Wednesday, 18 November 2009

பிரிவினை : யார் பொறுப்பு ?

பிரிவினை : யார் பொறுப்பு ? – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 3


..அவசர, அவசரமாக வரையறுக்கப்பட்ட எல்லையின் இரண்டு பக்கங்களிலும், பிரிவினைக் கலவரத்தில் ஹிந்துக்கள், சீக்கியர் மற்றும் முஸ்லிம்கள் என்று சுமார்பத்து லட்சம் பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவசரக் கோலத்தில் – அறிவற்றமுறையில், எல்லையை வரைந்த பிரிட்டிஷாரின் செயலால், மனித இன வரலாற்றில், முன் எப்போதும் இருந்திராத வகையில், மிகப்பெரிய மக்கள் கூட்டம் இடம் விட்டு இடம் பெயர்ந்தது. வெறும் ஆறுமாத காலத்தில் ஒரு கோடிக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்கள், அகதிகளாகிவிட்டனர். ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என்று வேறுபாடில்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி துன்பப்பட்டார்கள். பிரிவினைத் தீமை தாங்க முடியாதது. ஆனால், அது செயல்படுத்தப்பட்ட விதம் உண்டாக்கிய அளவிட முடியாத வலியும், அதன் நினைவுகளும் பல காலம் நீடிக்கிற அளவு மோசமானவை.


பிரிட்டிஷார் வெளியேறுகிறார்கள் என்பதற்காக, பல நூற்றாண்டு காலம் தங்களது குடும்பங்கள் வாழ்ந்த வீடுகளையும், கிராமங்களையும் விட்டுத் தாங்கள் ஏன் வெளியேற வேண்டும் என்று மக்கள் வியப்படைந்தார்கள்.
பிரிவினை தொடர்பாக அதன் பிறகு வந்த வருடங்களில், நான் ஏராளமான தகவல்களைப் படித்தேன். அதில் சாதாரணமான இரண்டு அகதிகளின் கருத்துக்கள் என் மனதை ஆழமாகத் தொட்டன. பஞ்சாபைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கிராமவாசி, ""இந்த நாடு பல ஆட்சி மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. ஆட்சியாளர்கள் வந்தார்கள், போனார்கள். ஆனால், ஆட்சியாளர் மாறியதால், மக்களும் இடம் மாற வேண்டும் என்று இப்போதுதான் நிர்பந்திக்கப்படுகிறார்கள்'' என்றார். அதே போல ஹிந்து மூதாட்டி ஒருவர் பண்டித நேருவிடம், ""பாகப் பிரிவினை எல்லா குடும்பங்களிலும் நடத்திவைக்கப்படுகின்றன. இந்தப் படுகொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் ஏன் நடக்கின்றன? இந்தக் குடும்பப் பிரிவினையை அறிவார்ந்த முறையில் உங்களால் செய்ய முடியாதா?'' என்று கேட்டார்.

மகத்தான இந்தியக் குடும்பத்தின் பிரிவினைக்கும், அதைத் தொடர்ந்து வந்த படுகொலைகளுக்கும் யார் பொறுப்பு? அடிப்படையில், முஸ்லிம் லீக்தான் குற்றவாளி என்பேன். முஸ்லிம் லீகின் இரு தேசக் கோட்பாடு – பாகிஸ்தான் என்ற முஸ்லிம் தனிநாடு கோரிக்கை – மோசமான தவறு! இரு தேசக் கோட்பாட்டில் சமூக – கலாச்சார – ஆன்மீக – உண்மை எதுவும் இல்லை.
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இரு வேறு தேசத்தவர் என்ற வாதம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே வரலாற்றுக்கு உரியவர்களாக வாழ்ந்தவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். முஸ்லிம் தனிநாடு கோரிக்கை தவறு. அதை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறை அதைவிடப் பெரிய தவறு.


1946 ஆகஸ்டு 16ஆம் தேதி, முஸ்லிம் லீக், பாகிஸ்தான் என்னும் தனிநாடு கோரிக்கையை, உடனடியாக ஏற்க வேண்டும் என்று கூறி, "நேரடி நடவடிக்கை' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தது. அதன் விளைவாக, கல்கத்தாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் – பெரும்பாலும் ஹிந்துக்கள், கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல் நடவடிக்கை "நீண்ட வாள்களின் வாரம்' என்று குறிப்பிடப்பட்டது.

கல்கத்தா படுகொலைகள் உண்டாக்கிய பயமுறுத்தலைத் தொலைதூரத்தில்கராச்சியிலும் உணர முடிந்தது. பிரிவினைக்குப் பிறகு நடக்கப் போகிற பயங்கரங்களுக்கு இந்த ரத்தக்களறி ஒரு முன்னோட்டம் என்று அப்போது யாராலும் கணிக்க முடியவில்லை.

ஆனால், பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டும்தான் காரணமா? நான் அப்படி நினைக்கவில்லை. 1857ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக இந்தியாவைத் துண்டாடிவிட்டார்கள்.....

...1947 பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர் க்ளடிமெண்ட் அட்லி, ""ஒன்றுபட்ட அல்லது பிரிக்கப்பட்ட இந்தியாவில், இந்தியர்களிடம் 1948 ஜூன் மாதத்திற்கு முன் ஆட்சியை ஒப்படைத்துவிட அரசு முடிவு செய்திருக்கிறது'' என்று அறிவித்தார்.

1947 மார்ச் மாதம் மௌன்ட் பாட்டன் இந்தியா வந்து சேர்ந்ததும், ஐந்து மாத குறுகிய இடைவெளியில், வெறி பிடித்த வேகத்தில், 1947 ஆகஸ்டில் இந்தியப் பிரிவினையை முடித்துவிட்டார். நிதானமற்ற இந்த நடவடிக்கை, பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி சிறிதும் அக்கறையோ கவலையோ படாமல் செய்து முடித்தார். வன்முறை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும், அதைச் சமாளிக்க சரியான திட்டம் இல்லை என்பதும், மௌன்ட் பாட்டனுக்கு நன்றாகத் தெரியும்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் நில வரைபடங்களை சிரில் ரேட் க்ளிப் வரைந்தார். அவற்றின் விவரம் மிகமிக ரகசியமாகக் காக்கப்பட்டன.
எல்லைக்கோட்டிற்கு இருபுறமும் வாழும் மக்களும், அதைப் பற்றிய தகவல் எதையும் அறிய முடியாத நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்தப் போக்கு மிகப்பெரிய, நிச்சயமற்ற சூழ்நிலையை, மக்கள் மத்தியில் உருவாக்கியது இயற்கை. நிச்சயமற்ற தன்மையின் விளைவாகச் சந்தேகம் எழுகிறது. அது அக்கம்பக்கத்தில் வாழும் மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைத் திருப்புகிறது. மத ரீதியான வேகம் பரவிய சூழலில் சந்தேகம் அதிகமாகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு திடீரென்று குலைந்த நிலையும் சேர்ந்தது. சகோதரக் கொலை வன்முறையாகத் தீவிரமடைந்தது. இந்த அவமானகரமான செயல் ஏற்படுத்திய கசப்பும், வேற்றுமையும், துயரம் நிகழ்ந்த அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணமாக நிலைக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையில் நல்லுறவு ஏற்பட முடியாமல் தடுக்கிறது.
எவ்வளவோ கசப்பான நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதே சமயம், பக்கத்து வீட்டுக்காரரை, பக்கத்து வீட்டுக்காரர் காப்பாற்றிய நிகழ்ச்சிகளும் ஏராளம் என்பதும் உண்மை. இந்த ஊக்கம் தரும் செயல்கள், நம்பிக்கை – சகோதரத்துவம் என்ற ஒளியை அணையாமல் காத்தன. எனினும், இந்தத் தனிமனித அன்பின் அடையாளத்தால் பிரிவினைக் கலவரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை, துக்கத்தை, வலியைக் குறைத்துவிட முடியவில்லை...

...விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களிடம், தேசப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியன் கொண்டிருக்கும் நன்றி உணர்வும், மரியாதையும் எனக்கும் உண்டு. இருந்தாலும் "ஒரு நாடு மாபெரும் விபத்தைச் சந்தித்தபோது, நமது தலைவர்கள், இந்தியாவின் ரத்தக்களறியான பிரிவினையைத் தவிர்க்க, வேறு மாதிரிச் செயல்பட்டிருக்க வேண்டுமோ?' என்று கேள்வி எழுவது இயற்கை.

ந்த விஷயத்தில் பிரபல சோஷலிஸ்ட் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் கணிப்பை என்னால் ஏற்க முடிகிறது. டாக்டர் லோகியா தனது"த கில்டி மென் ஆஃப் பார்டிஷன்' என்ற புத்தகத்தில், ""மகாத்மா காந்தியைத் தவிர மற்றெல்லாத் தலைவர்களும், நீண்டகாலப் போராட்டத்திற்குப் பின் களைப்படைந்து விட்டிருந்தார்கள்.

""இந்தியா சுதந்திரம் அடைவதை, தங்களது வாழ்நாளில் கண்டுவிட விரும்பினார்கள். காந்திஜியின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் பிரிவினைக்குச் சம்மதித்தார்கள். ஹிந்து, முஸ்லிம் பிரச்சனைக்கு, பிரிவினைதான் சிறந்த விரைவான தீர்வு என்று மௌன்ட் பாட்டன், அவர்களை நம்பவைத்து விட்டார். விரும்பிச் செய்யப்பட்ட தவறு இல்லை; சீர்தூக்கிப் பார்ப்பதில் நிகழ்ந்த தவறு என்பது வெளிப்படையானது'' என்று குறிப்பிடுகிறார்.

பிற்காலத்தில் பண்டித நேருவே ""நாங்கள் பிரிவினையைப் பற்றி முடிவு செய்தபோது, பிரிவினைக்குப் பிறகு இந்த இருதரப்பு பயங்கரக் கொலைகள் நிகழும் என்று நாங்கள் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. இம்மாதிரிச் சம்பவம் நிகழக்கூடாது என்ற எண்ணத்தில்தான் நாங்கள் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டோம். அதற்காக நாங்கள் இருமடங்கு விலையைக் கொடுத்துவிட்டோம். முதலாவது அரசியல் ரீதியான – கொள்கை ரீதியான விலை. இரண்டாவது – நாங்கள் எதைத் தவிர்க்க முயற்சித்தோமோ அதுவே நடந்தது'' – என்றார்.

பின்னாளில் சர்தார் படேலும் கூட, ""பிரிவினைக்குச் சம்மதித்திருக்கவே கூடாது. சமுத்திரத்தை அல்லது நதியின் நீரை நீங்கள் பிரிக்கவே முடியாது'' என்று சொன்னார். இறுதி வரையில் பிரிவினைக்கு இணங்காமல் நின்றவர் மஹாத்மாகாந்தி மட்டும்தான்.
****

No comments: