Wednesday, 18 November 2009

இரண்டாவது பொக்ரான்

இரண்டாவது பொக்ரான் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 23

1993ஆம் ஆண்டிலிருந்து கட்சிப் பொறுப்பை நிர்வகித்த நான், அடல்ஜியின் அமைச்சரவையில் பங்கேற்றதும், கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுபெற வேண்டும் என்று நினைத்தேன். தனது சுயநலமற்ற எளிமை மற்றும் நிர்வாகத் திறமையால் அனைவராலும் பாராட்டப் பெற்ற ஜனசங்க, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் குஷாபாவ் தாக்கரே ஏப்ரல் 1998ல் பா.ஜ.க. தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில், தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்...

இரண்டாவது பொக்ரான் அணுசக்தி நாடாகிறது இந்தியா
வாஜ்பாய் ஆட்சி விரைவாகச் செயலில் இறங்கியது. இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்ற வேண்டும் என்பது, எங்களது முதல் கடமையாக இருந்தது. 1972ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் நாங்கள் இதனை வலியுறுத்தி வருகிறோம். ஆட்சிக்கு வந்த இரண்டு மாத காலத்தில் நாங்கள் மிகத் தைரியத்துடன் இதைச் செய்து காட்டினோம். அதாவது, சொல்லி வந்ததைச் செயலாக மாற்றிக் காட்டினோம்....

ராஜஸ்தானின் பாலைவனப்பகுதியில் உள்ள பொக்ரானிலிருந்து வரும் செய்திக்காக நாங்கள் அனைவரும் காத்திருந்தோம். சுமார் 4 மணிக்கு, பிரத்தியேகமான தொலைபேசி மூலம், செய்தி வந்தது. "பரிசோதனை வெற்றி'. இந்தியாவின் அணு விஞ்ஞானிகள் தொடர்ந்து மூன்று அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து, இந்தியாவை அணு வல்லமை கொண்ட நாடாக உயர்த்தினர்....

துணிவுடனும், திட்டமிட்ட முறையிலும் இந்தியா எடுத்த நடவடிக்கையால், அமெரிக்காவும் மற்றும் பல மிகப்பெரிய நாடுகளும், இந்தியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், அந்தத் தடைகள் இந்தியாவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு பொருளாதாரத் தடைகளை நீக்கி, இந்தியாவை பொறுப்பான அணு ஆயுத நாடு என்று வர்ணித்தன. இந்தியாவை விமர்சித்த நாடுகளே, மீண்டும் இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுத்த முன்வந்தன. இதன் காரணமாக, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புக் கூடியது....

அடல்ஜியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க லாகூர் பஸ் பயணம்

பொக்ரான்2 பிரதமர் வாஜ்பாய்க்கும், அவரது அரசாங்கத்திற்கும் செல்வாக்கை உயர்த்துவதாக அமைந்திருந்தது. இந்தியா, பாகிஸ்தானிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர் மிகவும் முயற்சி செய்தார். மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகச் செயல்பட்ட வாஜ்பாய், இரண்டு நாட்டிற்குமிடையே நட்புறவு ஏற்பட பலவகையிலும் பாடுபட்டுள்ளார். பொக்ரான் இரண்டிற்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகளாகிவிட்டன. இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதட்டம் நிலவியது.

இரு நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்த புதுமையான முறையில், 1999ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 அன்று, வாஜ்பாய் லாகூருக்குப் பேருந்துப் பயணம் மேற்கொண்டார். டெல்லி முதல் லாகூர் வரையிலான பஸ் பயணத்தின் மூலமாக இருநாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த, வாஜ்பாய் முதலாவது பஸ்ஸில் பயணம் மேற்கொள்ள ஆயத்தமானார். உண்மையில், வாஜ்பாய் அமிர்தசரஸிலிருந்து லாகூர் வரையிலான 60 கி.மீ. தூரம் பயணம் செய்தார். அதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் எண்ணத்தைக் கவர்ந்தார். பத்து வருடத்தில், இந்தியப் பிரதமர் பாகிஸ்தானுக்குச் சென்றது அதுதான் முதல் முறை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தியப் பிரதமரை வாகா எல்லையில் வரவேற்றார்....

அதைத் தொடர்ந்து, அடுத்த நாள், இரு நாட்டுப் பிரதமர்களும் லாகூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். லாகூர் ஒப்பந்தம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. முதலாவது, சிம்லா ஒப்பந்தத்தை தீவிரமாக நடைமுறைபடுத்துவது. இரண்டாவது, இரு நாடுகளின் அணு ஆயுதக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மோதலைத் தவிர்க்கும் பொறுப்பு அதிகரித்திருப்பதை அங்கீகரிப்பது. மூன்றாவதாக, இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் தீவிரவாதத்தை எதிர்ப்பது ஆகியவை லாகூர் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்....

ஒட்டுமொத்தத்தில் லாகூர் பயணம், மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இரண்டு நாடுகளின் எல்லைகளிலும், அமைதிக்கான தீர்வுகள் வகுக்கப்பட்டு, இரு தரப்பிலும் நம்பிக்கையை வளர்த்து, சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது....

ஒரே ஒரு வாக்கில் தோற்றோம்

பொக்ரான்2, மற்றும், லாகூர் அமைதி முயற்சி ஆகியவை பிரதமரின் புகழ் வளர்வதற்கும், மக்களின் மனதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும் வழிவகுத்தன. 1999 பிப்ரவரியில், நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சமர்ப்பித்த மிகச் சிறந்த பட்ஜெட், பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. பொக்ரான், பஸ் பயணம், பட்ஜெட் ஆகிய அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ஒரு வருடத்தில் நடந்த மிகப்பெரிய சாதனைகளாகும். இதுபோன்ற ஆக்கபூர்வமான வளர்ச்சி, காங்கிரஸிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்தது.

அது தனது பழைய விளையாட்டான, காங்கிரஸ் அல்லாத அரசுகளைக் கவிழ்க்கும்முயற்சியில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்கக் கோரியது. வாஜ்பாய் அரசு செய்ய மறுத்தது. அதை நாங்கள் செய்திருந்தால் எங்களது அரசாங்கம் நிலைத்திருப்பதற்கு வழி வகுத்திருக்கும். ஆனால், அப்படி செய்திருந்தால் அது அரசியல் லாப நோக்கத்திற்காகச் செயல்பட்டதாக அமைந்திருக்கும். வாஜ்பாயும், நானும் காங்கிரஸின் இதுபோன்ற மலிவான அபிலாஷைகளுக்கு இடம் தராது இருந்தோம். நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது 356 பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளைக் கவிழ்த்திருந்தால் மத்தியில் எங்களது ஆட்சியைத் தொடர்ந்திருக்க முடியும். அதற்கு நாங்கள் தயாராக இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை 1999 ஏப்ரல் 14ல் அ.தி.மு.க. விலக்கிக்கொண்டது. மீண்டும் ஒருமுறை குடியரசுத்தலைவர் நாராயணன் பரபரப்பான அரசியல் மாற்றங்களில் முக்கியப் பங்கேற்றுச் செயல்பட்டார். அவர் வாஜ்பாயிடம், "மூன்று நாட்களில், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும்' என்றார். குறுகியகால அவகாசமே இருந்ததால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்ட காலம் போதவில்லை....

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வாஜ்பாய் அரசு மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில், அதாவது 269270 என்ற முறையில் தோல்வி அடைந்தது. இந்த ஒரு வாக்கு வித்தியாசம், தவறான அரசியல் மற்றும் தவறான நடவடிக்கையினால் நடைபெற்றது. கிரிதர் கோமாங்கொ ஒரிஸ்ஸா நாடாளுமன்ற உறுப்பினர். இவர் ஏற்கனவே ஒரிஸ்ஸா முதல்வராகி விட்டார். இந்நிலையில் இன்னமும் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாதிருந்தார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்து வந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வைத்து, வாக்களிக்கச் செய்து, எங்களைத் தோற்கடித்தனர்.

வாஜ்பாயும், நானும் மற்றவர்களும் வாக்கெடுப்பு முடிவு
அறிவிக்கப்பட்டவுடன், பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினோம். பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அறையான எண் 10ல் அனைவரும் கூடினோம். வாஜ்பாயால் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் நம்மைத் தோற்கடித்துவிட்டார்களே என்று மிகவும் வருந்தினார். நாங்கள் அவரிடம், "புதிய தேர்தலைச் சந்திப்போம், நாங்கள் மக்களிடம் சென்று, உங்கள் ஒரே ஒரு வாக்கின் மூலம் மீண்டும் பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், வாஜ்பாயைப் பிரதமராக்குங்கள் என்று ஒவ்வொரு வாக்காளரிடமும் கேட்டுப் பெற்று, உங்களை மீண்டும் பிரதமராக ஆக்குவோம்' என்று கூறினோம்....

copyright(c) thuglak.com

No comments: