Wednesday, 18 November 2009

சிந்துவில் எனது முதல் இருபது ஆண்டுகள்

சிந்துவில் எனது முதல் இருபது ஆண்டுகள் – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 2


நான், 1927ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, கராச்சியில் பிறந்தேன். எனது தந்தை கிஷன்சந்த். தாயார் க்யானிதேவி. எனக்கு ஒரு இளைய சகோதரி. பெயர் ஷீலா. இதுதான் எங்கள் குடும்பம். ஜம்ஷட் காலனியில், எங்கள் வீடு இருந்தது. நான் பிறந்த பிறகு கட்டிய வீடு என்பதால் அதற்கு "லால் காட்டேஜ்' என்று பெயரிட்டிருந்தார்கள். ஓரளவு விசாலமாக – அழகாக வடிவமைக்கப்பட்ட ஒற்றைத்தள பங்களா அது...

...பம்பாய் ராஜதானியின் பெரும்பாலான பகுதிகளில், தந்தையின் பெயரை நடுப் பெயராகப் பயன்படுத்தும் பொதுவான வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு, மஹாத்மா காந்தியின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இதில் அவரது பெயர் மோகன்தாஸ். அவரது தந்தையின் பெயர் கரம்சந்த். குடும்பப் பெயர் காந்தி. இவை மூன்றும் சேர்ந்ததுதான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அதுபோல, என் பெயர் எல்.கே. அத்வானி. அதாவது லால் கிஷன்சந்த் அத்வானி. என் பெயர் லால். ஆமாம், லால் என்பது மட்டும்தான் எனது பெயர். கிஷன்சந்த் என்பது என் தந்தையின் பெயர். மற்றவர்களால் என் பெயர் கிஷன்சந்த் என்று குறிப்பிடப்பட்டு, பிறகு கிருஷ்ணா என்று குறிப்பிடப்பட்டு, லால் கிருஷ்ண அத்வானி – பிறகு எல்.கே. அத்வானி என்று குறிப்பிடப்படுகிறேன். அத்வானி என்பது எனது குடும்பப் பெயர்...


...அப்போது எனக்குப் பதினான்கு வயது முடிந்து, சில மாதங்கள் ஆகி இருந்தன. நான் மெட்ரிகுலேஷன் முடித்ததும், என் தந்தை சிந்துவின் கராச்சியில் இருந்து ஹைதராபாத்திற்கு (பாகிஸ்தான்) குடியேறினார். கல்லூரியில் சேர்வதற்கு முந்தைய கோடை விடுமுறை சமயம். நான், டென்னிஸ் விளையாடத் துவங்கியிருந்தேன். முரளிமுகி என்று ஒரு நண்பன். அவன்தான் என்னுடன் டென்னிஸ் விளையாடுவான். ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தபோது, விளையாட்டின் நடுவில் முரளி "நான் போகிறேன்' என்றான்.


எனக்கு ஆச்சரியம். "ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தைக் கூட முடிக்காமல் எப்படிப் போகலாம்?' என்றேன். அதற்கு முரளியோ, "நான் சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ். எஸ்.ஸில் சேர்ந்திருக்கிறேன். நேரம் தவறாமை அந்த அமைப்பில் முக்கியம். பயிற்சிக்கு தாமதமாகப் போக முடியாது' என்றான்.
ஆர்.எஸ்.எஸ். பற்றிய அறிமுகம் இப்படித்தான் உண்டாயிற்று. ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பற்றி மேலும் விவரம் தெரிந்துகொள்ள, முரளியிடம் கேட்டேன். அவன் "நீயும் என்னுடன் வரலாம்' என்றான். நான், அன்று போகவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, நண்பனுடன் ஷாகாவிற்குப் போனேன். அப்போது சிந்துவில் ராணுவச் சட்டம் அமலில் இருந்தது. பொது இடங்களில், பயிற்சி நடத்தத் தடை நிலவியது. அதனால் ராம்கிருபளானி என்பவரது பங்களாவின் மொட்டை மாடியில் ஷாகா நடந்தது. அதில் முதல் முறையாகக் கலந்துகொண்டேன். அன்று தொடங்கி, இன்று வரையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீது தீவிரமான பற்றுக்கொண்ட, அதற்காகப் பெருமைப்படும் ஸ்வயம் சேவக்காக நிலைத்திருக்கிறேன்...


...ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகாவில் பங்கு கொண்ட பிறகுதான், இந்தியாவிலும், உலக அரங்கிலும் நிகழ்ந்துகொண்டிருந்த முக்கிய அரசியல் மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பயிற்சி வகுப்பில் ஒருநாள், ஷியாம் தாஸ் உரை நிகழ்த்தினார். அறிவுபூர்வமான சொற்பொழிவு அது. அப்போது அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்

""இந்தச் சமுதாயத்தில் இருந்து, நீங்கள் நிறையப் பெறுகிறீர்கள். ஆனால் எதைத் திருப்பித் தருகிறீர்கள்? தர வேண்டியது உங்கள் கடமை அல்லவா? இந்தியா இப்போது, அன்னியர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. நமது தாய் நாட்டை மீட்பது, நமது பொறுப்பல்லவா?'' என்றார். ஷியாம் தாஸின் அந்த வார்த்தைகள், எனது உள் உணர்வின் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தன. சுய விசாரணையின் பாதைக்கு என்னை அழைத்துச் சென்றன.

....முஸ்லிம் லீக், பாகிஸ்தான் என்ற பெயரில், முஸ்லிம்களுக்கான தனி நாடு ஒன்றை, இந்தியாவில் இருந்து பிரிக்கத் திட்டமிடுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின்முன்னோடிகளின் பேச்சின் மூலம் தெரிந்துகொண்டேன். "இரு தேசக் கொள்கை' என்ற கோஷத்தை, முதன் முதலாகக் கேள்விப்பட்டபோது, மின்சாரம் பாயும் கம்பியைத் தொட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அந்த யோசனை அருவருப்பும், வெறுப்பும் மிகுந்த ஒன்றாகவே எனக்குப்பட்டது.

ஒருநாள் எனது நாடு, இரண்டு துண்டாக வெட்டப்படும் என்பதை, எனது தாய் மண் "பாகிஸ்தான்' என்ற புது நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என்பதை, கற்பனையாகக் கூட என்னால் ஏற்க முடிந்ததில்லை.

"இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால், விடுதலைக்கு விலையாக நாட்டைத் துண்டாட வேண்டுமா?' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். முஸ்லிம் லீக்கின் இந்த கொடுமையான கோரிக்கையை அறிந்ததும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீதான எனது பிடிப்பு மேலும் அதிகரித்தது என்பதை ஒப்புக்கொள்வதில், எனக்குக் கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லை.

...நான் பார்த்த முதல் உத்தியோகம் பள்ளி ஆசிரியர். கராச்சி மாடல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது என் வயது பதினேழு. ஐந்தாவது மற்றும் ஆறாவது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு – ஆகிய பாடங்களைப் போதித்தேன். அந்தக் காலத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காகத் தனியாக டிப்ளமாவோ, டிகிரியோ அவசியமாக இருக்கவில்லை. மிகவும் குறைந்த வயதில் ஆசிரியராகச் சேர்ந்திருந்தேன். அதனால், என்னிடம் பாடம் பயிலும் மாணவர்களில் பலரும் எனது வயதிற்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள்....

...சீக்கியரான ஹீராசிங் என் வகுப்புத் தோழன். என் வீட்டிற்கு அருகில்தான், அவன் வீடும் இருந்தது. எங்கள் ஷாகாவின் தீவிர ஸ்வயம் சேவக்காக இருந்தவன். பிரிவினையைத் தொடர்ந்து, நகரில் இனக் கலவரம் மூண்டது. அதில், ஹீராசிங்கின் குடும்பம் கடுமையான துன்பத்தைச் சந்தித்தது. இந்தியாவிற்குத் தப்பித்து வரவேண்டி நேர்ந்தது. அப்படி வரும்போதும், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தலைமுடியை வெட்டி, தாடியை மழித்துக்கொள்ள வேண்டிய அவலத்தை, ஹீராசிங்சந்தித்தான். அந்த அனுபவம், அவனை நிலைகுலையச் செய்துவிட்டது. மனநிலை பாதிப்பால், நீண்டகாலம் துன்பப்பட்டான். பம்பாயில் குடியேறிய ஹீராசிங்கை நான் அவ்வப்போது சந்திப்பது வழக்கம். அந்தச் சம்பவத்தின் துன்ப நினைவுகளின் வடுக்கள், இன்னமும் ஹீராசிங்கிடம் நிலைத்திருக்கின்றன.

...தனது மத நம்பிக்கையிலும், அதைப் பின்பற்றுவதிலும், ஜின்னா எவ்வளவு நல்ல முஸ்லிமாக இருந்தார் என்று எனக்குத் தெரியாது. பிரிட்டிஷாருக்கு அடுத்தபடி, இந்தியாவை மதரீதியாகப் பிரிப்பதில், முக்கிய நபராகத் திகழ்ந்தார் என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது.

"ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறு தேசங்களைச் சார்ந்தவர்கள். நாங்கள் ஒருநாளும் கூடி வாழ முடியாது' என்று அவர் 1940ல் அறிவித்தார். அதே சமயம், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டபின் அவரால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானே, அவரது முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

விரிவாக ஆராய்ந்து, தகவல்களைச் சேகரித்து, ஜின்னாவைப் பற்றி எழுதியடாக்டர் அஜித் ஜாவேத்வின் கூற்றுபடி, அவர் வருத்தமும் நோயும் தாக்கப்பட்ட மனிதராக இருந்தார். அவர் பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம், "நான் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டேன். நான் டெல்லிக்கு போய், நேருவைச் சந்தித்து "கடந்த கால முட்டாள்தனத்தை எல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் நண்பர்களாகிவிடலாம்' என்று சொல்ல விரும்புகிறேன்' என்று வேதனையால் அழுதார்.

1937ல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்ப, தன்னை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்து, முஸ்லிம் லீகின் தலைமையை ஏற்க வைத்த லியாகத் அலியை, அவர் வெறுக்கவும் ஆரம்பித்தார் என்கிறார் அஜீத் ஜாவேத்.
பிரிவினையின் போது கராச்சியின் "டெய்லி கெஸட்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.எஸ்.எம். சர்மா, ஜின்னாவிற்கு நெருக்கமாக இருந்தவர். பாகிஸ்தானில் ஜின்னாவின் இறுதி ஆண்டு பற்றி, பல உண்மை நிகழ்வுகளை, சர்மா பதிவு செய்திருக்கிறார். நோய்வாய்ப்பட்ட உடல்நிலையைத் தவிர, மனப்போராட்டத்தின் துன்பத்தில் தவித்த மனிதராக, ஜின்னாவை சித்தரிக்கிறார்.

""ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என்ற முந்தைய தனது பழைய நிலைக்குத் திரும்பி விட, அவர் மிகவும் விரும்பினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடுகிறவராக பல ஆண்டுகள் இருந்தது போல, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நன்மைக்காகப் போராடுபவராகத் தொடர விரும்பினார்'' என்கிறார் சர்மா.

ஜின்னா, சர்மாவிடம், ""நண்பரே, பாகிஸ்தானின் ஹிந்து சிறுபான்மையினரின் புரடெக்டர் ஜெனரலாக நான் என்னை நியமித்துக்கொள்ளப் போகிறேன்'' என்று கூறியிருக்கிறார். கராச்சியில், ஹிந்து அகதிகள் முகாம் ஒன்றைப் பார்வையிட்ட போது, அவரது கண்களில் கண்ணீர் வழிந்திருக்கிறது.

ஜின்னாவைப் பற்றி இப்படிப்பட்ட செய்திகள் இருந்தாலும், நான் முதல் அத்தியாயத்தில், பாகிஸ்தானில் நிலவியதை விவரித்த சூழ்நிலை முற்றிலும் மாறானது. பாகிஸ்தான் அமைந்த பின், கராச்சி மற்றும் சிந்து மாகாணத்தின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்களின் வாழ்க்கையில் கவிந்த அச்சத்தையும், பயத்தையும், உண்டாக்கின. ஜின்னாவின் வார்த்தைகளோ, செயல்களோ அவர்களின் அச்சத்தையும், பயத்தையும் போக்கவில்லை. சிந்துவில் எனது கடைசி நாட்கள், துன்பமும் துயரமும் நிறைந்த நாட்கள் என்பதே உண்மை.

No comments: