Wednesday, 18 November 2009

சீன ஆக்ரமிப்பு !

சீன ஆக்ரமிப்பு ! – எல்.கே. அத்வானி

என் தேசம் என் வாழ்க்கை – 7


1961 அக்டோபரில் நான் ஆர்கனைசர் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆனேன். ...1950களின் தொடக்கம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது சர்வதேசிய கனவின் பகுதியாக சீனாவுடன் உணர்வு ரீதியான உறவிற்கு முயன்று கொண்டிருந்ததால், ஏதோ நடக்கப் போகிறது என்ற அச்சம் எங்கள் கட்சிக்கு இருந்தது. 1950 அக்டோபரில் சீனா திடீரென்று திபெத்தை ஆக்ரமித்துக்கொண்டபோது, நமக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட மலைப்பகுதி எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலை கொண்டிருந்தோம். எங்களுடைய இந்தக் கவலையை துணை பிரதமர் சர்தார் படேல் முழுமையாகப் பகிர்ந்துகொண்டார்.

ஜவஹர்லால் நேரு


தனது மரணத்திற்கு ஐந்து வாரங்களுக்கு முன்பு 1950 நவம்பர் 7ஆம் தேதி சர்தார் படேல், பிரதமர் நேருவிற்கு கடிதம் மூலம் தனது கவலையைப் பதிவு செய்தார். "சீன அரசாங்கம் நமக்கு அமைதியை போதித்து நம்மை நீர்த்துப் போகச் செய்துவிட்டது... நாம் சீனாவை நண்பர்களாகக் கருதினாலும் கூட அவர்கள் நம்மை நண்பர்களாகக் கருதவில்லை. "தங்களோடு இல்லாத எல்லோரும் தங்களின் எதிரிகள்' என்பது கம்யூனிஸ மனப்பான்மை. இந்த முக்கிய அம்சத்தில் நாம் போதிய கவனம் கொள்ள வேண்டும்'.


...1962 அக்டோபரில் திடீரென்று சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. நேரு மனமொடிந்து போனார். ஒரு நண்பனின் துரோகமான நடவடிக்கை என்பதாகவே அதை அவர் பார்த்தார். எனினும் அவரது தவறான அணுகுமுறையின் காரணமாக, இந்தியா ராணுவ ரீதியாக தயார் நிலையில் இருக்கவில்லை. அதனால் போரில் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தது.


அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையிலும், 1962ல் சந்தித்த தோல்வியின் கசப்பான நினைவு, இந்தியர்களின் ஒட்டுமொத்த நினைவில் இருந்து துடைக்கப்படாமல் நீடிக்கிறது.


...சீன ஆக்ரமிப்பு இந்திய கம்யூனிஸ்ட்களின் எல்லை கடந்த விசுவாசத்தை, திரையை விலக்கி உலகத்திற்குக் காட்டியது. போரின்போதும், இந்தியாவின் தோல்விக்குப் பிறகும், இந்திய கம்யூனிஸ்ட்கள் சீனாவை ஆதரித்தார்கள். ...ஆர்.எஸ்.எஸ். சுயம் சேவக்குகளும் ஜனசங்கத் தொண்டர்களும் நாடு முழுக்க இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தார்கள். போர் ஆதரவு நிதி திரட்டினார்கள். பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் தேச பக்தி உணர்வை எழுப்பக் கடுமையாக உழைத்தார்கள்.


நேரு சகாப்தத்தின் முடிவு

விடுதலைக்குப் பிறகான இந்திய வரலாற்றில் 1962ஆம் ஆண்டின் சீன ஆக்ரமிப்பு பல வழிகளிலும் முக்கியத் திருப்பமாக ஆயிற்று. போரின் முடிவு பண்டித நேருவின் மன எழுச்சியை சீர்குலைத்துவிட்டது. கடைசி வரை அவரால் அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. 1964 மே 24ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார். இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க ஒரு சகாப்தம் முடிந்து போயிற்று.


அவரது ஆளுமை மற்றும் சாதனைகள் பற்றிய எனது மரியாதை இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் மாறாமல் நிலைத்து நிற்கிறது. சந்தேகம் இல்லாமல் நேரு ஒரு மிகப்பெரிய தேசபக்தர்தான். இந்திய சுதந்திரத்திற்காக அவர் மேற்கொண்ட போராட்டமும் செய்த தியாகமும் மிகப் பெரியவை. 1947ல் அவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். நாடெங்கிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பிரதமர் பதவிக்கு சர்தார் படேலுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது.


மகாத்மா காந்தி சர்தார் படேலுக்கு பதிலாக நேரு பிரதமர் ஆவதை விரும்பினார். அதனால் நேருவிற்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவின் சுய பொருளாதார வளர்ச்சிக்கு நேருதான் உறுதியான அடிப்படைகளை உண்டாக்கினார். சுதந்திரத்திற்குப் பின் வந்த ஆரம்ப வருடங்களில் இந்தியாவின் தொழில் மாறுதலால், பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின...


வரலாற்றில் நேருவின் மிகப்பெரிய தோல்விகள் என்றால், அவை 1948ல் பாகிஸ்தான் போரையும், 1962ல் சீனப் போரையும் கையாண்ட விதத்தில் கடைப்பிடித்த குறைகள்தான். காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முதல் முயற்சியை முறியடிக்க அவர் உறுதியாகவும், சமரசத்திற்கு இடமின்றியும் செயல்பட்டிருந்தால், காஷ்மீர் பிரச்சனை அப்போதே முடிந்து போயிருக்கும்.


...நேருவின் இறுதி வருடங்களில் "நேருவிற்குப் பிறகு யார்?' என்ற கேள்வி விவாதப் பொருளாகிவிட்டது. அதற்கு விடையாகக் கிடைத்தவர் லால் பகதூர் சாஸ்திரி. அவர் அர்ப்பணிப்பு மிகுந்த ஒரு காங்கிரஸ்காரர். எளிமைக்கும், பண்பிற்கும், ஊழலற்ற தன்மைக்கும் பெயர் போனவர். அவரது தனி மனித இயல்புகள் நாட்டில் அவருக்கென்று ஒரு சிறப்பான மரியாதையை, குறுகிய காலத்தில் பெற்றுத் தந்தன...

லால் பகதூர் சாஸ்திரி


1965 ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தானின் ராணுவம் எதிர்பாராத அதிரடி நடவடிக்கையின் மூலம் கட்ச்சுக்குள் நுழைந்து நமது பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மத்தியஸ்த முயற்சியின் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது...


பாகிஸ்தான் 1965 செப்டம்பரில் காஷ்மீரில் நடத்தப் போகிற முழு அளவிலான தாக்குதலுக்கு ஒரு முன்னோட்டமே கட்ச்சில் நிகழ்த்திய அத்துமீறல். 1962ல் சீனாவிடம் தோல்வி கண்ட நிலையில், இந்திய ராணுவம் தன்னை தற்காத்துக்கொள்வது இயலாது என்று இஸ்லாமாபாத்தின் ராணுவ ஆட்சியாளர்கள் நம்பினார்கள்.

இந்தச் சிக்கலை சாஸ்திரி எஃகின் உறுதி போன்ற மனதுடன் எதிர்கொண்டார். "படை படையை எதிர்கொள்ளும்' என்று தேசத்திற்கு உறுதி அளித்தார். "முன்னேறுங்கள், முன்னேறித் தாக்குங்கள்' என்று ராணுவத்திற்கு கட்டளையிட்டார். "ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கத்தின் மூலம் நாட்டில் தேசபக்தி என்னும் நெருப்பை மூட்டினார். இந்திய ராணுவம் முன்னேறி கிட்டத்தட்ட லாகூரின் எல்லையைத் தொட்டுவிட்டது.


மூன்று வாரப் போரின் முடிவில் பாகிஸ்தான் அவமானகரமான தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்ட போது சர்வதேச அரங்கில் இருந்து தரப்பட்ட அழுத்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் சாஸ்திரிக்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி முஹமத் அயூப்கானுக்கும் இடையில் சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யாவின் தாஷ்கண்டில் 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடந்தது.


சோவியத் யூனியனின் பிரதமர் அலேக்ஸி கோஸிஜின் இருதரப்புக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டார். ஜனசங்கம் தாஷ்கண்ட் பேச்சுவார்த்தையை எதிர்த்தது. அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையில் எங்கள் கட்சியின் குழு பிரதமர் சாஸ்திரியைச் சந்தித்து தாஷ்கண்ட் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டாம் என்று வலியுறுத்தியது.

பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் ஹாஜ்பீர் மற்றும் தித்வா ஆகிய முக்கிய இரண்டு மையங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியிருந்தது. அந்தப் பகுதிகளை இந்தியா பாகிஸ்தானுக்குத் திரும்பத் தந்துவிட வேண்டுமென்று தாஷ்கண்ட் மாநாட்டில் சர்வதேச நிர்பந்தம் பிரயோகிக்கப்படும் என்று நாங்கள் அஞ்சினோம்.


தாஷ்கண்டுக்குப் புறப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன், ஆர்கனைசர் பத்திரிகைக்குப் பேட்டி காண்பதற்காக சாஸ்திரியை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். ஹாஜ்பீர் மற்றும் தித்வா பகுதிகளை பாகிஸ்தானுக்குக் கொடுத்து விட வேண்டும் என்று இந்தியா நிர்பந்திக்கப்படும் என்கிற பரவலான அச்சம் நிலவுவது பற்றி நான் அவரிடம் தெரிவித்தேன். பிரதமரின் பதில் மிகவும் தெளிவாக இருந்தது. "நிச்சயமாக அப்படி நிகழாது' என்றார். 1966 ஜனவரி 10ஆம் தேதி சாஸ்திரிக்கும் அயூப்கானுக்கும் இடையில் கூட்டறிக்கை கையெழுத்தானது. துரதிர்ஷ்டவசமாக, எது நடக்காது என்று சாஸ்திரி சொன்னாரோ அது நடந்தது.


போர்க்களத்தில் இந்திய ராணுவம் ஏற்கெனவே தனது மேலான பலத்தை நிரூபித்து இருந்தது. அந்த வலிமையான நிலையில் நின்று சாஸ்திரி பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தார்கள். பேரத்தில் எந்த ஒரு சமரசத்தையும் ஏற்க இறுதி வரை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் கோசிஜின் சாஸ்திரியிடம் "நீங்கள் ஹாஜ்பீர் மற்றும் தித்வா ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு தந்தாக வேண்டும்' என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சாஸ்திரி "அப்படியென்றால் நீங்கள் வேறு ஒரு பிரதமரோடுதான் பேச்சு நடத்த வேண்டும்' என்றார்.


தொடர்ந்து நீடித்துக்கொண்டிருந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சாஸ்திரி, இந்தியப் படைகளை அந்த இரண்டு முனைகளில் இருந்தும் வாபஸ் பெற மர்மமான முறையில் சம்மதித்துவிட்டார். அதற்குப் பதிலாக எல்லைப் பிரச்சனைகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று பாகிஸ்தானிடம் இருந்து மேம்போக்கான உறுதி பெறப்பட்டது. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் முடிவு சாஸ்திரிக்கு விருப்பமற்றதாக இருந்தது. அனேகமாக அவரது மனசாட்சி குற்ற உணர்வால் கனத்துப் போயிருக்க வேண்டும். கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் ஜனவரி 11ஆம் தேதி தாஷ்கண்டில் சாஸ்திரி மாரடைப்பால் மரணம் அடைந்தார்...

*****

No comments: