பங்களாதேஷ் உதயம் – எல்.கே. அத்வானி
என் தேசம் என் வாழ்க்கை 10
தெற்காசியாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டதாக இருக்கப் போகிறது – என்ற முன்னறிவிப்பு போல 1970கள் துவங்கியது. பக்கத்து நாடான பாகிஸ்தானில் தேர்தல் தகராறாகத் துவங்கிய பிரச்சனை, தெற்காசியாவின் பூகோள அரசியல் நிகழ்வாக மாற்றம் கொண்டது.
...1947ல் பாகிஸ்தான் உருவானது. வரலாற்றைத் திரித்து உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், பூகோள ரீதியில் கேலிக்கூத்தாக அமைந்தது. மேற்குப் பாகிஸ்தானும், கிழக்குப் பாகிஸ்தானும் 1200 மைல் இடைவெளியுடன் தனித்தனியாக இருந்தன. இரண்டு பாகிஸ்தான்களுக்கும் இடையில் இந்தியா!
இந்த நிலையில், மேற்குப் பாகிஸ்தானில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் – ஒரே நாடு என்ற நினைப்பைத் தாக்கித் தகர்ப்பது போல – கிழக்குப் பாகிஸ்தான் மக்களின், நியாயமான எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்தும், நசுக்கியும் வந்தன. 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அசெம்பிளிக்கு நடந்தத் தேர்தலில், மேற்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றதைவிட, அதிக வெற்றிகளை கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின், அவாமி லீக் கட்சி பெற்றது. ஆனால், ராணுவ சர்வாதிகாரியாக இருந்த ஜெனரல் யாகியா கான், முஜிபுர் ரஹ்மானை ஆட்சி அமைக்க அனுமதி மறுத்துவிட்டார். அதனால், மோதல் தவிர்க்க முடியாத உச்சகட்டத்தை அடைந்தது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சி முஜிபுர் ரஹ்மானைச் சிறையில் அடைத்தது. கிழக்குப் பாகிஸ்தானில் கிளர்ந்து எழுந்த ஜனநாயக ரீதியான போராட்டத்தை, வன்முறை கொண்டு நசுக்கியது. தூரத்தில் இருந்த தனது கிழக்குப் பாதி நாட்டின் மீது, ஒரு காலனி ஆதிக்க சக்தி போலத் தாக்குதல் நடத்தி, மனித நாகரீகமற்ற போக்கை அது உறுதி செய்தது. வீடுகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. கிணறுகளில் விஷம் கலக்கப்பட்டது. பயிர்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. அதிர்ச்சியூட்டும் வகையில் போர்க்காலக் குற்றத்தின் ஒரு பகுதியாக, ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
நன்றாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் கூற்றுப்படி, ஜெனரல் யாஹியா கான், தனது ராணுவ அதிகாரியிடம், ""கிழக்குப் பாகிஸ்தானில் உள்ளவர்களில் முப்பது லட்சம் பேர்களைக் கொன்று விடுங்கள்; மிச்சம் இருப்பவர்கள் நமக்கு அடங்கி வாழ்வார்கள்'' என்று கூறியிருக்கிறார். அந்த ஆணை நிறைவேற்றப்பட்டது. சுமார் முப்பது லட்சம் பேர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுடன், 1947ல் பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த இருதேசக் கோட்பாடும் கொல்லப்பட்டது என்பதே உண்மை...
கிழக்கு வங்கத்தில், பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்திய கொடுமைகளால், ஏராளமான மக்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்தது, இந்த விவகாரத்தின் மற்றொரு பரிமாணம். அப்படி வந்தவர்களின் எண்ணிக்கை 1971 நவம்பர் மாதத்தில் 1.5 கோடியைத் தொட்டது. சுமார் ஒரு லட்சம் பேரைக் கொண்ட "முக்தி பாஹிணி' கொரில்லா படையினர் – பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து வீரம் நிறைந்த போரை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவர்கள் ராணுவ நிபுணத்துவத்தில் பின்தங்கி இருந்தாலும், மனபலம் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். உலகெங்கும் சுதந்திரத்தை விரும்புகிற மக்களிடம் – குறிப்பாக இந்திய மக்களிடமிருந்து தார்மீக ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் அண்டை நாட்டில் மனித இனத்திற்கு எதிராகப் பெருகி வரும் கொடுமைகளை – அதனால் இந்தியாவிற்கு நேரடியாக ஏற்பட்ட பாதிப்பை, பெரிய நாடுகளின் ஆட்சியாளர்கள் சரியாகப் புரிந்துகொள்ளும்படி செய்தார். அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தன...
...போர் முடிந்தது. போர் நடந்த சமயத்தில் காட்டிய உறுதிக்காக, வீரம் மிகுந்த தலைமைப் பண்புக்காக – பிரதமர் இந்திரா காந்தி வெகுவாகப் புகழப்பட்டார். அந்தப் புகழுக்கு அவர் தகுதியானவராக இருந்தார். ஜனசங்கத்தைச் சேர்ந்த நாங்கள், தேசியப் பிரச்சனைகளில், குறிப்பாக, தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்படி பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல. 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் முழு மனதோடு அரசாங்கத்தை ஆதரித்தோம். தேசத்தின் பெருமை மிகுந்த அந்தத் தருணத்தில், பிரதமரைப் பாராட்டுவதில் எங்கள் கட்சி பின்தங்கி இருக்கவில்லை. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் அடல்ஜி, இந்திரா காந்தியை மனம் திறந்து பாராட்டினார்.
1971ஆம் ஆண்டு போரில் கிடைத்த வெற்றிக்கு இந்திரா காந்தியைப் பாராட்டிப் பேசும் போது, அடல்ஜி, அவரை துர்கா தேவியுடன் ஒப்பிட்டு "துர்கா' என்று புகழ்ந்ததாகப் பரவலான ஒரு கருத்து பரவியது. அது இன்று வரை நீடிக்கவும் செய்கிறது. ஆனால், எனது நினைவுக்கு எட்டிய வரையில் அவர் அந்த வார்த்தையை ஒரு போதும் பயன்படுத்தவில்லை. உண்மையில் என்ன நிகழ்ந்தது என்றால், 1971ஆம் ஆண்டு காஜியாபாத்தில் நடந்த ஜனசங்க தேசிய மாநாட்டில், செயற்குழு உறுப்பினர் பி.ஜி. தேஷ்பாண்டே– இவர் இந்திரா காந்தியின் தீவிர அபிமானி– பேசும்போது, ""இந்திராஜி, நாட்டை தைரியத்துடன் வழி நடத்துங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பங்களாதேஷ் விடுதலை பெற நீங்கள் உதவினால், எதிர்கால சந்ததிகள் உங்களை "துர்கா'வாக நினைவில் கொள்ளும்'' என்று குறிப்பிட்டார்.
சிம்லா உடன்படிக்கையும் 1971ஆம் வருடம் போர் தந்த படிப்பினைகளும்
1972ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திரா காந்தியும், ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் (ஜெனரல் யாகியா கானின் விலகுதலுக்குப் பிறகு, புட்டோ பாகிஸ்தான் பிரதமராக ஆகிவிட்டிருந்தார்) இருநாடுகளுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்காக, சிம்லாவில் சந்தித்தார்கள். தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏற்பட்ட படிப்பினையால் ஜனசங்கம், சிம்லாவில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அரசாங்கத்திற்கு நினைவூட்ட அக்கறை எடுத்துக்கொண்டது...
ஜனசங்கக் கட்சியின் தலைவர் என்ற முறையில், அடல்ஜி, சிம்லாவில் இந்திரா காந்தியைச் சந்தித்தார். காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நிரந்தரமான உடன்பாட்டை அடையாமல், போர்க் கைதிகளை விடுதலை செய்வதையோ, இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுவதையோ ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தினார். வருத்தம் தரும் விதத்தில், சிம்லா ஒப்பந்தமும் இன்னொரு துரோகமாகவே மாறியது. ராணுவக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், இந்திய ராணுவம் கைப்பற்றி இருந்த ஒன்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைத் திரும்பத் தரவும், ராணுவக் குற்றவாளிகள் அனைவரையும் மன்னிக்கவும் இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான், பதிலுக்கு ஏற்றுக்கொண்ட அம்சங்கள் சொற்பமானவை; பலனற்றவை, பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் அதனால் மீற முடிபவை!....
அப்போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நான், ""இந்திரா காந்தி, வெற்று வார்த்தைகளின் குவியலுக்காக ஒரு பொன்னான வாய்ப்பை வீணடித்து விட்டார்'' என்று குறிப்பிட்டேன்....
போர் முடிந்த சிறிது காலத்திற்குள், 1972 மார்ச் மாதத்தில் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 1952ஆம் ஆண்டில் நடந்த முதல் பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு, இப்போதுதான் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல்கள் பாராளுமன்றத் தேர்தலுடன் நடத்தப்படாமல், தனியே நடத்தப்பட்டன. போரினால் ஏற்பட்ட வெற்றியின் அலையால் காங்கிரஸ் கட்சி, பெரும்பாலான மாநிலங்களிலும் பெரிய வெற்றிகளைப் பெற்றது.
ஜனசங்கத்தின் தேர்தல் முடிவுகள் மோசமாக அமைந்தன. கட்சியின் தலைவர் என்ற முறையில் அடல்ஜி தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1972ஆம் ஆண்டு மே மாதத்தில், பாகல்பூரில் நடந்த தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்காமல், கட்சியின் மூத்தத் துணைத் தலைவர் பாய் மஹாவீரைத் தலைமை ஏற்கச் சொன்னார். ""நான் இப்படிச் செய்வதற்குக் காரணம், ஒளிவு மறைவற்ற விவாதம் நடைபெறவும், பிரதிநிதிகள் சுதந்திரமாகத் தலைமையை விமர்சிக்கவும்தான்'' என்றார் அடல்ஜி!
எனினும் அடல்ஜியின் மனதில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தீன்தயாள்ஜியின் மறைவுக்குப் பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகள் அவர் தலைவராகப் பணிபுரிந்துவிட்டார். புதிய தலைவரைத் தேடும் முயற்சி நீண்டு கொண்டிருந்தது. அடல்ஜி தன்னிடமிருந்து பொறுப்புகளை ஏற்கும்படி, என்னை வலியுறுத்துவதில் வந்து அது முடிந்தது.
மீண்டும் ஒரு முறை, என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வந்தது!
No comments:
Post a Comment