Wednesday 18 November, 2009

370 – ஆவது பிரிவை ஏன் ரத்து செய்ய வேண்டும் ?

துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஆகஸ்ட் 6‍ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது. *********************************

370 – ஆவது பிரிவை ஏன் ரத்து செய்ய வேண்டும் ? – எல்.கே. அத்வானி
-->என் தேசம், என் வாழ்க்கை - 28ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரையில், நேரு காலத்து தேவையற்ற மரபுரிமைக்கு மற்றொரு உதாரணம் 370-ஆவது சட்டப் பிரிவின் தொடர்ச்சி. நேருவுக்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை இன்று வரை பெருமையாகத் தொடரச் செய்துகொண்டிருக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பிறகு, தாற்காலிகமாகச் செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு, கிட்டத்தட்ட நிரந்தரமானதாக, மாறுதலற்ற அந்தஸ்துடன் தொடர்வதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல்தான்.

இந்தியாவுடன் ஜம்மு – காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டபோது, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்று அம்சங்களை மட்டுமே மத்திய அரசிடம் விட்டார். சர்தார் பட்டேல் ஹைதராபாத் நிஜாமிடம் நடந்து கொண்டது போல, திறமையான முறையில் நேரு செயல்படத் தவறிவிட்டார். அப்படிச் செயல்பட்டிருந்தால், காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக, நிபந்தனையற்ற முறையில், எந்தவிதத் தனி அதிகாரமும் இல்லாததாக, அந்த இணைப்பு முடிந்திருக்கும். ஜம்மு – காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை, அந்த மாநில அரசியல் நிர்ணய சபையின் தீர்மானத்தின் மூலம் செய்ய வேண்டும் என்று மௌண்ட் பேட்டன் தந்த நெருக்குதலுக்குச் சம்மதித்து, நேரு தவறிழைத்தார்.

இந்தச் சலுகை வேறு எந்த மன்னராட்சிப் பகுதிக்கும் தரப்படாதது. இந்தியாவின் எல்லா மன்னராட்சிப் பகுதிகளையும், இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை சர்தார் படேல் ஏற்றுச் செயல்பட்டாலும், ஜம்மு–காஷ்மீர் விவகாரத்தை நேரு தனது நேரடி பொறுப்பில் வைத்துக்கொண்டார் என்பதை நினைவில்கொள்ள வேண்டியது அவசியம். ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பு சர்தார் படேலிடம் விடப்பட்டு இருக்குமானால், இன்று காஷ்மீர் பிரச்சனை என்ற ஒன்று இருந்தே இருக்காது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபை, இணைப்பை ஏற்று அங்கீகரிக்கிற வரையில் தாற்காலிக ஏற்பாடாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370-ஆவது பிரிவின் வடிவத்தில் சில சலுகைகள் வழங்கப்பட்டன. 370-ஆவது பிரிவு பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர மற்றச் சட்டங்களை நிறைவேற்ற இந்தியப் பாராளுமன்றத்திற்கு, மாநிலத்தின் ஒப்புதல் அவசியம் என்று குறிப்பிடுகிறது. ஆக, மாநில நிர்வாகத்திற்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஜம்மு – காஷ்மீர் தனி அந்தஸ்து பெற்றது என்று, மாநிலத்தின் பெரும்பாலான முதலமைச்சர்கள் வலியுறுத்த இந்தச் சலுகை காரணமாகி விட்டது.

1950-ஆம் ஆண்டே ஜம்மு – காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை, அம்மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்துவிட்டது. அதன் பிறகு 1956-ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாநில அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு ‘ஜம்மு – காஷ்மீர் மாநிலம், இந்திய யூனியனின் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது. அப்படியே தொடரும்’ என்கிறது. எந்தவொரு நேரத்திலும் கொண்டு வரப்படும், எந்தத் திருத்தத்திற்கும் அப்பாற்பட்டதாக இந்தப் பிரிவு விதிவிலக்குப் பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து 1956-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஏழாவது திருத்தம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவின் கீழ் ஜம்மு – காஷ்மீரை இந்திய மாநிலங்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டது.

...இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின் உட்பிரிவுகள் (i), (e) (g) ஆகியவை, ஒரு இந்திய பிரஜை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சென்று வாழவும், அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடவும் உரிமை அளிக்கிறது. மேலும், நாட்டின் எந்தவொரு பகுதியில் சென்று தொழில் செய்யவும், வேலை பார்க்கவும், வர்த்தகம் செய்யவும், வியாபாரத்தில் ஈடுபடவும் உரிமை அளிக்கிறது. ஆனால், 370-ஆவது பிரிவு இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள், காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியமரும் உரிமையைப் பறிக்கிறது. ஜம்மு – காஷ்மீரில் பிறந்து வளர்ந்த பெண்ணின் உரிமையைக் கூட இந்தச் சட்டப் பிரிவு மறுக்கிறது. மாநிலத்தின் நிரந்தரப் பிரஜையாக உள்ள ஒரு பெண், மாநிலத்திற்கு வெளியே உள்ள நபரைத் திருமணம் செய்து கொண்டால், அவளது சொத்துக்கள் பறிபோய்விடும். தனது மூதாதையர் மூலம் தனக்கு வரும் சொத்தின் உரிமையும் அவளுக்குப் பறிபோய்விடும்.

எங்கள் கட்சி, அது பாரதிய ஜனசங்கமாக இருந்தபோதும், பாரதிய ஜனதா கட்சியாக ஆன பிறகும், பிரிவு 370-ஐத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. ஜம்மு – காஷ்மீரை முற்றிலுமாக இந்திய யூனியனுடன் இணைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி பலமுறை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. வேறு எந்தப் பிரச்சனைக்கும் இல்லாத அளவிற்கு, இந்த பிரச்சனைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் எண்ணிக்கையே அதிகம்.

தனது இறுதிக் காலத்தில், குறிப்பாக 1962-ஆம் ஆண்டு சீன ஆக்ரமிப்பில் தோல்வி கண்ட கசப்பான அனுபவத்தினால், நேருவே 370-ஆவது பிரிவைப் பற்றிய யதார்த்தமான உணர்வுக்கு வந்துவிட்டார். 1963-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி மக்களவையில் அவர், “அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி 370-ஆவது பிரிவு தாற்காலிகமான ஒன்று என்பதே எங்கள் கருத்து. உள்துறை அமைச்சர் குறிப்பிட்டது போல, இந்திய யூனியனுக்கும் காஷ்மீருக்கும் இடையில் நாம் உண்டாக்கி இருக்கிற உறவை, இந்தப் பிரிவு இல்லாமல் செய்துவிட்டது. காஷ்மீர் இந்தியாவில் முழுமையாக உள்ளடங்கிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. எனவே 370-ஆவது பிரிவை நீக்கும் நடவடிக்கையைப் படிப்படியாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று பேசினார். ...

தேசிய ஜனநாயகக் கூட்டணிஆட்சி பதவி ஏற்றபோது, காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்கக் கோரும் தீவிரவாத பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. அது சவாலான சூழ்நிலை என்பதும் ஜம்மு – காஷ்மீரில் அமைதி, சகஜ நிலை, ஜனநாயகம் ஆகியவற்றைத் திரும்பக் கொண்டு வருவதும், சதுப்பு நிலத்தில் பயணம் செய்வது போன்று கடினமானது என்றும் தெரிந்திருந்தது. கடினமான சவாலைச் சமாளிக்கும் திறனைக் கொண்டுதான் வரலாறு, ஆட்சியாளர்களின் செயல்பாட்டைக் கணிக்கிறது. எங்கள் ஆட்சியில் அந்த வகைக் கணிப்புக்கு உரியதாக காஷ்மீர் சூழ்நிலை இருந்தது.

...2000-ஆவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் வாஜ்பாய் ஜம்மு – காஷ்மீருக்கு விஜயம் செய்தார். ‘மாநில மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற எந்தக் குழுவுடனும் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறது’ என்று அறிவித்தார். அரசியல் சூழ்நிலையில் அது பெரிய திருப்பு முனையாக இருந்தது. பின்னர் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில், தன்னிச்சையான போர் நிறுத்த அறிவிப்பைச் செய்தார்.

அந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களிடம் உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் கட்சி ஹிந்து தேசியவாதக் கட்சி என்று, பாகிஸ்தான் செய்திருந்த பிரச்சாரத்தால், மக்களிடம் பதிந்திருந்த சந்தேகம் விலகியது. காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்று உண்மையாகவும் நேர்மையாகவும் விரும்புகிறோம் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. முன்பு அடல்ஜி மேற்கொண்ட லாகூர் பஸ் பயணமும், பாகிஸ்தான் செய்த கார்கில் துரோகமும் அதேபோன்ற விளைவை உண்டாக்கி இருந்தன. நாங்கள் மெதுவாக, ஆனால் நிச்சயமாக, காஷ்மீரிகளின் இதயத்தையும், மனதையும் வெற்றிகொள்ளத் துவங்கினோம்.

எங்களது பெரிய சோதனை 2002-ஆம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதில்தான் இருந்தது. நான் முன்பே குறிப்பிட்டதுபோல, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும்போது தேர்தல் தில்லுமுல்லுகள் நீண்ட பட்டியல் கொண்டதாக இருந்தது. அந்தப் போக்கினால் காஷ்மீர் மக்களிடம், மக்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும், டெல்லி அரசாங்கம் தான் விரும்பும் நபரைத்தான் ஸ்ரீநகரில் ஆட்சியில் அமர்த்தும் என்ற எண்ணம் பதிந்து போய் இருந்தது. மக்களின் இந்த மனக்குறையை பாகிஸ்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. ஜம்மு – காஷ்மீரில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்படும், மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைத்துக்கொள்ளும் வகையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி அளித்தது.

...எங்கள் உறுதிமொழியை மக்கள் நம்பவில்லை. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது கூட்டணிக் கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியைத்தான் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விரும்பும் என்று நினைத்தனர். ஆனால், அப்துல்லா மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவாக இல்லை. ‘மாநிலத்தில் சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்’ என்பது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத, மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு அபாய அறிவிப்பாக ஒலித்தது. தேர்தலுக்கு முன்பு அரசியல் தொண்டர்கள், வேட்பாளர்களாகக் கூடியவர்கள் என்று இருந்தவர்கள், ஜனநாயகத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகள் என்று 250 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

...எனினும் ஓட்டுக்கும், தோட்டாவிற்கும் இடையிலான யுத்தத்தில் ஓட்டே வெற்றி பெற்றது.

...இப்போது திரும்பிப் பார்க்கையில் ஜம்மு – காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்ததன் மூலம், முழு அளவில் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சகஜ நிலையை ஏற்படுத்தியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் பெரிய சாதனையாகத் தெரிகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கேட்கும் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து அமைதி திரும்பியது. மக்களும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியான சூழ்நிலையை உணர்ந்தார்கள்.

...ஜம்மு – காஷ்மீர், மீண்டும் அமைதி, ஆனந்தம், சௌஜன்யம் ஆகியவை நிறைந்த வாழ்வின் ஆலயமாகும் என்று நம்புகிறேன். அதற்காகப் பிரார்த்திக்கிறேன்.

Copyright(c) thuglak.com

No comments: