Friday 8 February, 2008

மகாத்மா காந்தி பற்றிய அ.நீலகண்டனின் திண்ணைப்பதிவு

மகாத்மா காந்தி பற்றிய அ.நீலகண்டனின் இவ்வார திண்ணைப்பதிவு

எந்தவிதத்திலும் குறைய‌ற்ற முழுமையான மனிதன் யாரும் இவ்வுலகில் பிறந்ததில்லை (அதனால்தானே "மனிதன்" என்றாகிறான்).

காந்தி நமக்காக செய்தவற்றிற்காக அவர் நிச்சயமாக மாகத்மாதான், மரியாதக்கும், போற்றுதல்களுக்கும், புகள்களுக்கும் உரியவர்தான்.

என்றாலும், முகமதியத்து பிரச்சனைகளை அவர் கையாண்ட விதம் குறித்து சரியான புரிதல்களும் விவாதங்களும் நடத்தப்படவேண்டும். **************************


Friday February 1, 2008
மகாத்மா காந்தியின் தவறுகள்
எஸ். அரவிந்தன் நீலகண்டன்

மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையற்ற அகிம்சையின் மூலம் தோற்கடித்ததாகப் பாராட்டப்படுகிறார். அவருடைய தவறுகளையோ அல்லது தோல்விகளையோ குறித்து விவாதிப்பதென்பது இன்னமும் மிகவும் பிரச்சனையான விஷயமாகத்தான் இருக்கிறது - அத்தகைய விவாதம் இதுவரைக்கும் பெரும்பாலும் கம்யூனிஸ மற்றும் ஹிந்துத்துவ பிரசுரங்களில் மட்டுமே காணப்படும் ஒன்று. ஆனால் இத்தனைக் காலம் கடந்து வந்த பின்னர் நாம் ஏன் இன்னமும் இந்தியாவின் அதிகாரபூர்வ புனித பாதுகாவலரைக் கேள்விக்குள்ளாக்குவது குறித்து இத்தனை தயக்கம் காட்ட வேண்டும்?

காந்திஜியின் தவறுகள்

முழுமையானதென கருதப்படாவிட்டாலும் கூட காந்திஜியின் மிகப்பெரிய அரசியல் தோல்விகளாக நாம் பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

1. 1914-18 உலகப்போரின் போது எவ்வித நிபந்தனையும் இன்றி பிரிட்டிஷ் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியர்களை அணி திரட்டி அளித்து அதன் மூலம் பிரிட்டன் மனம் மகிழ்ந்து நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியாவிற்கு பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளாக, ஆஸ்திரேலியா கனாடா ஆகியவற்றுக்கு இணையாக சுயாட்சி டொமினியன் அந்தஸ்து அளித்துவிடும் என எண்ணியது. இத்தகைய வீண் பலிகளை மேற்கொண்டதோர் போரில் இவ்விதமாக ஈடுபட்டது காந்திஜியின் பிரகடனப்படுத்தப்பட்ட கோட்பாடான அமைதிவிரும்பி போக்குக்கு எதிரானது (என்பதுடன் அடிப்படையான மானுட மதிப்பீடுகளுடன் தொடர்பு கொண்டதாக அமைந்த இரண்டாம் உலகப்போரினை போன்றதாக முதல் உலகப்போர் அமையவில்லை என்பதனை நோக்க வேண்டும்.) இதில் காந்திஜியின் நிலைப்பாடு அவருடைய மிகவும் மோசமான அரசியல் கணக்கீட்டு தவறினையும் காட்டியது. பல்லாயிரக்கணக்கான இந்திய உயிர்கள் முதல் உலகப்போரின் போர்க்களங்களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய நலனுக்காக பலிக்கொடுக்கப்பட்டிருந்தும் அதன் மூலம் இந்திய விடுதலைக்கு மகாத்மா காந்தியால் எவ்வித நன்மையான ஒரு முன்னேற்றத்தையும் மகாத்மா காந்தியால் ஏற்படுத்த முடியவில்லை.

