துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஜூலை 9ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது.
*******************************
என் தேசம், என் வாழ்க்கை 26
பாகிஸ்தானின் மறைமுக யுத்தம் – எல்.கே. அத்வானி
தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம், பொதுவாக நாம் அறிந்த யுத்தங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானது என்பது, நான் எனது உள்துறை அமைச்சர் பதவிக் காலத்தில் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம். பல மட்டங்களில், பல முனைகளில் வெவ்வேறு ஆயுதங்களைக் கொண்டு புரிய வேண்டிய போர் அது.
....தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு – குறிப்பாக பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதம் ஒரு போரின் அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வால் மக்கள் ஆத்திரம் அடைந்தது இயற்கை. நாட்டில் பலர், எங்கள் கட்சியினர் உட்பட பலர் "பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
ஆனால், இப்படி உண்டாக்கப்படும் கோபம், ஆத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பக்குவம் நிறைந்த தேசம் செயல்பட முடியாது. சூழ்நிலையைக் கவனமாகக் கணித்து, அதை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து, அதன் பிறகுதான் நடவடிக்கையில் இறங்க வேண்டும். அப்படி எடுக்கப்படும் நடவடிக்கை, உறுதியானதாக, முறையானதாக இருக்க வேண்டும். 2001 டிசம்பர் 13ஆம் தேதி பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, பிரதமர் வாஜ்பாய் அப்படித்தான் செய்தார்.
...ஒரே நேரத்தில் ராணுவ நடவடிக்கை, ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளைத் தனிமைப்படுத்தும் விதத்தில் அரசியல் முனைப்புகள், முக்கிய நாடுகளின் தலைநகர்களில் தீவிரமான மற்றும் உறுதியான தூதரக நடவடிக்கைகள் – ஆகிய மூன்றையும் ஒரு சேர முடுக்கிவிட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
"ஆபரேஷன் பராக்கிரம்' என்று பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தைக் குவிப்பது. இந்திய வரலாற்றில் அமைதியான நேரத்தில், எல்லையில் ஏராளமான ராணுவத்தைக் குவித்தது அதுவே முதல் முறை. இதன் நோக்கம் பாகிஸ்தானை எச்சரிப்பது மற்றும் பாகிஸ்தான், தீவிரவாதத்தைத் தனது நாட்டின் கொள்கையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்குமானால், ராணுவத் தாக்குதலுக்கு இந்தியா தயாராக இருக்கிறது என்று உலக நாடுகளுக்கு உணர்த்துவது.
2002ல் எனது முதல் அமெரிக்கப் பயணம்
இந்தியாவின் இந்தத் தகவலுக்கு வலிமை சேர்க்க அரசாங்கம் பல்வேறு வெளியுறவு முனைப்புகளில் இறங்கியது. அதன் ஒரு பகுதியாக 2002 ஜனவரியில் நான் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் இருந்தது.
...எனது பயணத்தின் உயர்ந்த அம்சம், வாஷிங்டன் டி.ஸி.யில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷை சந்தித்தது. என்னுடன் உற்சாகமாகக் கைகுலுக்கிய புஷ், "இந்திய அரசின் வலிமையான மனிதர் என்று உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் வாஷிங்டன் டி.ஸி.க்கு வருவதற்கு முன்னரே உங்களைப் பற்றிய தகவல்கள் வந்துவிட்டன' என்றார்.
வேறு எந்த வெளிநாட்டுத் தலைவரிடம் தெரிவித்ததையும் விட, தீவிரமாக எனது கருத்துக்களை ஜார்ஜ் புஷ்ஷிடம் தெரிவித்தேன். மதரீதியாகத் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாதம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் விளைவித்திருக்கும் தீமையை விவரித்தேன். 11/9ல் நிகழ்ந்தது இதைப் பயங்கரமாக உணர்த்தி இருக்கிறது. 13/12ல் இந்திய பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேறி இருந்தால், எந்த மாதிரியான விளைவுகளை உண்டாக்கி இருக்கும் என்பதை விவரித்தேன். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா இரட்டை அணுகுமுறைகளை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினேன். எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் போதிய ஆதாரங்களை, அமெரிக்க மூத்த அதிகாரிகளிடம் அளித்திருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டேன். பாகிஸ்தான், தீவிரவாதத்தை நாட்டின் கொள்கையாகக் கொண்டிருப்பதை வலியுறுத்தினேன்.
....இந்தியாவின் சார்பாக சில கோரிக்கைகளைக் கூறி, பாகிஸ்தான் தனது நேர்மையான முனைப்பை இதில் காட்டும் விதத்தில், சாதகமாகச் செயலாற்ற வேண்டும் என்று என் அதிகாரபூர்வ அமெரிக்கப் பயணத்தில் கூறினேன்.
அந்தக் கோரிக்கைகள் :
1. இருபது தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களது பெயர்களும், இந்தியாவில் அவர்கள் இழைத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களும், இந்திய அரசால் பாகிஸ்தானுக்குத் தரப்பட்டிருக்கின்றன. இந்தத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள், பாகிஸ்தானில் தஞ்சம்அடைந்திருப்பவர்கள்.
2. பாகிஸ்தானிலும், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிகளிலும் தீவிரவாதிகளுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக அளிக்கப்படும் வசதிகள், பயிற்சி முகாம்கள், ஆயுத சப்ளை, நிதி உதவி ஆகிய அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
3. ஜம்மு, காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து நிகழும் ஆயுத கடத்தல் மற்றும் ஆட்களின் ஊடுருவலை நிறுத்த வேண்டும்.
4. எல்லா வகை தீவிரவாத நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.
தாவூத் இப்ராஹிம் விவகாரம் என்னுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்த அதிகாரிகள் பாகிஸ்தானில் இருக்கும் இருபது தீவிரவாதிகளின் பட்டியலையும், அவர்களுக்கு எதிரான அசைக்க முடியாத ஆதாரத்தையும் அமெரிக்க அதிகாரிகளிடம் கொடுத்தனர். அந்தப் பட்டியலில் முதலில் இருந்த பெயர் தாவூத் இப்ராஹிமினுடையது. நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் 1993 மார்ச் 12ஆம் தேதி மும்பையில் 257 பேர் உயிர் இழக்கக் காரணமான தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குத் திட்டமிட்டது மற்றும் நிதி உதவி அளித்தது ஆகியவற்றைச் செய்திருந்தார்.
டி கம்பெனி என்ற பெயரில், மும்பையில் அமைப்பு ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவர், பல்வேறு கொலை, ஆள் கடத்தல், கள்ளக் கடத்தல், கள்ள நோட்டு, போதைப் பொருள் கடத்தல் ஆகிய வழக்குகளில் கைதாவதில் இருந்து தப்பிக்கத் துபாய்க்கு ஓடிவிட்டார். 1993 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய பிறகு அவருக்கு கராச்சியில் அடைக்கலம் தரப்பட்டது.
2003 அக்டோபரில் அமெரிக்காவே தாவூத் இப்ராஹிமை, சர்வதேச தீவிரவாதி என்று அறிவித்து, அமெரிக்காவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கியது. அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில், "படுகொலைகளை நிகழ்த்தும் பண நடமாட்டத்தை நிறுத்தும்படி சர்வதேச சமுதாயத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இப்ராஹிமின் சிண்டிகேட்டைப் பொறுத்தமட்டில் பெருமளவிலான கிரிமினல் வர்த்தகத்தின் ஒரு பகுதியாகத் தீவிரவாத வர்த்தகம் திகழ்கிறது. அதை நாம் நொறுக்கியாக வேண்டும்' என்றது.
மேலும், அந்த அறிக்கையில் தாவூத் கராச்சியில் இருப்பதையும், 0869537 என்ற எண் கொண்ட பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை அவர் பெற்றிருப்பதையும் உறுதி செய்தது. நிதித்துறை வெளியிட்ட ஆதாரத் தகவலில் 1990களில் தாவூத், தாலிபான்களின் பாதுகாப்புடன் ஆஃப்கானிஸ்தான் சென்றதையும்; கலவரங்களைத் தூண்டியும் தீவிரவாதச் செயல்கள் மூலம், ஒத்துழையாமையை ஏற்படுத்தியும் இந்திய அரசாங்கத்தைச் சீர்குலைக்க அவரது சிண்டிகேட் தொடர்ந்து திட்டமிட்டுச் செயல்பட்டதையும் தெரிவித்தது.
குஜராத்தில் லஸ்கர்இதொய்பா தாக்குதல்களை அதிகரிக்க அவர் நிதி உதவி செய்தார். ஐ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில் இருக்கும் அவர் "கராச்சியின் ஒஸாமா' என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை. தாவூதையும், பாகிஸ்தானில் உள்ள மற்ற தீவிரவாதிகளையும் விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை இது புரிய வைக்கும்.
தாவூதை அமெரிக்க அரசு "சர்வதேச தீவிரவாதி' என்று பிரகடனப்படுத்தியதைக் கேள்விப்பட்டு நான் உற்சாகம் அடைந்தேன். இந்திய நிலைப்பாடு சரியானது என்று நிரூபிக்கும் நிலை இது என்று விவரித்தேன்.
எனது அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்க அமைச்சர்கள் காலின் பாவல் மற்றும் காண்டலீஸா ரைஸ் ஆகியோருடனான சந்திப்பில், 11/9 தாக்குதலில் சம்பந்தப்பட்ட பலரையும், அமெரிக்காவிற்கு எதிராகக் குறி வைத்துச் செயல்படும் பலரையும், நாடு கடத்த முஷாரஃப்பை அமெரிக்க நிர்வாகம் நிர்பந்தித்துச் செயல்பட வைத்தது. அதேபோல இந்தியாவில் விசாரணை நடத்தப்பட, தாவூத் இப்ராஹிமையும் மற்றவர்களையும் பாகிஸ்தான், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, பாகிஸ்தானை அமெரிக்கா நிர்பந்திக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அப்படிச் செய்தால்தான் உலகில் எந்த இடத்தில், எந்த வடிவத்தில் நிலவும் தீவிரவாதத்தையும் அமெரிக்கா எதிர்க்கும் என்ற தனது போதனைக்கு ஏற்ப செயல்படுகிறது என்று, இந்திய மக்கள் உறுதியாக நம்புவார்கள் என்று தெரிவித்தேன்.
...நான் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆறு ஆண்டுகளில், 24 நாடுகளுடன் இந்தியா குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது. தீவிரவாதத்தை ஒடுக்குவது, அமைப்பு ரீதியான குற்றத்தை ஒடுக்குவது தொடர்பாக எட்டு நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் பதிமூன்று நாடுகளுடன் நிகழ்ந்தது. தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து குழுக்களாக பணியாற்றும் ஒப்பந்தம் பதினேழு நாடுகளுடன் உண்டானது. இவை எல்லாமே முன் உதாரணமானவை. ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வருவதிலும், ஆதரிப்பதிலும் வாஜ்பாய் ஆட்சி முனைப்பாகச் செயல்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியில் இருந்த ஆறு ஆண்டுகளும், உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து செயல் ஊக்கத்துடனும், கடமை உணர்வுடனும், ஒரே குறிக்கோளுடனும் தனது அணுகுமுறையைக் கொண்டிருந்தது என்று, என்னால் பெருமையாகச் சொல்ல முடியும்.
copyright(c) thuglak.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment