இரண்டு ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள்– எல்.கே. அத்வானி
என் தேசம், என் வாழ்க்கை 22
பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் 161 இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியாக இருந்தும், பதிமூன்று நாட்களுக்கு மேல் ஆட்சியில் தொடர முடியவில்லை...
தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் செய்தி தெளிவாக இருந்தது. மக்கள் அளித்த தீர்ப்பு அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு ஆதரவாக, பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தது. மற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரும் நிலையிலே இல்லை. அதனால் இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா, அடல்ஜியை ஆட்சி அமைக்க அழைத்ததும், அவருக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும் இயற்கையானது. அடல்ஜி மே மாதம் 16ஆம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றார். பதினான்கு நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டார்....
தேவே கௌடா பிரதமராகிறார்
வாஜ்பாய்
அடல்ஜி ஆட்சியின் வீழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்தது. ஜனதா தளத்தின் தலைமையில் "தேசிய முன்னணி' என்ற பெயரில் இருந்த கூட்டணி, இப்போது ஐக்கிய முன்னணியாக மாறி இருந்தது. ஐக்கிய முன்னணி ஆட்சியின் கோமாளித்தனம், அது பிறப்பதற்கு முன்பே வெளிப்பட்டது. ஐக்கிய முன்னணியின் தேசியத் தலைவர்களில் ஒருவரைத் தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்து உண்டாகவில்லை....
வி.பி.சிங், தான் போட்டியில் இல்லை என்று அறிவித்தார். இதை அவர் விரும்பிச் செய்தார் என்பதைவிட, நிர்பந்தத்தால் செய்தார் என்பதுதான் உண்மை. ஏனெனில், "போஃபர்ஸ்' பிரச்சனையில் அவர் ராஜீவ் காந்திக்கு எதிராகச் செயல்பட்டதால் இப்போது அவரது தலைமையில் ஆட்சி அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வழி இல்லை.
அதனால் முன்னணியின் தலைவர்களின் பார்வை, மூத்த சி.பி.ஐ. (எம்) தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான ஜோதிபாசுவின் பக்கம் திரும்பியது. பிரதமர் பொறுப்பை ஏற்க அவர் தயாராக இருந்தார். ஆனால், அவரது கட்சியின் மத்தியக் குழு அந்த யோசனையை நிராகரித்தது. மத்தியக் குழுவின் அந்த முடிவை பின்னாளில் ஜோதிபாசு "ஒரு வரலாற்றுப் பிழை' என்று விவரித்தது, பிரபலமான வாசகம் ஆயிற்று
பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்வு செய்வதை விட, நிராகரிப்பது என்ற முறை தொடர்ந்ததன் காரணமாக, இறுதியில் கர்நாடக முதல்வர் எச்.டி. தேவகௌடாவை ஐக்கிய முன்னணி தலைவர்கள் தேர்வு செய்ய நேர்ந்தது. தேவகௌடா அதுவரையில் தேசிய அரசியலில் பங்கு பெற்றவர் அல்ல. ஜூன் 1ஆம் தேதி இந்தியாவின் 11ஆவது பிரதமராக அவர் பதவி ஏற்றார். அதே காலகட்டத்தில், நாடு மற்றொரு வேகமான மாற்றத்தைக் கண்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பி.வி. நரசிம்மராவ் நீக்கப்பட்டார். 1996 பாராளுமன்றத் தேர்தல்களின் தோல்விக்குக் காரணமான வில்லனாக அவர் சித்தரிக்கப்பட்டார். அவரது இடத்திற்கு, கட்சியின் பொருளாளராகப் பல ஆண்டுகள் இருந்த சீதாராம் கேசரி வந்தார்...
1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேசரி, திடீர் என்று தேவகௌடா ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் மக்களைத் திடுக்கிட வைத்தது. "பிரதமர் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதையை, அல்லது அங்கீகாரத்தைத் தரவில்லை. அவரது ஆட்சி எங்களால்தான் பிழைத்திருக்கிறது என்ற போதிலும் மதிக்கவில்லை' என்பது அந்தக் காரணம்.
11 மாதங்கள் நடைபெற்ற தேவகௌடாவின் ஆட்சி, எப்படி நடந்தது என்பதை, அந்த ஆட்சியின் மூத்த, மரியாதைக்குரிய அமைச்சர் சொன்னதைக் கொண்டே அறியலாம். தேவகௌடா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சி.பி.ஐ. தலைவர் இந்திரஜித் குப்தா கூறியது: ""தேவகௌடா மாற்றத்திற்கு முழுக்க முழுக்க சீதாராம் கேசரி மட்டுமே காரணம் அல்ல. அவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஐக்கிய முன்னணியிலும் நிலவியது. கௌடா ஒரு சர்வாதிகாரியைப் போல் நடந்து கொண்டார். நான் அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சர். அவர் என்னுடன் பேச மறுத்தார். அவர் ஒருபோதும் என்னோடு பேசியது இல்லை, ஒரு போதும் என்னுடன் கலந்து ஆலோசித்தது இல்லை, இந்த விஷயங்களை நான் வெளியில் சொல்ல முடியாது. ஆட்சியில் இருந்தபோதும் என்னால் சொல்ல முடியாது. நான் மௌனம் காக்க நேர்ந்தது''....
ஐ.கே. குஜ்ரால் பிரதமர் ஆனார்
தேவகௌடா
தேவகௌடாவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ரால் 1997 ஏப்ரல் 21ஆம் தேதி தேவகௌடாவுக்குப் பதில் பிரதமராக ஆனார். இந்த மாற்றத்தைப் பற்றி நான் கருத்து தெரிவிக்கும்போது, ஐக்கிய முன்னணி அரசிற்கு நிகழ்த்தப்பட்ட "தலை அறுவை சிகிச்சை இது' என்று குறிப்பிட்டேன். மற்றவர்கள் "ஆபரேஷன் கணேஷ்' என்றனர். அரசாங்கத்தின் உடல் அப்படியே இருக்கிறது. அதன் தலை மட்டும் வேறு ஒருவரின் தலையைக் கொண்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே "ஆபரேஷன் கணேஷ்' என்ற சொல்லுக்கு விளக்கம்.
ஐ.கே.குஜ்ரால்
இந்த வேகமான அறுவை சிகிச்சைக்கு அவசியமும், அவசரமும் என்ன? இந்தக் கேள்விக்கு ஐ.கே.குஜ்ரால் பிரதமரானதும், எடுத்த நடவடிக்கை விடையாக அமைந்தது. ஸி.பி.ஐ. டைரக்டர் பதவியில் இருந்து ஜோகிந்தர் சிங்கை நீக்கினார். காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சனை உண்டாக்கக்கூடிய போஃபர்ஸ் ஊழல் விசாரணை, லாலு பிரசாத் யாதவிற்குத் தொடர்புடைய மாட்டு தீவின விசாரணை ஆகியவற்றில் ஜோகிந்தர் சிங் தீவிரமாக ஈடுபட்டதுதான் இந்த மாற்றத்திற்குக் காரணம்....
காங்கிரஸ் கட்சி, ஐக்கிய முன்னணியின் முதல் ஆட்சியைக் கவிழ்த்ததை விட, சீக்கிரமாக அதன் இரண்டாவது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டது. இப்போது சொல்லப்பட்டக் காரணம், ராஜீவ் காந்தி படுகொலை பற்றி ஜெயின் கமிஷன் தந்த இடைக்கால அறிக்கை.
ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து மூன்று மாதமான பின், அந்தக் குற்றச் செயலின் விரிவான சதியை ஆராய, 1991 ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் ஜஸ்டிஸ் மிலப் சந்த் ஜெயின் கமிஷனை நியமித்தது. ஜெயின் கமிஷன் 1997 ஆகஸ்ட் 28ஆம் தேதி, தனது 17 தொகுப்புகள் கொண்ட இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் 1991ல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த போது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் பதுங்கி வாழ அனுமதித்ததற்காக கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த இடைக்கால அறிக்கையின் சில பகுதிகள், சீதா ராம் கேசரியுடன் நல்ல உறவில் இல்லாத மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரால் ஒரு பத்திரிகைக்கு ரகசியமாகத் தரப்பட்டது. ஐக்கிய முன்னணி ஆளும் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆட்சியில் பங்கு பெற்றிருந்த மூன்று தி.மு.க. அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும்படி குஜ்ராலை காங்கிரஸ் கட்சி கோரியது. ஐக்கிய முன்னணி அந்தக் கோரிக்கைக்குப் பணிய மறுத்தது. நவம்பர் 28ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, குஜ்ரால் ஆட்சிக்கு, தந்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. தேசியமுன்னணி ஆட்சியைச் சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி ஒரு சாக்கு தேடிக்கொண்டிருந்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை வடிவில் அது இப்போது கிடைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது....
குஜ்ரால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொண்டது. குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன், பாராளுமன்ற மக்களவையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த உத்திரவிட்டார். 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது....
இந்திய ஜனநாயகத்தில் இந்தத்தேர்தல் கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று உணர முடிந்தது. எப்போதும், பாராளுமன்றத் தொகுதிகளை பிடிக்காத தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ.க மிகப்பெரிய வளர்ச்சி கண்டது....
கோவை குண்டுவெடிப்பு : டி.வி. நிருபர் பேட்டி எவ்வாறு என் உயிர் காத்தது?
1998ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்த தென்னிந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தேன். பல பயணங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 13ஆம் தேதி, சென்னையை அடைந்தேன். இரவு ஓய்விற்குப் பிறகு, மறுநாள் காலை கோவைக்கு செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். அங்கு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பொறியியல் நிறுவனங்களை திறப்பதற்காகவும், உள்ளூரில் நன்கு புகழ் பெற்ற பா.ஜ.க. வேட்பாளரான சி.பி. ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தேன்.
வர்த்தக விமான சேவை காலையில் இல்லாத நிலையில், எனது கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, கோவை சென்று அங்கு கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, அடுத்த விமானத்தில் சென்னை திரும்புவது என திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது எனது நீண்ட நாளைய அந்தரங்க செயலாளர் தீபக் சோப்ரா என்னிடம் வந்து, "தொலைக்காட்சி பேட்டிக்காக காத்திருக்கிறார்கள்' என்று கூறினார்.
அதற்கு நான் "இப்போது சாத்தியமல்ல; புறப்பட இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது' என்றேன். ஆனால் அவர் "சென்னையிலிருந்து வேறு விமானத்தில் கோவைக்குச் செல்வதற்காக ஏற்பாடு செய்வதாகவும், அங்கு திட்டமிட்ட நிகழ்ச்சிகள் பாதிக்காது' என்றும் கூற, நானும் பேட்டிக்கு ஒப்புக்கொண்டேன். மேலும் அவர் "ஈநாடு டி.வி. நிருபர், உங்களிடம் விமான நிலையத்தில் தேர்தல் பற்றி பேட்டி காண விரும்புகிறார்' என்று கூறினார். "ஈநாடு சேனலுக்கு பேட்டி கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்' என்றும் சோப்ரா கூறினார். ஈநாடு பத்திரிகையால் ஆரம்பிக்கப்பட்ட ஈ டி.வி. மிகக் குறுகிய காலத்தில் பிரபலமான தெலுங்கு சேனலாகும். சரி என்று நானும் ஒப்புக்கொண்டேன். நான் சென்னையிலிருந்து கோவை செல்ல இரண்டு மணி நேரம் தாமதமானது.
எங்களது விமானம் 40 நிமிட பயணத்திற்குப் பிறகு கோவையை அடைந்தது. அப்போது விமான நிலைய வளாகத்தில் எதையோ பறி கொடுத்தாற் போன்ற உணர்வைக் காண முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக வரவேற்பதற்கு தொண்டர்களும் அங்கு கூடியிருக்கவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் எங்கள் கட்சி பிரமுகர்கள் சிலர் என்னிடம் வந்தனர். "கூட்டம் நடக்க இருந்த இடம் உள்பட கோவை நகரில் ஆங்காங்கே குண்டு வெடித்துள்ளது. பலர் கொல்லப்பட்டு விட்டனர்' என்ற துக்ககரமான செய்தியைக் கூறினர்.
இந்தச் செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள எனது கட்சியினருடன் பேசினேன். அவர்கள் "நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த இடத்திலிருந்து நேரடியாக வருகிறோம். அங்கு பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். மேலும், நீங்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருவதாக இருந்த நேரத்தில் இது நடந்திருக்கிறது. நீங்கள் தாமதமாக வந்ததால் தப்பித்தீர்கள்' என்றனர். காவல் அதிகாரி "நகரம் முழுவதும் பயமும் பதட்டமுமாக இருக்கிறது. ஆகையால் நீங்கள் விமான நிலையத்தில் இருந்து உடனே சென்னைக்குத் திரும்ப வேண்டும்' என்றார்.
அவரிடம் "எனது பிரச்சாரக் கூட்டத்திற்காகக் கூடி இருந்தவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதும், காயம்பட்டவர்களை கண்டு தேற்றுவதும் எனது கடமை' என்றேன். 58 பேர் பலியானதால் நகரமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அரசாங்க மருத்துவமனையில் நான் கண்ட காட்சி, எனது இதயத்தை ரணமாக்கியது. பத்திரிகையாளர்களிடம், "தென்னிந்தியாவின் மிக மோசமான இந்த தீவிரவாத வெறி செயலை செய்தவர்கள் நாட்டின் எதிரிகள். அவர்கள் வெகு விரைவாக, கண்டுபிடிக்கப்பட வேண்டும்' என்றேன்.
நீதியின் சக்கரம் சுழல ஒன்பது வருடங்கள் ஆனது. யாரை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று விசாரித்த தமிழ்நாட்டின் முக்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையில், இஸ்லாமிய குழுவான அல்உம்மாவினால் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெளிவானது. 2007 ஆகஸ்டில் சிறப்பு நீதிமன்றம், பாஷா மற்றும் அவரது சகாக்கள் 35 பேர் "ஆபரேஷன் அல்லாஹு அக்பர்' என்ற பெயரில் அந்த தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று அறிவித்தது. எனினும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டார்.....
தீவிரவாதச் செயலில் ஈடுபட்டதற்கான தண்டனை குற்றவாளியாக மதானி, கோயம்புத்தூர் சிறையில் எட்டு வருடங்கள் இருந்தபோது, கேரளாவில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பின.
விடுதலை செய்யப்பட்ட பிறகு மதானி தன் கடந்த காலத்தைப் பற்றி கூறுகையில், "எப்படியிருப்பினும் மனிதாபிமானம்தான் அனைத்திலும் மேலானது என்று சிறையில் தெரிந்து கொண்டேன். நாங்கள் ஒருபோதும் ஹிந்துக்களையோ, அவர்களது உடமைகளையோ, அவர்களது கடவுளையோ தாக்க நினைத்ததில்லை. ஆனால், நாங்கள் தாக்க நினைப்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் அத்வானி போன்றவர்களைத்தான்' என்றார்.
கோயம்புத்தூர் தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நீதி வழங்கப்பட்டதா என்று தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் எனது சொற்பொழிவுகளில் கோவை குண்டுவெடிப்பு பற்றி குறிப்பிடும்போது, "ஈ டி.வி. நிருபரால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்' என்று கூறுவேன். 1998, பிப்ரவரி 14ஆம் நாள் ஈ டி.வி. நிருபர் என்னை பேட்டி கண்டிரா விட்டால் என் நிலைமை என்னவாகி இருக்கும் என்பது எனக்குப் புலப்படவில்லை' என்பேன்.....
பா.ஜ.க., அரசியல் வரைபடத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தது. 1998ஆம் ஆண்டு தேர்தலில், மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. 384 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களைக் கைப்பற்றியது. அதற்கு மாறாக, 462 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 141 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஐக்கிய முன்னணியின் பலம் 183லிருந்து 86ஆக குறைந்தது....
பா.ஜ.க. மத்தியில் ஆட்சியை அமைக்க நினைத்தபோது, பல கட்சிகள் தங்களது ஆதரவைத் தர முன்வந்தன....
பா.ஜ.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. என்றாலும், சில எதிர்க் கட்சிகள், பா.ஜ.க. ஆட்சி அமைவதைத் தடுக்க முயற்சி செய்தன. மத்தியில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றன. "ஐக்கிய முன்னணி மற்றும் காங்கிரஸ் அரசுதான் மத்தியில் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்' என்று, பதவி விலகும் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் கூறினார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் "காங்கிரஸும், ஐக்கிய முன்னணியும் புரிந்து கொண்டு, ஒற்றுமையாக இருப்பதால், குடியரசுத்தலைவர் அவர்களை (பா.ஜ.க.) முதலாவதாக ஆட்சி அமைக்க அழைக்கமாட்டார்' என்றனர்.
சோனியா காந்தி குடியரசுத்தலைவரைச் சந்தித்து, "எங்களிடம் ஆட்சி அமைக்கும் அளவிற்குப் பலம் இல்லை. ஆகவே, நாங்கள் புது அரசு அமைக்க உரிமை கோரப்போவது இல்லை' என்று கூறினார். தேவையான உறுப்பினர் எண்ணிக்கையை அவர்களால் திரட்ட முடியவில்லை என்பது தெளிவானது.
அரசு அமைக்க அடல்ஜியை அழைப்பதற்கு, குடியரசுத்தலைவர் நாராயணன் பத்து நாட்களை எடுத்துக்கொண்டார். அது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்தது. பிரதமர் நியமனத்தில், குறிப்பாக தொங்கு பாராளுமன்றம் அமைந்த நிலையில் அவர் புதிய வழிமுறையைக் கொண்டு வந்தார். தொங்கு பாராளுமன்றம் அமையும் போது, தனிப்பெரும் கட்சியின் தலைவரை, அல்லது தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணியின் தலைவரை அழைக்க வேண்டும். நாராயணனுக்கு முன் இருந்த குடியரசுத்தலைவர்களான ஆர். வெங்கட்ராமனும், சங்கர் தயாள் சர்மாவும் அப்படித்தான் செயல்பட்டனர். ஆட்சி அமைத்த பிறகு, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றனர். ஆனால், நாராயணன் "கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.
பிரபலமான பொம்மை வழக்கில் 1994ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் தனிப்பெருங்கட்சியின், அல்லது தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணியின் தலைவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றன. ஆனால், "செயல்படும்' குடியரசுத்தலைவர் என்று பெயர் பெற்ற நாராயணன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தைக் கேட்டார். இந்த இடைவெளிக் காலம் எங்கள் கூட்டணியை உடைக்கும் முயற்சியை காங்கிரஸ் மேற்கொள்ள வாய்ப்பளித்தது. ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை. வாஜ்பாய் மார்ச் மாதம் 19ஆம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
****
No comments:
Post a Comment