2. 1920-22 இல் மக்களை செயலாற்றத்தூண்டும் விடுதலைப் போராட்ட இயக்க உத்வேகத்தினை கிலாபத் இயக்கத்திற்கு எவ்வித முன்-நிபந்தனையும் இன்றி தாரை வார்த்தது. கிலாபத் இயக்கம் சோகசுவையும் நகைச்சுவையும் இணைந்தோடியதோர் காந்தியத் தவறாகும். துருக்கிய மக்களாலேயே எதிர்க்கப்பட்டு 1924 இல் இறுதியாக அழிக்கப்பட்ட ஓட்டோமான் காலீப் அரசினை மீண்டும் ஏற்படுத்த இந்தியாவில் உருவாக்கப்பட்ட அந்த கிளர்ச்சி முழுக்க முழுக்க பிற்போக்குத்தனம் வாய்ந்ததாகவும் இந்திய தேசியத்துக்கு எதிரானதாகவும் இந்திய மக்களின் மதச்சார்பற்ற போக்குடன் இஸ்லாமிய மதவாதக் கோரிக்கைகளை இணைப்பதாகவும் அமைந்தது. இந்த முடிவினால் காந்தி இந்திய தேசியத்தையும் கிலாபத்தியத்தையும் முடிச்சு போடப்பார்த்ததுடன் இப்போராட்டம் வன்முறையாக மாறியவுடன் அதனை கைவிட்டதன் மூலம் (அவருடைய அகிம்சை கோட்பாட்டினை ஏற்காதவர்களான) அவருடைய இஸ்லாமிய கூட்டாளிகளையும் புண்படுத்தினார். இதன் விளைவு இன்னும் அதிகமான வன்முறையாக பிரிட்டிஷாருக்கு எதிரான குறைவான வன்முறைக்கு அப்பால் -ஏற்கனவே சமசீரான மனநிலை கொண்ட இந்திய தேசிய தலைவர்கள் கணித்தது போலவே- மிகப்பெரிய இந்து-முஸ்லீம் கலவரங்களாக வெடித்தது. மகாத்மா காந்தி கிலாபத் இயக்கத்திற்கு, அதன் கருத்தியல் ரீதியிலும் சரி அது நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்திலும் சரி, முறையான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அத்துடன் அவர் கிலாபத் இயக்கத்தின் யதார்த்த கருத்தியலை புரிந்துகொள்ளாமல் அதற்கு பதிலாக தமது கற்பனையில் தோன்றிய அழகிய பிம்பத்தினையே புரிவாக கொண்டார்.

3. 1931 இல் பூரண விடுதலைக்கான மக்கள் இயக்கத்தினை கைவிட வேண்டும் என்கிற முழுக்க முழுக்க அவருடைய சொந்த கருத்தினை- அவருக்கு அணுக்கமாக இருந்த பிற தலைவர்களால் எதிர்க்கப்பட்ட கருத்தினை, அவர்களது சிந்தனைகளின் முடிவுகளுக்கு மதிப்பளிக்காமல் - பிரிட்டிஷார்கள் தந்த ஒரு சில சலுகைகளுக்காக அவரைப் பின்பற்றும் மக்கள் மீது அவர் திணித்தார். வெளிநாடுகளில் அவரது மதிப்பு குறைந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் அவரை நுண்ணிய முறையில் கவனித்து வந்த அவரைச் சார்ந்தவர்களுக்கு அவரைச் சுற்றி இருந்த ஒளிவட்டம் - சில்லறை அரசியல்களுக்கு அப்பால் பெரும் இலட்சியங்களுக்காக பாடுபடும் தலைவர் எனும் ஓளிவட்டம்- சிதையத்தான் செய்தது. காந்தி-இர்வின் உடன்படிக்கை என்பது உயர்ந்த தேசிய இலட்சியத்தினை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் சின்ன அந்தஸ்து உயர்வுக்கு தியாகம் செய்வதாக அமைந்தது. மேலும் விடுதலைக்கு ஏற்படும் ஒவ்வொரு பின்னடைவும் காலதாமதமும் மேலெழும்பி வந்த பிரிவினைவாத சக்திகளுக்கு தம்மை அணிவகுத்து தம் நிலைப்பாட்டினை வலிமை அடையச்செய்ய வழிவகுத்தது.

4. இரண்டாம் உலகப்போரின் போது இந்திய பங்களிப்பு குறித்து நிலையற்ற ஊசலாடும் ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வழிவகுத்தது. போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க அவருடைய தொடக்க நிலையிலான தயக்கம் அவருடைய அமைதிவாத மற்றும் தேசப்பெருமை எனும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் நியாயமாக அமைந்திருந்திருக்கலாம். (வைஸிராய் இந்திய சுதேசத்தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் இந்தியாவை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வாக்கு கொடுத்திருந்தார்.) ஆனால் காந்திஜியின் இந்த நிலைப்பாடு பின்னர் தோல்வி அடைந்தது. ஏனெனில் அவரது சீடர்கள் யாரும் அவரைப் பின்பற்றவில்லை. இந்தியர்கள் ஆர்வத்துடன் படையில் சேர்ந்ததுடன் இந்திய வர்த்தகர்களும் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு ஆர்வத்துடனான உதவியாளர்களாக வர்த்தக ஒத்துழைப்பு நல்கினார்கள். அதே காலகட்டத்தில் முஸ்லீம்லீக் போர் கால நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு நல்குவதாக திறமையாக பேரம் பேசி தன் நிலைப்பாட்டினை வலுவுடையதாக மாற்றிக்கொண்டது. இந்துமகாசபை மேற்கொண்ட அத்தகைய நடவடிக்கைகள் முஸ்லீம் லீக் சம்பாதித்த வலிமைக்கு சமமாக இருந்திடவில்லை என்பதுதான் உண்மை. இதனால் பிரிவினைக்கு ஆதரவாக இருந்த முஸ்லீம் லீக்கின் முன்னால் காந்திக்கு அதே வலுவுடன் பிரிவினைக்கு எதிராக நின்றிடமுடியவில்லை. அத்துடன் காந்திஜி அழைப்பு விடுத்திருந்த 'இந்தியாவை விட்டு வெளியேறு' இயக்கம் அவர் கண் முன்னாலேயே வன்முறைப் போராட்டமாக மாறியதை அவரால் கையாலாகதத்தனத்துடன் பார்க்க மட்டுமே முடிந்தது. இறுதியில் அந்த வன்முறை இயக்கத்துக்கு அவரே ஆதரவாளராக மாற வேண்டியிருந்தது.

5. பிரிவினையைப் பொறுத்தவரையில் குழப்பமும் ஊசலாடும் தன்மையும் கொண்டதோர் நிலைப்பாட்டினை -பாகிஸ்தான் உருவாகப்படவிருந்த மாகாணங்களில் வாழ்ந்த ஹிந்துக்களுக்கு அவர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளான தாம் பிரிவினையை தடுத்துவிடுவதாகவும் இல்லையெனில் குறைந்தபட்சம் அவர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வெளியேற்றப்படமாட்டார்கள் என்பது உட்பட- எடுத்தது. அவர் தம்முடைய வலிமையான ஆயுதமான சாகும் வரை உண்ணாவிரதம் என்பதனை முகமதலி ஜின்னாவுக்கு எதிராக அவர் பிரிவினை கோரிக்கையை கைவிடும் வரை பயன்படுத்துவதாக அறிவிக்க இயலாதது. காந்திஜியின் இந்த இயலாமை அவருடைய இதர மிகவும் பிரபலமடைந்துள்ள 'சாகும்வரை உண்ணாவிரத' நடவடிக்கைகள் மீது சந்தேகவலையை வீசத்தான் செய்கிறது. ஏனெனில் இந்த 'சாகும் வரை உண்ணாவிரத' ஆயுதத்தினை அவர் அந்த ஆயுதத்தினால் தோற்கும் உளப்பாங்கு உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து பிரயோகித்தார் என கருதவைக்கிறது. பிரிவினை தவிர்க்க இயலாதது என வைத்துக்கொண்டாலும் கூட -அவர் அதனை முறையாக நடைபடுத்தும் செயல்முறைகளுக்கு அவர் இடமளிக்காததற்கு எவ்விதத்திலும் சமாதானம் கூற இயலாது. காந்திஜியால் நிராகரிக்கப்பட்ட ஒழுங்கான முறையில் மக்கள் தொகை பரிமாற்றமானது, அத்தகைய பரிமாற்றம் ஏற்படாத காரணத்தால் நிகழ்ந்த இரத்தவெள்ளம் ஓடச்செய்யும் கலவரங்கள் மூலம் மக்கள் துடைத்தழிக்கப்படுவதைக் காட்டிலும் மேலானதாகும். மென்மையான அறுவைசிகிச்சையாளர்கள் புரையோடும் சீழ்பிடித்த புண்களையே உருவாக்குகிறார்கள்.

6. பாகிஸ்தான் ஒரு எதிரி தேசமாக உருவாகிவிட்டது எனும் உண்மையை காஷ்மீர் படையெடுப்பின் பின்னரும் கூட ஏற்றுக்கொள்ள மறுத்து இந்திய அரசாங்கத்தை பிரிட்டிஷ் இந்திய கஜானாவிலிருந்து 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்கக் கோரி 'சாகும் வரை உண்ணாவிரதத்தை' அவர் மேற்கொண்டது. இந்த ரூபாய் நிச்சயமாக நியாயமாக பாகிஸ்தானுக்கு உரியதுதான். ஆனால் அதன் ஆக்கிரமிப்பு போக்கின் காரணமாக அந்த ஆக்கிரமிப்பு போக்கினை கைவிட்டாலே இந்த ரூபாயை பாகிஸ்தானுக்கு அளிக்க முடியும் என இந்தியா கோரிக்கை வைத்தால் அது புரிந்துகொள்ளக் கூடியதே. பாகிஸ்தான் அதன் படைகளை ஆக்கிரமிலிருந்து பின்வாங்கும் பட்சத்திலேயே இந்த ரூபாயை அளிக்க முடியும் என கோர்க்கை வைத்திருந்தால் அது நிச்சயமாக ஒரு அமைதிக்கான ஒரு அருமையான பங்களிப்பாக அமைந்திருக்கும். பல பத்தாண்டுகளாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைபலி வாங்கும் காஷ்மீர் பிரச்சனையை தவிர்த்து காஷ்மீர் நிலபரப்பின் மீது இன்று பாகிஸ்தான் கொண்டுள்ள ஆக்கிரமிப்பையும் தவிர்த்திருக்கும். பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட ஹிந்துக்களை கைவிட்ட யதார்த்ததுடன் இந்த அக்கறையற்ற விதத்தில் அமைந்த 55 கோடி ரூபாய்க்காக தம்முடைய தேர்ந்தெடுத்த ஆயுதமான (இந்திய பிரிவினையை தடுக்கவோ அல்லது பாகிஸ்தானிய இந்துக்களை காப்பாற்றவோ பயன்படாத) 'சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை' மகாத்மா காந்தி மேற்கொண்ட விதமே சில இந்து இயக்கதவர்களுக்கு ஆத்திரமூட்டி காந்தியின் மரணத்தை அவர்கள் திட்டமிட வழிகோலிற்று.

(-முனைவர் கொயன்ராட் எல்ஸ்ட்டின் 'மகாத்மா காந்தியின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்' எனும் கட்டுரையிலிருந்து)

aravindan.neelakandan@gmail.com

No comments: