Wednesday, 18 November 2009

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நிலை

துக்ளக் பத்திரிக்கையில் பா.ஜ.க தலைவர் அத்வானி அவர்கள் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ஆகஸ்ட் 13‍ம் தேதி இதழில் வெளியான கட்டுரை இது.
****************************************
அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நிலை – எல்.கே. அத்வானி
-->என் தேசம், என் வாழ்க்கை - 29

இந்திய வரைபடத்தை இப்போது பார்ப்பதையும், கராச்சியில் மாணவனாக இருந்த காலத்தில் பார்த்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதன் பரப்பளவு எவ்வளவு குறைந்து போய்விட்டது என்பது புரிகிறது. பிளவுபடாத அன்றைய ஒரு இந்தியாவின் இடத்தில் இப்போது மூன்று சுதந்திர தேசங்கள். அதே நிலப்பரப்பில் இருந்து 1947-ல் பாகிஸ்தான் உருவானது. 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் உருவானது. ஆனால், இன்றைய இந்தியாவின் வரைபடம், அன்றைய நமது ஆட்சியாளர்கள், நமது நாட்டின் எதிர்கால புவியியல் ரீதியான அபாயங்களில் எப்படி அக்கறை செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறது.

...வடிவ ரீதியில் வடகிழக்குப் பகுதி தனிமைப்பட்டுக் கிடப்பதால், அந்தப் பகுதியில் வாழும் பல வகைப்பட்ட சமுதாயங்கள் மத்தியில், உணர்வு ரீதியான பிணைப்பைப் பலப்படுத்த முடியவில்லை.

...உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்குப் பகுதி எனக்குக் கவலை அளிப்பவையாக அமைந்தன. பல பத்தாண்டுகளாக இந்தப் பகுதி பிரிவினைவாதப் போர்களால் தாக்குண்டு வருகிறது. இன வன்முறை, தீவிரவாதிகள் நிகழ்த்தும் படுகொலைகள், பீஹார் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் இருந்து வந்து வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளர்கள் கொல்லப்படுவது, ஆயுதம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல், பங்களாதேஷில் இருந்து தங்குதடை இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் ஊடுருவல்கள் ஆகியவற்றால் இந்த பகுதி திணறிக்கொண்டு இருக்கிறது.

பங்களாதேஷில் இருந்து அஸ்ஸாமில் நிகழும் ஊடுருவலை உச்ச நீதிமன்றம், ‘வெளிநாட்டு ஆக்கிரமிப்பு’ என்று அபாய எச்சரிக்கை மணியைக் கூட அடித்துவிட்டது. ஆனாலும், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இது அமைதியான முறையில், பங்களாதேஷினால், தொடர்ச்சியாக இந்தியாவில் செய்யப்படும் படையெடுப்பு. இதன் விளைவுகள் மோசமானவை. தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் அது தெரிய வரும் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.

...அஸ்ஸாம் பிரச்சனையின் ஆரம்பம், முஸ்லிம் லீக் 1940-ல் இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் எனும் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியபோதே உண்டாகிவிட்டது. தங்களது சொந்த மண்ணில் தங்களைச் சிறுபான்மையினராக ஆக்கி, அதன் மூலம் இந்தியாவில் இருந்து பிரிக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வு இஸ்லாமியர்களுக்கு அப்போது உண்டானது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக 1905-ல் வங்காளம் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1906-ல் டாக்காவில் முஸ்லிம் லீக் நிறுவப்பட்டு, அஸ்ஸாமின் கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை பெருக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம்களை சிறுபான்மையினராகக் கொண்ட அஸ்ஸாமை, முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக ஆக்கி, கிழக்கு பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ள முஸ்லிம் லீக் சதி செய்தது. அந்தச் சதியை முறியடித்தவர் கோபிநாத் போர்டொலாய். நவீன அஸ்ஸாமின் சிற்பியான இவர் மாபெரும் தேசியவாதத் தலைவர். அஸ்ஸாமில் 1937-ல் காங்கிரஸ் தலைமையில் அமைந்து, சிறிது காலமே நிலைத்த ஆட்சிக்கு அவர் தலைமை வகித்தார். அவர் மட்டும் உறுதியாக முயன்று போராடி இருக்கா விட்டால், அஸ்ஸாம் இந்தியாவுடன் தொடர்ந்து இருந்திருக்காது.

1947-ல் மகாத்மா காந்தியைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்களும், அஸ்ஸாம் மீதான உரிமையை கைவிடத் தயாராகி விட்டார்கள். அஸ்ஸாம் கிழக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதி ஆகிவிடக் கூடும் என்ற ஆபத்தான கட்டத்தில் மகாத்மா காந்தி போர்டொலாயை ஆதரித்தார். அஸ்ஸாம் மௌனமாக இருந்தால், அதன் தலைவிதி முடிந்து விடும்... அஸ்ஸாம் தனது ஆத்மாவை இழந்துவிடக் கூடாது என்று எழுதி மகாத்மா தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அஸ்ஸாம் தொடர்ந்து இந்தியாவில் நிலைத்திருக்க தேவைப்பட்டால் காங்கிரஸை விட்டு கூட வெளியேறுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். இறுதியில் வாக்கெடுப்பின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருந்த ஸ்ய்லெட் மாவட்டம் மட்டும் கிழக்குப் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

...1980-களில் நடந்த மாணவர் போராட்டங்களின்போது அடல்ஜியும், ஜஸ்வந்த் சிங்கும், நானும் அடிக்கடி அஸ்ஸாம் சென்று அவர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்தோம். அந்த சமயத்தில்தான் பிரபுல்ல குமார் மஹந்தாவுடனும், மற்ற தலைவர்களுடனும் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டாயிற்று. அஸ்ஸாம் போராட்ட காலத்தில்தான் அருண் ஷோரியுடன் பழக்கம் ஏற்பட்டது. பிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அருண்ஷோரி மாணவர் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகவும், ஆலோசகராகவும் இருந்தார். ஷோரி பிறகு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மதிப்புமிக்க சகாவானார்.


அருண்ஷோரி...அஸ்ஸாமில் நடக்கும் வெளிநாட்டவருக்கு எதிரான போராட்டம் தவறாக வழிநடத்தப்பட்ட சில மாணவர்களால் உண்டானது அல்ல. அஸ்ஸாமை தொடர்ச்சியான ஊடுருவலில் இருந்து காப்பாற்ற ஏற்பட்ட இயக்கம். 1950-ல் நேரு – லியாகத் அலிக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையும், 1971-ல் இந்திரா காந்தி – முஜிபுர் ரஹ்மான் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தமும் தோல்வி அடைந்தன. 1985-ல் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் ஏற்பட்ட அஸ்ஸாம் உடன்பாடு தீர்வை உண்டாக்குவதற்கு பதிலாக பிரச்சனையை அதிகரிக்கச் செய்தது. வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் பற்றிய பிரச்சனையில் 1971-ஆம் ஆண்டை – 1951 முதல் 1971 வரை ஊடுருவியவர்களை உண்மையான இந்தியர்கள் என்று ஏற்பதாக ஆக்குகிற ஒன்றாயிற்று.

ஆறு ஆண்டுகால கடுமையான போராட்டத்தால் அஸ்ஸாம் மக்கள் களைப்படைந்து போன நிலையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி ஒரு உடன்பாட்டைத் திணித்தது. அதைக் கூட நிறைவேற்றும் விருப்பமும் அதற்கு இல்லை.

வடகிழக்கில் ஒரு புதிய அணுகுமுறை

...வடகிழக்கு பிராந்தியத்தில் 3.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் முன்னூறுக்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வடகிழக்கின் புவியியல் தன்மையும் வரலாறும் தனித்தன்மை கொண்டது. இந்த அம்சங்களோடு பிரச்சனைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் உண்டாகவில்லை.

உதாரணத்திற்கு வெளிநாட்டு குறுக்கீடு இந்தியாவின் வேறு எந்த பகுதியையும் விட இந்தப் பகுதியில் அதிகம். சர்வதேச எல்லைக் கோட்டின் இரண்டு புறங்களிலும் வங்கதேசம், மியான்மர், பூட்டான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளுடன் வாழ்ந்து வருவதால் நீண்டகாலமாக மொழி ரீதியான, இன ரீதியான, கலாச்சார ரீதியான, பொருளாதார ரீதியான இணைப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த பிராந்தியத்தின் மொத்த மக்கள் தொகையில் நாற்பது சதவிகிதம் மலை ஜாதி பழங்குடியினர். இவர்கள் தங்களது அடையாளங்களைக் கட்டிக் காப்பதிலும் சுயமான கட்டுப்பாடு பாரம்பரிய முறைகளைக் கடைபிடிப்பதிலும் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் 1947-க்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலையை பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க முடியாது. தேசிய பாதுகாப்பு, மிக மிக முக்கியமானதுதான். ஆனால், அதை அந்தப் பகுதி மக்களுக்கு இந்தியாவுடன் உணர்வுபூர்வமான பிணைப்புடன் பலப்படுத்துவதன் மூலம்தான் உத்தரவாதப்படுத்த முடியும். இதை ஏற்படுத்த அங்கு உள்ள இனங்களின் தனி அடையாளங்களை மதிக்க வேண்டும். மக்களின் துணையுடன் அங்கு நல்லாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் மற்றப் பகுதிகளுடன் இந்தப் பகுதிக்கு ஆழமான இணைப்பை உண்டாக்க வேண்டும். அந்த வகையில் வடகிழக்கில் நிலவும் சூழ்நிலையை பாதுகாப்பு, ஜனநாயகம், வளர்ச்சிக்குரிய அம்சங்களின் ஒன்றிணைந்த முயற்சியுடன்தான் எதிர்கொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்களும் தேசிய கட்சிகளும் இந்த விஷயத்தில் போதிய கவனத்தைச் செலுத்தவில்லை. அதே சமயம் இந்தப் பிராந்தியத்தின் மக்கள் நல்வாழ்விற்கான வளர்ச்சிக்காக போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏராளமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வந்திருக்கிறது. ஆனால், அந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் வகுக்கப்பட்ட பல திட்டங்களின் பலன்கள் உரிய பயனாளிகளுக்குப் போய் சேரவில்லை. பொறுப்பான ஆட்சி நிர்வாகத்தைத் தர வேண்டிய மாநில கட்சிகள் பலவீனமான தலைமை, உட்கட்சிப் பூசல் ஆகியவற்றால் சீர்குலைந்தது.

Copyright(c) thuglak.com

No comments: