Wednesday 18 November, 2009

பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்

பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 25

அமெரிக்காவில் 11.9.2001 அன்று நடந்த விமானத் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான இடைவெளியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், ஸ்ரீநகரில் ஜம்முகாஷ்மீர் சட்டமன்றத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். சட்டமன்றத்திற்கு அருகில் வெடித்த கார் வெடிகுண்டால் 38 பேர் கொல்லப்பட்டனர். அந்த கார் வெடிகுண்டைத் தொடர்ந்து, ஆயுதம் தாங்கிய மூன்று தீவிரவாதிகள் சட்டமன்ற வளாகத்திற்கு முன் தாக்குதல் நடத்தினர். அதைவிட கொடிய தாக்குதல் 2001 டிசம்பர் 13ஆம் தேதி புது டெல்லியில் நடந்தது. இம்முறை தாக்குதல் இலக்கு இந்திய பாராளுமன்றம்.

தாக்குதல் நடந்தபோது, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்தது. "சவப் பெட்டி ஊழல்' புகாரில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் ராஜினாமாவைக் கோரி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. நான் பாராளுமன்றக் கட்டிடத்தில் எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். 11.40 மணி அளவில் தோட்டாக்கள் வெடிப்பது போன்ற ஒரு பெரிய சத்தம் கேட்டது. நான் எனது அலுவலகத்தில் இருந்து வேகமாக வெளியில் வந்தேன். வட்ட நடைபாதையில் சில அடி தூரம் நடந்து வரும்போதே பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி, "ஸார் மேற்கொண்டு வெளியே போகாதீர்கள்' தீவிரவாதிகளின் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது' என்றனர்.

மின்னல் வேகத்தில் இயங்கிய மத்திய ரிஸர்வ் போலீஸ் படையினரும், இந்திய திபெத் எல்லை போலீஸ் படையினரும், டெல்லி போலீஸாரும் பாராளுமன்றத்திற்கு அரணாக நிலை கொண்டனர். தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கத் துவங்கினர். பாராளுமன்றத்தின் எல்லா கதவுகளும் மூடப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்களோ, மற்றவர்களோ நடைபாதையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்பட்டனர். பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதைக் கேட்ட பிறகு, தனது 7 ரேஸ்கோர்ஸ் இல்ல அலுவலகத்தில் இருந்த பிரதமருக்கு உடனடியாக ஃபோன் செய்தேன். விஷயத்தை தெரிவித்தேன். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இருபது நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதன் பிறகு மொத்தமாக அமைதி நிலவியது.

குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த், சபாநாயகர் பாலயோகி, மாநிலங்களவையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தவிர, இருநூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது இருந்தனர். ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி கேமிரா கலைஞர்களும் கட்டிடத்திற்குள் இருந்தனர். அவர்கள் இருந்தது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்திய பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மொத்த உலகமும் காண உதவியது.

ஐந்து தீவிரவாதிகள், பாராளுமன்றத்திற்குள் நுழைய வினியோகிக்கப்படும் அனுமதி சீட்டை போலியாகத் தயாரித்து, பாராளுமன்ற சாலையில் ஒரு அம்பாசிடர் காரில் நுழைந்துள்ளனர். காரில், உள்துறை அமைச்சக லேபிள் ஒட்டப்பட்டு இருந்திருக்கிறது என்று பிறகு தெரிய வந்தது. ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் சாகும் முன் "எங்கள் வேலை முடிந்துவிட்டது. பாகிஸ்தான் நீடூழி வாழ்க' என்று கத்தி விட்டு சாய்ந்தான். தீவிரவாதிகளை பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒன்பது பேர் தங்களது உயிரைத் தியாகம் செய்தனர்.

....உளவுத்துறை தகவல்களின்படி பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளான லஸ்கர்இதொய்பா, ஜெய்ஸ்இமுகமத் ஆகியவை இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவைப் பெற்ற இந்த இரண்டு அமைப்புகள்தான் தாக்குதலில் ஈடுபட்டன என்பதை, அதற்குப் பிறகு கிடைத்த தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தின. தற்கொலைப் படையாக வந்து தாக்குதல் நடத்திய ஐந்து நபர்களும் பாகிஸ்தான் பிரஜைகள்.

தொடர்ந்து நடந்த விசாரணையின் விளைவாக, டெல்லி கல்லூரி ஒன்றில் ஆசிரியராக இருந்த சையித் அப்துல் ரஹ்மான் கிலானி கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முகமத் அஃப்ஸல் மற்றும் சௌகத் ஹுசைன் குரு ஆகிய இருவரின் தொடர்பு தெரிய வந்தது. சௌகத் ஹுசைனின் மனைவி, "தனது கணவரும், அஃப்ஸலும் டிஸம்பர் 13ஆம் தேதி மதியம் ஸ்ரீநகர் சென்றுவிட்டதாக' தெரிவித்தார். இந்தத் தகவல் உடனடியாக ஜம்முகாஷ்மீர் காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டனர். நடந்த தாக்குதல் நிகழ்ச்சிக்கு அஃப்ஸல் முக்கிய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

ஜெயிஸ்இமுகமத் அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பிரஜையான காஜிபாபா என்ற நபர், அஃப்ஸலுக்கு அந்த வேலையைக் கொடுத்திருந்தார். அஃப்ஸலுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் முஸாராஃபாத் என்ற இடத்தில் நடத்தப்படும்முகாமில், ஐ.எஸ்.ஐ.யால் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து தீவிரவாதிகள் பதுங்கி இருக்க, சௌகத் ஹுஸைன் இடம் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார். அந்த இடங்களில் இருந்து காவல் துறை முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியது.

பாராளுமன்ற தாக்குதல் சதிச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, முகமது அஃப்ஸலுக்கு 2002ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தன. அஃப்ஸல் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.

தீவிரவாதிகளுடன் அஃப்ஸலுக்குத் தொடர்பு இருந்தது என்பதற்கு அஃப்ஸலுக்கு எதிரான உறுதியான ஆதாரம் இருக்கிறது என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான சௌகத் ஹுஸைன் மற்றும் கிலானிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. சௌகத் ஹுஸைனின் மனைவி நவ்ஜோத் சந்துக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கியது. உச்ச நீதிமன்றம் சௌகத்தின் தூக்குத் தண்டனையை பத்தாண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்தது. கிலானியையும், அஃப்ஸல் குருவையும் விடுதலை செய்தது. அஃப்ஸலின் தூக்குத் தண்டனை 2006 அக்டோபர் 20ஆம் தேதி நிறைவேற்றப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் உள்துறை அமைச்சகம், அஃப்ஸலின் கருணை மனுவின் மீதான தனது எதிர்ப்பை குடியரசுத்தலைவருக்குத் தெரிவிக்க மறுத்துவிட்டதால், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.

காங்கிரஸும் மற்ற பல கட்சிகளும், பிரச்சனையை மத ரீதியான ஒன்றாக மாற்றியது அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகும். முழுக்க முழுக்க வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, அஃப்ஸலுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற சில தொண்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான பிரச்சாரத்தை ஆதரிக்க முனைந்துவிட்டன. எங்கள் கட்சியும் நானும் இந்தக் கோரிக்கைக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தோம். நான், "பாராளுமன்றத்தின் மீது குறி வைத்து தொடுக்கப்பட்ட தாக்குதல், ஒரு போரைப் போன்றது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. எனவே இந்தக் குற்றத்தை வேறு சில இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குச் சமமாகப் பார்க்கக்கூடாது' என்று குறிப்பிட்டேன். அஃப்ஸலின் தூக்குத் தண்டனையை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து டிஸம்பர் 13ஆம் தேதி நடந்த தாக்குதலில், உயிர் நீத்த வீரம் நிறைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் உறவினர்கள், வீரச் செயல்களுக்கான பதக்கங்களைத் திருப்பித் தந்துவிட்டனர். சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் போக்கிற்கு, இதைவிட அவமானகரமான கண்டனம் எதுவாக இருக்க முடியும்?

copyright(c) thuglak.com

No comments: