Tuesday, 12 February 2008

முகமதிய அடிப்படைவாதம் குறித்து ஜடாயு கட்டுரை


Friday February 8, 2008
அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

ஜடாயு

இந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன.
பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும் 13 இடங்களில் பேரணிகள் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விதங்களிலும் அவரது உயிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அறிவித்தார். இது வழக்கமான எச்சரிக்கை மட்டுமல்ல, உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்ட தகவல் என்பதால் பா.ஜக இந்தப் பேரணிகளை தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் ரத்து செய்யவும் வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது. மோடி மற்றும் அத்வானிக்கு அளிக்கப் படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
அரசுத்துறையின் தகவல்கள் உண்மையாகவே இருக்க வேண்டும். பாஜக பேரணியை மத்திய அரசு குலைக்கப் பார்க்கிறது என்று சில கட்சித் தலைகள் பேசும் அற்ப அரசியலை ஒதுக்கி விடலாம். ஆனால் இதன் மூலம் அத்வானி மேற்கொண்டிருக்கும் பிரசாரம் எந்த அளவுக்கு அத்தியாவசியமானது, உண்மையானது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. இந்த தேசத்தின் இறையாண்மை, சுதந்திரம், முன்னேற்றம் இவற்றின் மீது விடாமல் போர்தொடுத்து வரும் ஜிகாதி தீவிரவாதத்தை எதிர்த்து பிரசாரம் செய்வது என்பதே அபாயகரமான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. அதுவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்?

முட்டாள் தனத்திற்காக ஒரு சாராரால் கேலிசெய்யப் பட்டாலும் “நாம் அவர்களை சாம்பலாக்குவோம்” (We will smoke ‘em out) என்று தீவிரவாதிகளுக்கு முஷ்டியை மடக்கிக் காட்டி அதைச் செய்தும் காட்டும் கௌபாய் ஜார்ஜ் புஷ் போன்ற துணிவும், உறுதியும் வாய்ந்த அரசியல் தலைமை நமக்கு வாய்க்கவில்லை தான். அதற்காக விதியை நொந்துகொள்வோம். ஆனால் இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உண்டாக்கி, அதை ஒரு அரசியல், தேர்தல் பிரசினையாக்குவதற்குக் கூட முதல் கட்டத்திலேயே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இந்த தீவிரவாத வலைப்பின்னலின் ஊடுருவல் இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம்.

இந்திய விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “பெங்களூர் ஓபன்” போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்சா அறிவித்து ஒரு பெரிய குண்டைப் போட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் விளையாடுவேன், இந்தியாவில் எங்குமே தைரியமாக விளையாடுவதற்கான சூழல் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
டென்னிஸ் வீராங்கனைகளுக்கே உரிய கச்சிதமான பாவாடையை அவர் அணிவது இஸ்லாமுக்கு எதிரானது என்று லக்னோவிலிருந்து லாலாபேட்டை வரை ஒரு முல்லா, மௌல்வி விடாமல் பிரசாரம் செய்து முடித்தாயிற்று. இந்த “ஹராமை” அவர் தொடர்ந்து செய்து வருவதற்கு எதிராக பல ஃபத்வாக்களும் விடப் பட்டிருக்கின்றன. அவர் போகுமிடங்களில் எல்லாம் இது பற்றிக் கேள்விகள் கேட்கப் பட்டு அவரை சங்கடத்திலும், அசௌகரியத்திலும் ஆழ்த்துகிறார்கள். இது போதாதென்று ஹைதராபத் மசூதி ஒன்றின் பின்னணியில் அவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் என்பதற்காக அவர் மீது வழக்குகள், மிரட்டல்கள். (அந்தப் புகைப் படத்தைப் பார்த்தால் அதில் மசூதி எங்கோ தூரத்தில் இருக்கிறது - அதற்கே இந்தக் கூப்பாடு). இந்த முரடர்கள் விளையாட்டு மைதானத்தில் வந்து ஏதாவது பைப் குண்டுகளை வீசி எறிந்து விட்டால் என்ன செய்வது என்று சானியா உண்மையிலேயே கவலைப் படுவதாகத் தெரிகிறது.

இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒரு துடிப்பான, அழகான விளையாட்டு வீராங்கனையை தங்கள் ‘icon” ஆக நினைப்பதில் பெருமைப் படுகிறார்கள். பல முஸ்லீம் கடைகள், வாகனங்கள், நிறுவனங்களில் அவரது குறுகுறு எழில்முகத்தை ப்ளோ அப்களில் பார்க்கிறேன். இத்தகைய வெகுஜன அங்கீகரித்தல்கள் தரும் தைரியத்தை விட சில முட்டாள் முல்லாக்களின் பயமுறுத்தல்களும், அவற்றை நிறைவேற்றும் தீவிரவாத குழுக்களும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையை முடக்கிப் போடும், நசுக்கும் அவலம் இந்த நாட்டில் நிகழ்கிறது.

அயன் ராண்ட் தமது Atlas Shrugged நூலில் ஒரு சுவாரசியமான கற்பனையை முன்வைக்கிறார். திறமைசாலிகள், சாதனையாளர்கள், பெரும் கனவுகளைக் காண்பவர்கள் (dreamers of dreams) தங்கள் திறனும் ஊக்கமும் முடக்கப் படும் சூழலில், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று. சாதனையாளர்களை நசுக்கும் தேசம் அவர்களால் புறக்கணிக்கப் பட்டு, பாழ்படும்.

நேற்று பிப்ரவரி-6 புதன் அன்று ஜபல்பூரில் அத்வானியின் முதல் பேரணி நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளோடு இந்தப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. அத்வானியின் அனைத்துப் பேரணிகளும் சில தேதி மாற்றங்களுடன் முன்பு அறிவிக்கப் பட்ட படியே திட்டமிட்ட எல்லா இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

இதே போன்று சானியாவும் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா? சானியாவின் உரிமைகள் நிலைநாட்டப் படுவது இந்த சுதந்திர நாட்டின் முதன்மையான கடமை.
http://jataayu.blogspot.com/

No comments: