alt. Email: bsubra@yahoo.com

No comments: