Friday, 1 February 2008

சீனாவும் பாகிஸ்தானும்

Feb 1, 2008

ஹிந்துஸ்தானத்துக்கு சொந்தமான‌ ஒரு பகுதியை, "ஹிந்துஸ்தானத்தின் அங்கம்" தான் என்று "திட்டவட்டமாக" அறிவிப்புசெய்து பேசவேண்டிய அவ‌ல‌ நிலை நமது பிரதமமந்திரி மன்மோஹன்சிங்கிற்கு. இன்றய தினமணியிலும், விகடனிலும் வந்த செய்தி இது.


முகமதிய நாடான பாகிஸ்தான் ஒருபுறம் நாசவேலைகளை தொடர்ந்து செய்துவரும் வேளையில், ஆக்கிரமிப்பு வேலைகளை மறுபுறம் செய்துகொண்டிருக்கும் கம்யூனிஸ சீனாவைப்பற்றியும் அதிக விழிப்புணர்ச்சி அவசியம். இந்திய "தோழர்" க‌ளுக்கு ச‌ம்பந்த‌மில்லா‌த‌ விஷ‌ய‌மிது.
----------------------------------------------------

அருணாசலம் இந்தியாவின் அங்கம்: பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டம்

இடா நகர், ஜன. 31: "சூரியன் உதிக்கும் இந்திய மண் அருணாசலப்பிரதேசம் இந்தியாவின் பகுதி என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகக் கூறினார்.

பல்வேறு நலத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக வியாழக்கிழமை அருணாசலப் பிரதேசத்துக்கு வந்த மன்மோகன் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.

அருணாசலப் பிரதேசத்தை தங்கள் பகுதி என சீனா கூறிவரும் நிலையில் பிரதமர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இடா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசியது:

அருணாசலப்பிரதேசத்தில் இரண்டு மின் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. மேலும் சூரிய ஒளி மூலம் மின்னாற்றல் திட்டத்துக்கு ரூ. 550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்தொகை ரூ. 1,100 கோடியாக உயர்த்தப்படும்.

மாநிலத்தில் இருவழி நெடுஞ்சாலை அமைக்க ரூ. 5,500 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தப் பாதை மூன்று ஆண்டுகளில் நான்கு வழிப் பாதையாக தரம் உயர்த்தப்படும்.

வெள்ளம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட சாலையைச் சீரமைக்க ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் முடிவு பெறாத திட்டப் பணிகளை நிறைவேற்ற ரூ. 265 கோடியை திட்டக் கமிஷன் ஒதுக்கியுள்ளது.

இடா நகரில் ஒரு விமான நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குவஹாட்டி மற்றும் தவாங் பகுதியிலிருந்து நேரடி ஹெலிகாப்டர் வசதி விரைவில் தொடங்கப்படும்.

மாநிலத்தில் நீராதாரம் அதிகம் உள்ளது. இதன் மூலம் நீர் மின் நிலையங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் நிறுவப்பட்டால் ஆண்டு வருமானம் ரூ. 3 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 4,000 கோடி வரை கிடைக்கும்.

அருணாசலப் பிரதேச வளர்ச்சியில் காங்கிரஸ் அரசுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 40 ஆண்டுகளுக்கு முன்னர் யூனியன் பிரதேச அந்தஸ்து கிடைக்க வழிவகுத்தவர் இந்திரா காந்தி. 20 ஆண்டுகளுக்கு முன்னர் மாநில அந்தஸ்து வழங்கியர் ராஜீவ் காந்தி என்றார்.

இதற்கு முன்னர் 1986-ம் ஆண்டு திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது அருணாசலப் பிரதேசத்திற்கு பயணம் செய்துள்ளார்.

இங்குள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையையும் பிரதமர் பார்வையிட்டு மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
இது தவிர திட்டக் கமிஷன் மூலம் மேலும் ரூ. 30 முதல் ரூ. 40 கோடி அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

சூரியன் உதிப்பதைப் போல வடகிழக்குப் பிராந்தியத்திலிருந்து நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மன்மோகன் சிங்.

No comments: