துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஜூலை 23ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது.
*********************************
சீன எல்லைத் தகராறும், காஷ்மீர் பிரச்சனையும்! – எல்.கே. அத்வானி
-->என் தேசம், என் வாழ்க்கை - 27
இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைத் தகராறு கிழக்கில் அருணாசலப் பிரதேசத்தின் அந்தஸ்து விஷயத்திலும், மேற்கில் அகாய்சின் விஷயத்திலும் முடிவு காணப்படாத எல்லைப் பிரச்சனையாகத் தொடர்கிறது. லடாக்கில் உள்ள அகாய்சின் என்னும் அந்தச் சிகரம் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தது என்பது இந்தியாவின் வாதம்.
1949-ல் சீனா விடுதலை அடைந்து, மாசேதுங் தலைமையில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, இந்திய வாதத்தை ஏற்க மறுத்து, ‘அகாய்சின் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதி’ என்றது. கிழக்கில் பிரிட்டிஷ் – இந்தியா காலத்தில், பூட்டான் முதல் பர்மா வரை மற்றும் திபெத் முதல் அஸ்ஸாம் வரையில் உண்டாக்கப்பட்ட மக்மோஹோன் கோட்டை சீனா அங்கீகரிக்க மறுத்தது.
...சீனாவுடனான தனது எல்லைத் தகராறில், இந்தியாவின் நிலையை நான்கு அம்சங்கள் சிக்கலாக்கி விட்டன. முதலாவதாக பத்தொன்பதாவது மற்றும் பதினெட்டாவது நூற்றாண்டின் துவக்கத்தில், அன்னிய சக்தியால் சர்வே நடத்தப்பட்டபோது, இந்தியாவும் சீனாவும் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் எஜமானர்களாக இல்லை. அந்தச் சர்வேயை நடத்துவதில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும், ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான பகைமை ஓரளவு முக்கியத்துவம் கொண்டிருந்தது.
இரண்டாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள், நில வரைபடம் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்று இருக்கவில்லை. விடுதலை இயக்கமும், எல்லையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றிப் போதிய கவனம் செலுத்தவில்லை.
மூன்றாவதாக, 1950-ல் திபெத்தின் மீது சீனா நிகழ்த்திய ஆக்ரமிப்பை சீனா உறுதிப்படுத்திக் கொண்டது. அதில் இந்தியாவின் தொடர்பு ஆகியவை, காலனி ஆதிக்க காலத்திற்குப் பிறகு சிக்கலை உண்டாக்கியது. அகாய் சின்னின் மீது இந்தியா உரிமை கொண்டாடும் பகுதி வழியே, ஜின்ஜியாங்கில் இருந்து மேற்கு திபெத்திற்கு சீனா சாலை அமைத்தது. மேலும் 1963-ல் பாகிஸ்தான், தனது ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் ஒரு பகுதியை சீனாவிற்கு விட்டுக் கொடுத்தது. இரண்டு எல்லைத் தகராறுகளிலும் இது புதிய பரிமாணம் கொண்ட சிக்கலை உண்டாக்கிப் பெருக்கியது.
சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை, ஒட்டுமொத்தமாகத் தீர்க்க வெளியுறவு நடவடிக்கைகளையும், ராணுவத்தின் தகுதியை வளர்ப்பதையும் ஒருசேரக் கவனத்தில் கொண்டு நேரு அரசாங்கம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செயல்படாததால் நிலைமை மேலும் சிக்கலானதாக ஆகிவிட்டது. எல்லைத் தகராறு என்ற வார்த்தைக்குப் பதிலாக, எல்லைப் பிரச்சனை என்று நான் குறிப்பிடக் காரணம் இருக்கிறது.
1950-களின் ஆரம்பம் வரையில் இந்தியாவிற்கும், சீனாவுக்கும் இடையே கடும் பகை நிலவியதில்லை. அப்போது இந்திய அரசாங்கம் உறுதியான, யதார்த்தமான, தேசியப் பாதுகாப்பை புறக்கணிக்காத, ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கிற, தூதரக உறவுகளைச் சீராக வைக்கும் அணுகுமுறையை மேற்கொண்டிருந்தால், பிரச்சனைகள் தீர்ந்து போயிருக்கக்கூடும். இவற்றை எல்லாம் உணராமல், அணிசேரா இயக்கத்தின் தலைமையை நேருவுக்குப் பெற வேண்டும் என்பதில்தான் இந்தியாவின் கவனம் இருந்தது.
பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும்போது, பரஸ்பரம் சில சமரசங்களைச் செய்துகொள்ள முடிந்திருக்கும். ஆனால், சர்தார் படேல் மறைவுக்குப் பிறகு அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் அக்கறைகொள்ளாமல் ‘ஆசிய ஒற்றுமை’ என்ற வாதம், மற்றும் சீனத் தலைமையின் மேல் வைத்த நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டே, பிரச்சனையை அமைதியாகத் தீர்த்துவிட முடியும் என்று நேரு நம்பினார். 1962-ல் சீன ஆக்ரமிப்பு நிகழ்ந்தபோது, இந்த மெத்தனப் போக்கு முறிந்து விழுந்தது. அதன் விளைவாக நாடு அதிர்ச்சியையும், அவமானத்தையும் சந்தித்தது.
...யுத்தம்தான் தலைமையின் திறமையைச் சோதிக்கிற உண்மையான தேர்வாகிறது. நேரு அவரது பாதுகாப்பு அமைச்சர் வி.கே. கிருஷ்ண மேனனால் தவறாக அறிவுறுத்தப்பட்டார். நேரு தனக்கான சோதனையில் மோசமாகத் தோல்வி அடைந்தார். போருக்குத் தேவையான போதிய வசதிகள் இல்லாத, நெடுங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்திய ராணுவம் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்தித்தது. மனம் ஒடிந்து போன பிரதமர், 1962 நவம்பர் 19-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், ‘பெருமளவிலான சீன ராணுவப் படைகள் வடகிழக்கு இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன... நேற்று முன்தினம் காமெங் டிவிஷனில் போம்டிலா என்ற சிறு நகரத்தை நாம் இழந்துவிட்டோம்... அஸ்ஸாம் மக்களுக்காக என் மனம் துடிக்கிறது’ என்றார். அவரது கடைசி வார்த்தை அஸ்ஸாம் மக்களிடம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
இந்திய அரசாங்கம் நம்மைக் கைவிட்டு விட்டது என்று அவர்கள் நினைத்தனர். இது அவர்களது மனதில் ஆழமான ரணமாகப் பதிந்துவிட்டது. அந்தப் பகுதியில் இயங்கும் தீவிரவாதிகள், அப்போதிலிருந்து அந்த மக்களின் பாதுகாப்பற்ற உணர்வை, இந்திய எதிர்ப்பு உணர்வாக மாற்றி, தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
...சமீபத்தில் சில பத்தாண்டுகளாக, இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சீனாவுடனான எல்லைத் தகராறு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு 2003 முதல், அமைப்பு ரீதியானதாக ஆக்கப்பட்டது மனநிறைவளிக்கிற ஒன்றாக இருக்கிறது. இந்திய அரசும், சீன அரசும் பரஸ்பரம் பயனுள்ள பிற துறைகளின் கூட்டுறவை, எல்லைத் தகராறில் முடக்குவதில்லை என்று முடிவு செய்தன.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இருதரப்பும் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவோடு, சமமான இரு பாதைகளில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியில், முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.
இந்த இரு நாடுகளின் உறவைச் சுமூகமாக்குவது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது என்ற கொள்கை வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான பெருமை இந்திய தரப்பில் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும், சீன தரப்பில் டெங் ஜியோபிங்கிற்கும் உரியது.
...சீன எல்லைத் தகராறைப் போலவே காஷ்மீர் பிரச்சனையும், நேரு காலத்து மரபுரிமையாக நின்றுபோன ஒன்றுதான். இந்திய விடுதலை இயக்கத்தின் பலவீனத்தினால் உண்டான ஒன்றுபோல காஷ்மீர் பிரச்சனை ஆகிவிட்டது. அதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நரித்தனமான சதிகள் மேலும் சிக்கலானதாக்கி விட்டன. 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தியாவில் 560 மன்னராட்சிப் பகுதிகள் இருந்தன. காஷ்மீரும் அவற்றில் ஒன்று.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் அதிகாரத்தை மாற்றித் தந்தபோது, மன்னராட்சிப் பகுதிகள், இந்தியா அல்லது பாகிஸ்தான் எதனுடன் சேர விருப்பமோ, அதனுடன் சேர்ந்துகொள்ளலாம் என்று, விருப்பத்தை அவற்றிடம் விட்டு விட்டனர். எந்த ஒரு மன்னராட்சிப் பகுதியின் மக்களது மத ரீதியான சிக்கல்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
காஷ்மீர் மன்னர் ஹரிசிங், தனிநாடு கனவில் இருந்ததால், யாருடன் சேருவது என்று முடிவு செய்யாமல் ஊசலாட்டத்தில் இருந்தார். 1947 அக்டோபர் 27-ஆம் தேதி இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். அவர் இந்த முடிவிற்கு வரக் காரணம் இருந்தது. காஷ்மீர் பதான் இனத்தவர் பாகிஸ்தானுடன் சேர்ந்து, காஷ்மீர் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். வேறு வழியில்லாமல் மன்னர் ஹரிசிங், அக்டோபர் 24-ல் இந்தியாவிடம் ராணுவ உதவியைக் கோரினார். காஷ்மீரை ராணுவ பலத்தால் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அது தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்தது. அந்தத் திட்டத்தை இந்திய ராணுவம் முறியடித்தது.
காஷ்மீர் மக்கள் பதான் படை எடுப்பாளர்களை ஆதரிக்காதது, பாகிஸ்தானின் திட்டத்தை மேலும் உடைத்தெறிந்தது. அதனால் இந்திய ராணுவம், பாகிஸ்தான் படை எடுப்பைச் சுலபமாக முறியடித்தது. இந்தச் சிக்கலான கட்டத்தில், பிரதமர் நேரு லார்ட் மௌன்ட் பேட்டனின் நெருக்குதலுக்குப் பணிந்து, காஷ்மீர் பிரச்சனையைத் தேவை இல்லாமல் 1948 ஜனவரி முதல் நாள் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சென்று விட்டார். அதன் விளைவாக, ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரச்சனையைக் கவனிக்க, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷன் 1948 ஆகஸ்டு 13-ஆம் தேதி போர் நிறுத்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் எல்லா வெளி நபர்களையும் வெளியேறும்படிக் கூறியது.
அதைத் தொடர்ந்து இந்திய படைக் குறைப்பும் செய்யப்பட்டது. பொது வாக்கெடுப்பின் மூலம் ஜம்மு – காஷ்மீரின் எதிர்காலத்தை முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் ஒட்டுமொத்தப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படைகள் முற்றிலுமாக வெளியேறிய பிறகுதான், பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் முற்றிலுமாக வெளியேறவில்லை. அதனால் வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் ‘பொது வாக்கெடுப்பு’, ‘மக்களின் விருப்பப்படி தீர்மானிப்பது’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததே, பாகிஸ்தானும் ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாதச் சக்திகளும், உலக அளவில் பல பத்தாண்டுகள், இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப் போதுமானதாகி விட்டது.
copyright(c) thuglak.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment