Friday, 15 February 2008

திப்பு பற்றிய இப்னுபுஷீரின் நகைச்சுவை தொடர் பாகம் இரண்டு !!

Thursday February 14, 2008
திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் - 2
இப்னு பஷீர்

காந்திஜி 'யங் இந்தியா' 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;
'மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது. அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.'
மேலும்சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்' னவும் காந்தி 'யங் இந்தியா'வில் எழுதினார். விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?
சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது 'Present Cresis of Faiths' என்ற நூலில் குறிப்பிட்டார், 'திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.' கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்? இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?
'இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்' என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார். ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, '3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை' ன்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?
இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். 'Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company' என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு. முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான 'ஆயுதமான' பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************
'பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************
திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து, திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது 'காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?' என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா. முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
'திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர். சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்' என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். 'திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக' காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
http://ibnubasheer.blogsome.com/

No comments: