Tuesday, 12 February 2008

முகமதுவுக்கு இறங்கிய குரான் பற்றி இப்னுபஷீர்

Thursday February 7, 2008
குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
இப்னு பஷீர்
இஸ்லாமின் அடிப்படை குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள். குர்ஆன் முழுக்க முழுக்க இறைவாக்கு என்பதும் அது இறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அந்த இறைவனாலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. இதை பல முஸ்லிம்களை விட நன்றாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள். இந்த நம்பிக்கையை எப்படியாவது தகர்த்து விட்டால் இஸ்லாமின் அடிப்படையையே தகர்த்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு இருக்கிறது போலும். அதனாலேயே 'குர்ஆன் இறைவாக்கு அல்ல' குர்ஆன் முஹம்மது நபியால் எழுதப் பட்டது' 'குர்ஆன் மாற்றம் செய்யப்பட்டது' என்பன போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் அவ்வப்போது முடுக்கி விடப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு வலைப்பதிவு கண்ணில் பட்டது. அதில் இப்படி எழுதியிருந்தார்கள்: "ஏமனில் 1972இல் ஒரு குரான் குகைக்குள் ஏராளமான பழங்கால குரான்களை ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த குரான்கள் கிமு 700இலிருந்து இந்த குகைக்குள் கிடக்கின்றன (அந்த கால வழக்கப்படி பழைய குரான்களை எரிப்பதோ அழிப்பதோ இல்லை. அவற்றை ஒரு குகைகுள் பூட்டி வைத்துவிடுவார்கள்). இந்த குரான்களை மைக்ரோபிலிமில் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஜெர்மனி சென்று இந்த குரான்களில் இருக்கும் ஏராளமான வித்தியாசங்களள ஆராய்ந்து வருகின்றனர் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள். இவ்ர்களிடம் 35000 மைக்ரோபிலிம் காப்பிகள் இருக்கின்றன. ஏமன் அரசாங்கம் இவர்கள் எடுத்தது அறிந்து இந்த குகையை மூடிவிட்டது. பல்வேறு வகை குரான்கள் இருந்திருக்கின்றன என்று தெரியவந்தால், இஸ்லாமுக்கு ஆபத்து என்று இந்த குகை மூடப்பட்டதாக தெரிகிறது."
இந்தப் பிரச்சாரகர்களின் பயனற்ற முயற்சிகளைக் கண்டு இவர்கள் மேல் பரிதாபம்தான் மேலிடுகிறது. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா? இயேசு கிருஸ்துவின் காலத்திற்குப்பின், அதாவது கி.பி.யில் தோன்றியவரே முஹம்மது (ஸல்) அவர்கள். அவர்களின் 40 வயதிலிருந்து சுமார் 23 ஆண்டு காலக்கட்டத்தில் சிறு சிறு பகுதிகளாக இறக்கப் பட்டது குர்ஆன். இது சரித்திர உண்மை. ஆனால் மேற்கண்ட தகவலின் படி கி.மு. 700லிருந்து குகைக்குள் பூட்டி வைக்கப் பட்டிருந்த குரான்களை ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்களாம். கி.பி-யைச் சேர்ந்த குர்ஆன் எப்படி கி.மு-வுக்கு சென்றது? குகையை எப்படி பூட்டுவார்கள்? 1972-ல் இதைக் கண்டுபிடித்த ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் 35 ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களது கண்டுபிடிப்புகளை வெளியிடாதது ஏன்? அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் இன்றைய குர்ஆனுக்குமிடையில் என்னென்ன வித்தியாசங்களை அவர்கள் கண்டு பிடித்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அந்த வலைப்பதிவில் விடையில்லை.
ஏதோ ஒரு வலைப்பதிவில் யாரோ ஒருவர் எழுதிய அபத்தமான ஒரு கட்டுக்கதையை நான் ஏன் திண்ணையில் எழுத வேண்டும் என்றால், அதற்கு காரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு கட்டுக்கதையை ஆதாரமாகக் கொண்டு, சென்ற வார திண்ணையில் நேசக்குமார் இப்படி எழுதுகிறார். "குரான் முஹம்மதின் மறைவுக்கு மிகவும் பிற்காலத்தில் பலவித மாற்றங்களுக்கு உட்பட்டு உருவானதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பல முக்கியமான மாற்றங்கள் குரானில் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் சரியோ தவறோ ஒரு குரானை மட்டுமே அரசு அதிகாரபூர்வமான குரானாக அறிவித்து ஏனைய குரான்களை எரித்துவிட்டதாலும், அதற்குப் பின்பும் குரான் தொடர்ந்து அடித்து திருத்தப்பட்டு எழுதப்பட்டிருப்பதை அரபு நாட்டு மசூதியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் சுவடிகளை ஆய்ந்து பார்க்கும்போது கண்டுபிடித்திருப்பதையும் இன்று செய்திகளில் பார்க்க முடிகிறது."
முந்திய கதையில் ஏமன் நாட்டு குகையாக இருந்தது பிந்திய கதையில் அரபு நாட்டு மசூதியாகியிருக்கிறது. 'ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள்' 'இன்றைய ஆய்வாளர்களாக' மாற்றம் பெற்றிருக்கிறார்கள். மற்றபடி கதையென்னவோ அதேதான். இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த மாற்றங்கள் என்னென்ன? எந்த நாட்டு அரசு ஒரு குரானை மட்டும் அதிகாரபூர்வமானதாக அறிவித்தது? அதற்குப் பிறகும் குரானின் எந்தெந்த வசனங்களெல்லாம் அடித்து திருத்தப் பட்டன? அவற்றை அடித்துத் திருத்தியவர்கள் யார்? கேள்விகள் நிறைய இருக்கின்றன. பதில்தான் வந்தபாடில்லை!
குர்ஆன் வசனங்கள் சிறு சிறு பகுதிகளாக இறங்கிக் கொண்டிருந்த பொழுதிலேயே, இறைத்தூதர் அவர்களின் காலத்திலேயே, ஓலைச் சுவடிகளிலும் ஏடுகளிலுமாக பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. அண்ணலாரின் மறைவுக்கு மறு ஆண்டு, உமர் அவர்களின் ஆலோசனையின்படி, அப்போதைய கலிஃபா அபூபக்கர் அவர்களின் காலத்தில் இறை வசனங்கள் மிகுந்த கவனத்துடன் ஒன்று சேர்க்கப்பட்டு குர்ஆனின் முதல் முழு எழுத்துப் பிரதி உருவாக்கப் பட்டது. இவ்வாறு ஒன்று சேர்த்து எழுதப்பட்ட முதல் குர்ஆன் பிரதி இன்றும் இருக்கிறது. குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என வாதிடுபவர்கள் இந்த முதல் குர்ஆன் பிரதியோடு ஒப்பிட்டு மாறுபடுவதை விளக்கமாக எடுத்து வைத்து எழுதலாம்.
ஒலி வடிவில் இருந்த குர்ஆன் எழுத்து வடிவில் ஆக்கப் பட்டதை வைத்து 'குர்ஆன் மாறுதலடைந்தது' என்று கூட சிலர் வாதிடுகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப் பட்ட பதில் திண்ணையில் இந்தச் சுட்டியில் இருக்கிறது.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610193&format=html
திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!
குர்ஆன் தொகுக்கப் பட்டதையும் மாற்றங்கள் எதுவுமின்றி பாதுகாக்கப் பட்டிருப்பதையும் பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்களுக்கு இந்தச் சுட்டியில் உள்ள நூலை பரிந்துரைக்கிறேன்.
http://www.a1realism.com/alquran/Holy_Quran_An_Introduction.htm#003
வான்மறை குர்ஆன் ஓர் அறிமுகம்
ibnubasheer@gmail.com
http://ibnubasheer.blogsome.com

No comments: