Wednesday, 18 November 2009

ராமர் இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம்

ராமர் இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம் – எல்.கே. அத்வானி

என் தேசம், என் வாழ்க்கை 17


...சோமநாத ஆலயம் சில முஸ்லிம் ஆக்ரமிப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உண்டாக்கி வளர்த்த, மத வெறுப்புணர்வுக்கும், வன்முறைக்கும் சாட்சியமாக திகழும் அதே நேரத்தில், அதை எதிர்த்து நின்ற மக்களின் தைரியத்திற்கும் சான்றாக விளங்குகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பல தேசிய தலைவர்கள் சோமநாத் ஆலயத்தை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று எடுத்த முடிவு, முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் என்ற அடிப்படையில் அல்ல. நமது சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை, கூடி வாழும் தன்மைக்கு விருப்பமின்மையை வலியுறுத்துகிற போக்கிலும் அல்ல.


...சோமநாத் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, ஜோதிர்லிங்கமும் நிறுவப்பட்டு விட்ட நிலையில், அதைத் துவக்கி வைக்க இந்தியாவின் முதல் குடியரசுதலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை, முன்ஷி அழைத்தார்.
...1990ல், அயோத்தியா இயக்கத்திற்கு மக்களின் ஆதவைத் திரட்ட கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் ரத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தபோது, அந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பயணத்தின் ஆரம்ப இடம் சோமநாத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று உடனே தேர்வு செய்தேன்.


...ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு அவ்வளவு பெரிய வீச்சும், வலிமையும் எதனால் கிடைத்தது? இந்தியாவின் தேசிய வாழ்வில் ராமருக்கும், ராமாயணத்திற்கும் இருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டால், அதற்கு விடை காண்பது எளிது. பல நூற்றாண்டுகளாக ராமாயணமும், மகாபாரதமும் இந்தியர்களின் கலாச்சார ஆளுமையிலும், நற்பண்புகளின் முறையிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது. ராமர் உதாரணமாகத் திகழ்ந்த அரசர். அதனால்தான், மஹாத்மா காந்தி "ராம ராஜ்யம் என்ற நல்லாட்சியை இந்தியாவின் கொள்கை' என்று வலியுறுத்தினார். ராமர் உயர்ந்த பண்புகள் கொண்ட மனிதப் பிறவியாகவும் திகழ்ந்தார். அதனால், மனிதர்களில் அவர் ஒரு "உதாரண புருஷன்' என்று புகழப்பட்டார்.


...சோமநாத்தைப் போலவே ராமர் பிறந்த அயோத்தியும் அந்நியப் படையெடுப்பாளர்களின் தாக்குதல் இலக்காக ஆனது. முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபர், அயோத்தியைத் தாக்கினார். 1528ஆம் ஆண்டு அயோத்தியில் ஒரு மசூதியைக் கட்டும்படி தனது தளபதி மீர்பாகிக்கு பாபர் கட்டளையிட்டார். அதனால், அந்த மசூதிக்கு "பாபர் மசூதி' என்று பெயர் வந்தது. மீர்பாகி, ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்து விட்டு, அந்த மசூதியைக் கட்டினார் என்பது ஹிந்துக்களின் பரவலான நம்பிக்கை!

வெல்லப்பட்டவர்கள் தங்களது தோல்வியின் வரலாற்றை எழுதுவது அரிது. வென்றவர்களோ தங்களது வெற்றியை எப்போதும் பதிவு செய்து வைத்திருப்பார்கள் என்பது மிகவும் சரியே. அந்த வகையில் "அயோத்தியைப் பற்றி முகமதியர்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. பதினாறாவது நூற்றாண்டின் இறுதியில்அபுல் ஃபாஸல் எழுதிய "அய்ன்ஐஅக்பரி' என்ற நூல், "அயோத்தி அமைந்திருக்கும் பிரதேசமான அவாத்தில் திரேதா யுகத்தில் கட்டப்பட்ட ராமச்சந்திரர் கோவிலில், ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது' என்கிறது.

...அதே போல "ஹடிக்வாஐஸஹாடா' என்ற மிர்சாஜான் (1856) எழுதிய புத்தகம் "...ஜன்மஸ்தானில் கோவில் இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம். அதற்குப் பக்கத்தில் சீதாவின் ரஸோய் இருந்தது. ராமரது மனைவியின் பெயர் சீதா. எனவே, அந்த இடத்தில் மீர் அஷிகானின் வழி காட்டுதல்படி பாபர் பாதுஷா பெரிய மசூதியைக் கட்டினார்' என்று குறிப்பிடுகிறது.
அயோத்யா தகராறின் வரலாற்று மூலங்கள்!

....இந்தப் புனித ஸ்தலத்தை மீட்க ஹிந்துக்கள் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன. ராமஜென்ம பூமி அவர்களுக்கு மத ரீதியாக எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. எனினும் முஸ்லிம்களுக்கு அந்த இடம், மத ரீதியாகவோ, கலாச்சார ரீதியாகவோ சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. முஸ்லிம் ஆட்சியின் நீண்ட வரலாற்றின் போது, ஹிந்துக்கள் அயோத்திக்குத் தொடர்ந்து புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதன் முக்கியத்துவம், இடைக்கால வரலாற்றின் காலத்தில் ஒரு முஸ்லிம் ஆக்ரமிப்பாளரால் பெறப்பட்ட வெற்றியின் சின்னம் என்பதைத் தவிர வேறு இல்லை.

.....சுதந்திரத்திற்கு முன்னும் பிறகும் நீண்டகாலமாக ராமஜென்ம பூமியை மீட்கும் முயற்சியை ஹிந்துக்கள் சட்ட ரீதியாக மேற்கொண்டு வருகிறார்கள். 1885ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்குப் பிறகு உள்ளூர் ஹிந்துத் தலைவர் மஹந்த் ரகுபார்தாஸ் ஃபைஸாபாத் மாவட்ட நீதி மன்றத்தை அணுகி, "ராமஜென்ம பூமியில் ஆலயம் நிறுவ உத்தரவிட வேண்டும்' என்று கோரினார். 1886ஆம் ஆண்டு கர்னல் எஃப்.ஈ.எ. ராமியர் என்ற பிரிட்டிஷ் நீதிபதி, "எல்லா கட்சிக்காரர்கள் முன்னிலையில் தகராறுக்கு உட்பட்ட அந்த இடத்தை நேற்று நான் பார்வையிட்டேன். சக்ரவர்த்தி பாபரால் கட்டப்பட்ட மசூதி, அயோத்தியின் மேற்கு மற்றும் தெற்கு எல்லையில் இருப்பதைக் கண்டேன். ஹிந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அந்தச் சம்பவம் 356 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஹிந்துக்களின் குறைகளை ஏற்று இப்போது முடிவு சொல்வது, மிகவும் காலம் கடந்த ஒன்று. இப்போது உள்ள நிலையே தொடரலாம் என்பதை மட்டும்தான் என்னால் செய்ய முடியும். இம்மாதிரி ஒரு வழக்கில் புதிதான எந்த ஒரு கண்டுபிடிப்பும், எந்த நன்மையையும் விளைவிப்பதை விட, தீமையைத்தான் விளைவிக்கும்' என்று தீர்ப்பளித்தார்.

நாடு விடுதலை அடைந்த பிறகு சோமநாத் ஆலயத்தைக் கட்ட நேருவின் அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, அதே போல ஜென்ம பூமியிலும் நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அயோத்தி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஹிந்துக்கள், புதிய வேகத்துடன் தங்களது சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 1949ஆம் ஆண்டு டிசம்பர் 2223 அன்று இரவு சிலர், 1934 முதல் பூட்டி மூடப்பட்டுக் கிடந்த தகராறுக்கு உட்பட்ட கட்டிடத்தில், ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளை ஸ்தாபித்து விட்டனர்.
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஃபைஸாபாத் மாவட்ட மாஜிஸ்ரேட்டாக இருந்த கே.கே. நாயர், அந்தச் சிலைகளுக்கு கர்ப்ப கிரஹத்தில் தினசரி பூஜை நடக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து வந்த நீதிமன்ற நடவடிக்கையில் சிலைகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. சிலைகளுக்கு பூஜை செய்யும் ஹிந்துக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. அந்தத் தடை உத்தரவை உறுதி செய்தபோது, ஃபைஸாபாத் சிவில் நீதிபதி... "குறைந்தபட்சம் 1936ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தை முஸ்லிம்கள் மசூதியாகப் பயன்படுத்தவில்லை. அங்கு தொழுகையும் நடத்தவில்லை. பிரச்சனைக்குரிய இடத்தில் ஹிந்துக்கள் தங்களது பூஜையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

சில முஸ்லிம்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், 1955 ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் ஹிந்துக்களின் கட்டுப்பாடற்ற வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. நீதிமன்றம், தகராறுக்கு உட்பட்ட சொத்தின் வழக்கு பற்றிக் குறிப்பிடும்போது, "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வகையான வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் நல்லது. நாலு ஆண்டுகளுக்குப் பிறகு இது முடிவடையாமல் தொடர்வது வருந்தத்தக்கது' என்றது.

அந்த வழக்கு இன்று வரையிலும் முடியாமல் தொடர்வது எவ்வளவு வேடிக்கையானது? எவ்வளவு வருந்தத்தக்கது?

...ராஜீவ் காந்தியின் அரசாங்கம் ராம ஜென்ம பூமி இயக்கத்தை ஆதரித்த சம்பவமும் நடந்தது. 1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், நாடெங்கிலுமிருந்து அயோத்திக்கு புனித செங்கற்களைக் கொண்டு வரும் திட்டத்தை விச்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. நவம்பர் 10ஆம் தேதி கோவில் கட்ட அடித்தளம் எழுப்பவும் அது அறிவித்திருந்தது. கட்டிடத்திற்கு அருகில் உள்ள காலி இடம் பிரச்சனைக்கு உட்பட்டது அல்ல; அங்கு பூமி பூஜை நடத்தத் தடையில்லை என்று மத்திய, மாநில காங்கிரஸ் ஆட்சிகள் அறிவித்தன. ஆனால், அதற்கு முந்தின தினம் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வேறு மாதிரி கூறியிருந்தது. ராமர் கோவி லைக் கட்டும் பணியின் தொடக்கம் நடந்தது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த காமேஸ்வர் சோபால் என்ற ஹரிஜன், முதல் செங்கல்லை எடுத்து வைத்தது விசேஷமான ஒன்று. எனினும், அடுத்த நாளே அரசாங்கம் கட்டுமானத்தை நிறுத்த உத்திரவிட்டது.

...அயோத்திப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி திடீர் திடீரென்று தன் நிலையை மாற்றிக்கொண்ட மனப்பான்மை வேறு ஒரு கருத்தை உருவாக்கியது. ஷா பானு வழக்கில் முஸ்லிம்கள் தந்த அழுத்தத்தால், அவர்களிடம் அரசு அடி பணிந்துவிட்டது என்ற கருத்து பரவி நின்ற நிலையில், அதைச் சமன்படுத்த ராஜீவ் காந்தி அயோத்திப் பிரச்சனைக்கு ஆதரவு தர முன்வந்தார் என்பதே அந்தக் கருத்து.

...அயோத்திப் பிரச்சனை அகில இந்தியப் பிரச்சனையாக வடிவெடுக்க அது பெரிதும் துணை புரிந்தது. சில முஸ்லிம் அமைப்புகளும், பிரமுகர்களும் சச்சரவுக்கு உட்பட்ட இடத்தின் கதவுகளைத் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அயோத்திப் பிரச்சனைக்கு தேசிய அளவில் கவனத்தை உண்டாக்கியது. தேசிய அளவிலான எந்த ஒரு முஸ்லிம் அமைப்புமல்ல – சிறிய ஒரு அமைப்புக் கூட 1951ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்திரவை மாற்றக் கோரி, 1986 வரையில் போராட்டம் நடத்தியதில்லை. ஷா பானு பிரச்சனைக்குப் பிறகு சூழ்நிலை மாறிவிட்டது.

அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்தால், 1951ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவையும், 1986ஆம் ஆண்டின் நிர்வாக ஆணையையும் மாற்றிவிட முடியும் என்று முஸ்லிம் அமைப்புகளும், பிரமுகர்களும் இப்போது நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்காக அகில இந்திய பாபர் மசூதி செயல் கமிட்டி துவக்கப்பட்டது.
*****

No comments: