அயோத்தி பிரச்சனை! – எல்.கே. அத்வானி
என் தேசம், என் வாழ்க்கை 20
டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் நடந்தவை, வரலாற்றை மாற்றும் சம்பவங்களில் அசாதாரணமான வகையைச் சேர்ந்தவை. ஹிந்துக்களின் புனித நகரங்கள் ஒன்றின் நடுவில், நானூறு ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த சச்சரவிற்கு உட்பட்ட ஒரு கட்டிடம், "கடவுள் ராமரது பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது' என்று ஹிந்துக்களால் நம்பப்பட்ட கட்டிடம், தேசிய அடிமைத் தனத்தின் சின்னமாகவும், மத வெறியின் சின்னமாகவும் பார்க்கப்பட்டு வந்த கட்டிடம், அந்த இடத்தின் உரிமையை மீட்க நீண்ட நெடிய, தொடர்ச்சியான போரை ஹிந்துக்கள் நடத்தக் காரணமாக இருந்த கட்டிடம், கடைசியில் மாபெரும் மக்களுடைய ஆவேசத்தின் விளைவாக தரைமட்டமாகிவிட்டது.
...நான் அமைதி இழந்து, செய்வதறியாத நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். எனது நிலையை உணர்ந்து கொண்ட பிரமோத் மஹாஜன், ""அத்வானிஜீ! நீங்கள் இங்கே தொடர்ந்து இருந்தால் மேலும் விரக்தி அடைந்துவிடுவீர்கள். நாம் லக்னோவிற்குத் திரும்பி விடலாம்'' என்றார். மாலை ஆறு மணி அளவில் நாங்கள் அயோத்தியில் இருந்து புறப்பட்டோம். நானும் அப்போது வகித்து வந்த ஒரே பதவியான, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவது என்று மனதளவில் முடிவு செய்துவிட்டேன். லக்னோவைச் சென்று அடைந்ததும் எனது ராஜினாமா கடிதத்தை ஃபேக்ஸ் மூலம், மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தேன்.
...அயோத்தியில் நடந்த சம்பவங்கள் பற்றிய அரசு தரப்பின் வெள்ளை அறிக்கையை, நரசிம்ம ராவ் அரசு 1993 பிப்ரவரி மாதம் வெளியிட்டது. உத்திரப் பிரதேச அரசின் செயலற்றிருந்த குற்றத்தையும், பொறுப்பைத் தட்டிக்கழித்த தன்மையையும் அது குற்றம்சாட்டியது. முதலமைச்சர் கல்யாண் சிங், "வலிமையைப் பயன்படுத்தக்கூடாது' என்று போலீஸ்துறைக்கு உத்திரவிட்டிருந்ததால், நடந்த சம்பவங்களுக்கு அவரைப் பொறுப்பாக்கியது. இந்த விஷயத்திலும் காங்கிரஸ் மத்திய அரசின் கூற்றில் முழு உண்மை இல்லை. டிசம்பர் 6ஆம் தேதி கடைசி டோம் இடித்து வீழ்த்தப்பட்ட போது, மாலை மணி 4.50. கல்யாண் சிங் 5.30 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் அவரது அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்து, உத்திரப்பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்கிவிட்டது. கர சேவகர்கள் டோம்களை இடித்த பிறகு, சச்சரவிற்கிடமான அந்தக் கட்டிடத்தின் மற்ற பகுதிகளையும் தொடர்ந்து இடித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் சிதைவுகளை எல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அயோத்தி, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகுதான் இவை நடந்தன.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, அன்று இரவு முழுவதும் கர சேவகர்கள், அங்கு தாற்காலிகக் கோவில் எழுப்புகிற பணியில் முழு கவனத்தில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வேலையை முடித்த பிறகு ராம்லாலா, ஸீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமன் சிலைகளைக் கோவிலின் உள்ளே பிரதிஷ்டை செய்தனர். உத்திரப் பிரதேசத்தை குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததற்குப் பிறகு, அயோத்தியில் நடந்துகொண்டிருக்கும் எல்லாமும் டெல்லியில் இருந்த பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளுக்கும் அவ்வப்போது தெரிந்துகொண்டே இருந்தது. அயோத்தியில் நடந்து கொண்டிருந்தவற்றை மத்திய அரசு மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல, சச்சரவிற்குட்பட்ட இடத்தில் தாற்காலிக கோவில் எழுப்ப கரசேவகர்களை அனுமதித்தது என்பதே உண்மை.
சச்சரவிற்குட்பட்ட கட்டிடம் இருந்த பகுதியில், சச்சரவிற்கு அப்பாற்பட்ட இடத்தில் கர சேவகர்கள் கர சேவை செய்ய அனுமதி தராத அரசு, சச்சரவிற்கு உட்பட்ட இடத்திலேயே கர சேவை செய்ய அனுமதி அளித்ததுதான் வேடிக்கையான விநோதம்! இது அடையாள கர சேவை அல்ல. ராம ஜென்ம பூமியில் தாற்காலிகமானது என்றாலும், ராமருக்குக் கோவில் கட்டி, சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
உத்திரப் பிரதேசம் குடியரசுத்தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட பிறகுதான், கோவில் உண்டாகி விட்டதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, 1993ஆம் ஆண்டு உத்திரவின் மூலம் அலஹாபாத் உயர் நீதிமன்றம், தாற்காலிக கோவிலில் ராம்லாலா சிலைகளைத் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளித்தது.
டிசம்பர் 6ஆம் தேதி சம்பவம் முடிந்ததுமே, சில அரசியல் தலைவர்கள் "பாப்ரி மசூதியை' மறுபடியும் கட்ட வேண்டும் என்றனர். டிசம்பர் 7ஆம் தேதி பிரதமர் நரசிம்ம ராவே அந்த உறுதியை அளித்தார். ராமருக்கு தாற்காலிகமாகக் கோவில் எழுப்ப ஏற்கெனவே கர சேவகர்களை அனுமதித்துவிட்டு, மசூதியை மறுபடியும் கட்டித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்ததுதான் வினோதம். இதன் விளைவாக அவரது கட்சி ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு சமூகத்தினரின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது.
...எனது ராம ரத யாத்திரை நடந்து சுமார் பத்தொன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ராமஜென்ம பூமி ஆலயத்தின் கதவுகளை, ராஜீவ் காந்தி திறந்துவிட அனுமதித்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ராஜீவ் காந்தி அரசின் அனுமதியுடன், ராமருக்கு மாபெரும் கோவில் எழுப்ப பூமி பூஜை நடந்து, பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. நவீன இந்தியாவின் அரசியல் வாழ்விலும் சமூக வாழ்விலும் அழிக்க முடியாத அடையாளங்கள் இவை என்று அயோத்தி இயக்க ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் கணிக்கப்படுகிறது. கடவுள் ராமர் பிறந்த புனித இடம் என்று, கோடிக்கணக்கான ஹிந்துக்கள் நம்பும் இடத்தை மீட்டெடுக்க நடத்தி வந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராட்டத்தில், இவையெல்லாம் மைல் கற்கள். எல்லாம் சில பகுதிகள்.'
ஒரு துண்டு இடத்திற்காக அத்வானி போராட வேண்டுமா, இன்னும் ஒரு கோவிலைக் கட்ட வேண்டியது அவசியமா என்று சில ஹிந்துக்கள் பேசுவது எனக்குத் தெரியும். இவர்களில் பலர், தனிப்பட்ட முறையில் மற்ற யாரையும் போல நல்ல மனிதர்கள். தேச பக்தி கொண்டவர்கள். இவர்களின் பேச்சும்கூட ஹிந்து மதத்தின் சகிப்புத்தன்மை என்னும் சிறப்பியல்புகளின் வெளிப்பாடுதான். அவர்களது கருத்து சுதந்திரத்தையும் அதை வெளிப்படுத்த அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தையும், நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கு எனது கேள்வி இதுதான் : அவர்கள் இந்தியாவில் சிறுபான்மை சமுதாயத்தின் பெரும்பான்மையினரது கருத்துக்களை, நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்கிறார்களா? மதிக்கவில்லை என்றே நான் அஞ்சுகிறேன்.
...முஸ்லிம்களின் இரண்டு புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவில் நுழைய முஸ்லிம்கள் அல்லாதவர்களை அனுமதிப்பதுகூட இல்லை என்பதை நான் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதே போல சௌதி அரேபியாவின் எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதியிலும் முஸ்லிம்கள் அல்லாத யாரும், தங்கள் மத நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்ய அல்ல, பின்பற்றக்கூட வெளிப்படையாக முடியாது. சௌதி அரேபியாவின் சகிப்பின்மை என்னும் உதாரணத்தை இந்தியாவில் பின்பற்ற முடியவும் முடியாது. அது தேவையும் இல்லை. எனினும், தங்கள் மதத்தின், தேசியத்தின், ஆக்ரமிப்பின் அன்னிய அடையாளச் சின்னங்களாக விளங்கும் புனிதத் தலங்களில் மூன்றே மூன்றையாவது மீட்க வேண்டும் என்ற ஹிந்துக்களின் எதிர்பார்ப்பு அதிகப்படியானதா?
...பல நூறு வருடங்களாக ஹிந்துக்கள் தீர்வு வேண்டி, காத்திருக்கும் பிரச்சனையில் ஈடுபட, ஒன்றுபட்ட தேசிய முயற்சியில் பங்குகொள்ள, விதி எனக்கொரு வாய்ப்பைத் தந்ததை நினைத்து நெகிழ்கிறேன். எனது ஒரே விருப்பமும், கோரிக்கையும், நமது முஸ்லிம் சகோதரர்கள் ஹிந்துக்களுக்குச் சமமான அளவில் பெருந்தன்மையும், நல்லெண்ணமும் கொண்டவர்களாக முன்நோக்கி வரவேண்டும். ராமர் ஹிந்துக்களின் வழிபாட்டிற்குரிய புனிதமான மதச் சின்னமாக இருக்கலாம். ஆனால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றேவாக இருக்கும், இந்தியாவின் கலாச்சாரப் பழைமையின் சின்னம்கூட அவர்தானே.
எனவே, அயோத்திப் பணி ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட முயற்சியின் மூலம் தீர்க்கப்படும். அதன் மூலம், பரஸ்பரம் வேற்றுமை மறந்து ஒன்றுபட்ட, தேசிய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.
No comments:
Post a Comment